கரூர் சம்பவம்.. என்னை மன்னித்துவிடுங்கள்.. பாதிக்கப்பட்டவர்களிடம் கண்ணீர் விட்டு அழுத விஜய்!
சென்னை: கரூர் கடந்த மாதம் செப்டம்பர் 27ந் தேதி வேலுசாமிபுரத்தில் நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த இந்தியவை பேரதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த சம்பவம் நடந்து இன்றோடு ஒரு மாதமாகி உள்ள நிலையில், கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து, என்னை மன்னித்து விடுங்கள் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக உங்களுடன் நான் இருப்பேன் என்று உறுதி அளித்துள்ளார்.
கரூர் துயர சம்பவத்தை தொடர்ந்து விஜய் செப்டம்பர் 30ந் தேதி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். சம்பவம் நடந்து மூன்று நாள் கழித்து விஜய் வீடியோ வெளியிட்டது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக, கரூரில் உள்ள மண்டபத்தில், பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க திட்டமிடப்பட்டது. ஆனால், கரூரில் மண்டபங்கள் கிடைக்க சிக்கல் நீடித்ததால், உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து சந்திக்க முடிவு செய்யப்பட்டது.

மன்னிப்பு கேட்ட விஜய்: இதற்காக, பாதிக்கப்பட்டோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தவெக நிர்வாகிகள் பேசியுள்ளனர். முதலில் சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு அவர்களை அழைத்து வந்து சந்திக்க திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது அந்த திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு மாமல்லபுரத்தில் உள்ள 'பார் பாயிண்ட்ஸ்' ஓட்டலில் 41 பேரின் குடும்பத்தினரை சந்திக்க விஜய் முடிவு செய்துள்ளதாக தவெக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக, நேற்று இரவு 33 குடும்பத்தினர் நேற்று சென்னை வந்தனர் அவர்களை தவெக மாவட்ட நிர்வாகிகள் மாமல்லபுரத்துக்கு அழைத்தனர். இதையடுத்து, மேலும் நான்கு குடும்பத்தினர் இன்று காலை சென்னை வந்தனர். மொத்தம் 37 குடும்பத்தினர் 'பார் பாயிண்ட்ஸ்' ஓட்டலில் தங்கவைக்கப்பட்டனர்.
கண்ணீர் மல்க பேசிய விஜய்: இதையடுத்து, இன்று உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலரஞ்சலி செலுத்திவிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை தனித்தனியாக சந்தித்து கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும், சென்னை அழைத்து வந்ததற்கு என்னை மன்னித்து விடுங்கள். நிச்சயம் கரூர் வந்து உங்களை சந்திப்பேன். வாழ்நாள் வரை நான், உங்கள் குடும்பத்தின் ஒருவனாக உங்களுடன் இருப்பேன். உங்களுக்கு தேவையான உதவிகளை நான் செய்து தருவேன், வேலைவாய்ப்பு, திருமணம், கல்வி என அனைத்தையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று விஜய் உறுதி அளித்துள்ளார். அவரிடம் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவை பெற்றுக்கொண்ட விஜய் அனைத்து கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படும் என விஜய் உறுதி அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











