ரூ.15 ஆயிரம் கேட்டோம் 2 நிமிசத்துல ரூ. 25 ஆயிரம் அனுப்புனாங்க.. விஜய் செய்த உதவிகளை அடுக்கிய மாணவன்!
சென்னை: தமிழ் நாட்டில் ஒளிபரப்பாகிவரும் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மூலம் பலரது வாழ்க்கை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒரு நல்ல நிலைக்கு உயர்ந்துள்ளது. இதற்கு பல எடுத்துக்காட்டுகளை கூறிக்கொண்டே போகலாம். அதேபோல் நீயா நானா போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, வேலைக்குச் சென்று கொண்டே படிக்கும் மாணவனின் குடும்ப சூழலைப் புரிந்து கொண்ட நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மாணவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உதவிகளைச் செய்துள்ளார். இது தொடர்பாக அந்த மாணவனும் அவரது தயாரும் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளனர்.
விஜய் டீவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியின் நேற்றைய அதாவது ஆகஸ்ட் 25ஆம் தேதி எப்பிசோடில், கடந்த 23ஆம் தேதி வெளியான வாழை படத்தினை மையமாகக் கொண்டு, படித்துக் கொண்டே வேலை செய்யும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள், குடும்பதினர் கலந்துரையாடும் நிகழ்ச்சி ஒளிபரப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக வாழை படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மாணவர்களில் பலரது தினசரி வாழ்க்கை என்பது, பலரது மனதையும் திடுக்கிடச் செய்யும் அளவிற்கும் கண்ணீரையே வரவழைக்கும் அளவிற்கும் இருந்தது. பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் மாணவ- மாணவியர் ஒவ்வொருவரும் தினமும் என்னென்ன வேலை செய்கின்றனர். எவ்வளவு மணி நேரம் வேலை செய்கின்றனர் என்பது குறித்தும் இதனால் அவர்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் பேசினர்.
மூட்டை தூக்கும் மாணவன்: அதில் பேசிய ஒரு மாணவன், நான் மூட்டை தூக்கப் போகின்றேன். ஒவ்வொரு மூட்டையும் 10 கிலோவுக்கு மேல் இருக்கும். நான் ஒவ்வொரு மூட்டையாகத்தான் தூக்குவேன். இதனால் எனக்கு தோல்பட்டை வலிக்கும். ஆனால் நான் அந்த வலியை வெளியே சொல்ல மாட்டேன். இந்த மாணவர் பேசும்போது ஒரு பக்கம் சாய்ந்ததைப் போல் பேசினார். இதனைக் கவனித்த நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத், ’ஒரு மாதிரி சாய்ந்துகொண்டே பேசுகின்றீர்களே, உங்களுக்கு அந்த வலி இருக்கின்றதா? எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு அந்த மாணவன், ஆமாம் சார் எனக்கு இந்த இடத்துல எப்பவுமே வலி இருக்கும் என தனது கழுத்தையும் தோல்பட்டையையும் தொட்டுக் காட்டினார். மேலும் பேசுகையில், நான் மாலை 5 மணிக்கு வேலைக்குப் போவேன். 10 மணி வரைக்கும் வேலை இருக்கும்.
கோபிநாத் கேள்வியும் மாணவனின் பதிலும்: 10 மணிக்கு வேலை முடுச்சு பஸ்ஸில் வீட்டுக்குப் போவேன். சில நேரங்களில் பஸ்ஸை விட்டுவிடுவேன். அப்போதெல்லாம் நான், நடந்தே வீட்டுக்குப் போவேன் எனக் கூறினார். நீங்கள் நடந்து போகும்போது உங்கள் மனதில் என்னவெல்லாம் தோன்றும் என கோபிநாத் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த மாணவன், எங்க அம்மாவ நல்லா பாத்துக்கனும். நல்ல வீடு கட்டி உட்கார வெக்கனும். நல்லா படுச்சு வேலைக்கு போகனும். எங்க அப்பா படுற கஷ்டத்துல அவருக்கு நான் சப்போர்ட்டா இருக்கனும். இதுபோல யோசுச்சுட்டே வீட்டுக்கு நடந்து போயிடுவேன்.
பெட் இல்ல: எங்கவீட்டுல பெட் இல்லை. எங்க அம்மா தரையிலதான் படுக்கறாங்க. அப்போதெல்லாம் எனக்கு பெட் வாங்கி அம்மாவை அதில் படுக்கச் சொல்லவேண்டும் எனத் தோன்றும் எனக் கூறீனார். இந்த மாணவனின் பேச்சு, பலரையும் கண்கலங்க வைத்தது. இதை கவனித்துக் கொண்டு இருந்த அவரது அம்மாவும் அழுதுகொண்டே, எனக்கு எலும்பு தேய்மானம் இருப்பதால், என்னால் வேலைக்கு போகமுடியவில்லை எனக் கூறினார்.

2 நிமிடத்தில்: இந்த வீடியோ வைரல் ஆனதும். தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மாணவனின் வீட்டிற்குச் சென்று அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தனர். இது தொடர்பான செய்திகள் வெளியானது. இந்நிலையில், அந்த மாணவனும் அவரது தாயாரும் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பேசுகையில், " நாங்கள் பேசியது நீயா நானாவில் ஒளிபரப்பானதும், விஜய் சாரின் செயலாளர் ஆனந்த் சார், எங்களிடம் நேரடியாக போன் போட்டு பேசினார். அப்போது என்ன வேண்டும் எனக் கேட்டார். நான், எனது அம்மாவுக்கு பழக்கடை வைத்துக் கொடுத்தால் நான் வேலைக்குப் போகாமல், பள்ளிக்குச் செல்வேன் எனக் கூறினேன். மேலும் பழக்கடை வைக்க ரூபாய் 15 ஆயிரம் கொடுத்தால் போதும் என்றேன். நான் சொன்ன இரண்டு நிமிடத்தில் ரூபாய் 25 ஆயிரம் அனுப்பினார்கள்.
மகிழ்ச்சி: நிகழ்ச்சியில் எனது மகன் பெட் வேண்டும் எனக் கேட்டார். வீட்டிற்கு வந்த தவெக நிர்வாகிகள் உடனே வாங்கிக் கொடுத்தனர். என் மகன் பேசியதை விஜய் சார் பார்ப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் நீயா நானாவில் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்தோம். எங்களையெல்லாம் யார் பார்ப்பார்கள் என நினைத்துக் கொண்டு இருந்தோம். மேலும் தவெக கட்சியின் கொடியேற்றும் அளவிற்கு எனது மகனுக்கு அவர்கள் அங்கீகாரம் கொடுத்துள்ளது என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











