Vijay: கல்வி விருதுகள் விழா.. மாணவிக்கு வைரக் கம்மலை பரிசாக வழங்கிய விஜய்.. மேடையிலேயே நெகிழ்ச்சி!
மாமல்லபுரம்: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ - மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இந்த கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவை விஜய், அரசியலில் களமிறங்குவதற்கு முன்னர் இருந்து செய்து வருகிறார். இந்நிலையில் இம்முறை மாநில அளவில் முதல் இடத்தைப் பெற்ற மாணவிகளுக்கு வைரக் கம்மல் வழங்கியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்று வரும் இந்த கல்வி விருது வழங்கும் விழாவில் இன்று அதாவது மே மாதம் 30ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 16 மாவட்டங்களில் இருந்து சுமார் 80க்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் இருந்து மாணவ - மாணவியர்கள் அவர்களின் பெற்றோர்களுடன் வரவேற்கப்பட்டு, கௌரவிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் வரும் ஜூன் மாதம் 3ஆம் தேதி மற்றும் ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் விஜய் மாணவர்களை சந்தித்து கல்வி விருதுகளை வழங்கவுள்ளார்.

வைரக் கம்மல்: இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் கல்வி விருது விழாவில் மாநில அளவில் 12 ஆம் வகுப்புத் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவிகளான ஓவியாஞ்சலி மற்றும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி சோஃபியாவுக்கும் பாராட்டுச் சான்றிதழ், கல்வி உதவித்தொகை மற்றும் வைரக் கம்மல் பரிசாக வழங்கினார். மாணவிகள் இருவரும் தங்கள்து பெற்றோர்கள் மற்றும் சகோதருடன் இணைந்து மிகவும் நெகிழ்ச்சியாக இவற்றைப் பெற்றுக் கொண்டார்கள். இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அவர்கள் இருவரும் 600க்கு 599 மதிப்பெண்கள் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் பேச்சு: இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் விஜய் பேசுகையில், ஒரே விஷயத்தை மட்டுமே படித்து அதனால் உங்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்கிக் கொள்ளாதீர்கள். நீட் மட்டும் தான் உலகமா? இந்த உலகத்தில் பல விஷயங்கள் இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஓட்டுக்கு பணம் வாங்கும் கலாச்சாரம் குறித்து பேசி இருந்தேன். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் வண்டி வண்டியாக உங்களிடம் இருந்து கொள்ளையடித்த பணத்தை கொண்டு வந்து கொட்டுவார்கள். இதுவரை ஊழல் செய்யாதவர்களை நீங்கள் தேர்வு செய்யுங்கள். மாணவர்களாகிய நீங்கள் சாதி, மதம் போன்றவற்றுக்குள் அகப்பட்டுவிடாதீர்கள்" என்று பேசினார்.


Click it and Unblock the Notifications











