Vijay: நான்தான்டா லியோ.. கட்சி பொதுக்கூட்டத்தில் பஞ்ச் டயலாக்.. இதுதான் விஜய்யின் தீவிர அரசியலா?
சென்னை: நடிகர் விஜய் தனது கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தை கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கினார். கட்சி தொடங்கி ஒரு வருடத்திற்கு மேல் ஆனாலும் விஜய் இன்னும் தீவிர அரசியலில் களமிறங்கவில்லை. என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து முன் வைக்கப்படுகிறது. இப்படியான நிலையில், தவெகவின் முதல் பொதுக்கூட்டத்தில் அரசியல் கட்சிகளின் பெயர்களை நேரடியாக குறிப்பிட்டும், பிரதமர் மற்றும் முதலமைச்சரின் பெயர்களை நேரடியாக குறிப்பிட்டு பேசினார். இது தவெகவினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருந்தாலும் அரசியல் தளத்தில் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் பேசும் போது, எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் தமிழ்நாடு அரசியல் களம் மிகவும் வித்தியாசமான தேர்தலைச் சந்திக்க உள்ளது. தேர்தல் களத்தில் திமுக-வா அல்லது தவெக-வா என்ற நிலைதான் இருக்கும் எனக் கூறினார். இது மட்டும் இல்லாமல், தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே? எனவும், பிரதமர் மோடி ஜி எனவும் இருவரது பெயர்களையும் முதல் முறையாக தனது கட்சி மேடையில் கூறினார். அதேபோல் திமுக, பாஜக கட்சிகளின் பெயர்களை சொல்லி நேரடியாக விமர்சித்தார்.
இதற்கு முன்னர் நடைபெற்ற கட்சி மாநாட்டில், கட்சி ஆலோசனை கூட்டங்களிலும் திமுக பெயரையோ, பாஜக பெயரையோ நேரடியாக கூறவில்லை. ஆனால் இம்முறை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரை நேரடியாக கூற வேண்டும் என கட்சி நிர்வாகிகள் ஆரவாரம் செய்து, முதலமைச்சர் பெயரையும், பிரதமர் பெயரையும் நேரடியாக குறிப்பிட்டு விமர்சிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள்.

திமுக: இப்படி இருக்கும்போது, இதைக் கேட்டதும் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே, பெயரை மட்டும் வீராப்பாக சொன்னால் போதாது அவர்களே, ஆட்சியும் அப்படி இருக்க வேண்டும் என விமர்சிக்கத் தொடங்கினார். ஒரு கட்சித் தலைவராக நான் எனது கட்சி நிர்வாகிகளை சந்திக்கவும், ஒரு அரசியல் கட்சித் தலைவராக என் நாட்டு மக்களைச் சந்திக்கவும் தடை விதிக்கிறீர்கள். அந்த தடையை மீறி மக்களைச் சந்திக்க தெரியாமல் இல்லை. ஆனால் சட்டத்தை மீற கூடாது என்பதற்காக நான் மக்களைச் சென்று சந்திக்கவில்லை. அணைபோட்டு ஆற்றை வேண்டுமானால் தடுக்கலாம். ஆனால் காற்றை தடுக்க முடியாது. அப்படி தடுக்க நினைத்தால் அந்த காற்று சூறாவளியாக மாறி சக்திமிக்க புயலாக மாறிவிடும்.

பாஜக: மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக பாசிச ஆட்சி செய்கிறார்கள் என்றால், நீங்கள் மட்டும் என்ன செய்கிறீர்கள்? நீங்களும் பாசிச ஆட்சியை தானே, செய்து கொண்டு இருக்கிறீர்கள். உங்கள் பெயரைச் சொல்ல எங்களுக்கு பயம் எல்லாம் எதுவும் கிடையாது. நான் ஒரு படத்தில் நடித்திருந்தேன். அந்த படத்தில் ஒரு டயலாக் பேசியிருந்தேன், லியோவ பார்க்கனும், லியோவ பார்க்கனும், லியோவ பார்க்கனும் என்று பேசினார். விஜய் இவ்வாறு பேசும்போது அவையில் இருந்த தவெக நிர்வாகிகள் ஆரவாரம் செய்தனர்.
பெண் பாதுகாப்பு: தொடர்ந்து பேசிய விஜய், திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். அதிலும் குறிப்பாக சட்ட ஒழுங்கு சரியில்லை என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து முன் வைத்துக் கொண்டு இருந்தார். மேலும் தமிழ்நாட்டில் தவெக ஆட்சிக்கு வரும்போது, பெண்களுக்கு 100 சதவீதம் பாதுகாப்பு அளிக்கப்படும். சட்டம் - ஒழுங்கு முறையாக மிகவும் கண்டிப்புடன் கடைபிடிப்போம். கல்வி, சுகாதாரம் மற்றும் மருத்துவம் என அனைத்திலும் கவனம் செலுத்துவோம். இவை அனைவருக்கும் எளிமையாக கிடைக்க வழி செய்வோம். அரசு ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், ஆசிரியர்கள், மின்வாரிய ஊழியர்கள் என அனைத்து தொழிலாளர்கள் பக்கமும் நாம் நிற்போம்.

கொள்கைகள்: தமிழ்நாடு விவசாய மண், இயற்கை வளங்கள் நிறைந்த மண். அதனை அழிக்கும் வகையில் எந்த திட்டத்தை செயல்படுத்தினாலும் அதை நாங்கள் எதிர்க்கவே செய்வோம். பெரியாரின் சமூக நீதி, காமராஜரின் நேர்மையான நிர்வாகம், அம்பேத்கரின் அனைவருக்கும் சமூக நீதி, அனைவருக்கும் சம வாய்ப்பு, வேலு நாச்சியாரின் சமூக நல்லிணக்கம், அஞ்சலை அம்மாளின் இயற்கை வளங்களை காக்கும் போராட்ட குணம் என ஐந்து கொள்கைகளைக் கொண்ட தலைவர்களை கட்சியின் கொள்கை தலைவர்களாக கொண்டுள்ளோம்.
களம்: கட்சி தோழர்களுக்கு ஒன்று கூறுகிறேன், தமிழ்நாட்டின் அனைத்து ஊர்களுக்கும், அனைத்து வீடுகளுக்கும் செல்லுங்கள். அவர்களுக்கு உள்ள பிரச்னைகளை சரி செய்ய, அதற்கு தீர்வு காண முயற்சி செய்யுங்கள். அப்படி முயற்சி செய்துவிட்டு நிமிர்ந்து பார்த்தால், அந்த வீட்டின் மேல், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி பறக்கும். 2026 தேர்தலில் தமிழக வெற்றிக் கழகமா? அல்லது திராவிட முன்னேற்றக் கழகமா என்றுதான் களம் இருக்கும். நம்பிக்கையோடு இருங்கள், நல்லதே நடக்கும் என பேசி முடித்தார்.

சாதி: விஜய்யின் இந்த பேச்சில் இருந்து தான் அவர் மீதான விமர்சனங்களே முன் வைக்கப்பட்டு வருகிறது. அதாவது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்னை மட்டும் இருக்கிறது, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, திமுக பாசிச ஆட்சியை நடத்துகிறது எனக் கூறினாலும், தமிழ்நாட்டில் இதுமட்டும்தான் பிரச்னையாக உள்ளதா என்ற கேள்வி முன் வைக்கப்படுகிறது. அதாவது, தமிழ்நாட்டில் நடக்கும் சாதி ஆணவ படுகொலைகள், வன்கொடுமைகள் குறித்து விஜய் எதுவும் வாய் திறக்க வில்லை. சாதி ஒழிப்பு குறித்து வாய் திறக்கவே இல்லை.
பெயரளவுக்கு: சமூக நீதி என்ற வார்த்தையை கொள்கையாக திமுகவும் தான் பயன்படுத்துகிறது, அம்பேத்கர் புகைப்படத்தை தமிழ்நாட்டில் பல அரசியல் கட்சிகள் பயன்படுத்துகிறது. அந்த கட்சிகளில் வெகு சில கட்சிகள் மட்டுமே சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராகவும், சாதி வன்கொடுமைகளுக்கு எதிராக களமாடுகிறது. மற்ற கட்சிகள் அனைத்தும் பெயரளவில் மட்டுமே அம்பேத்கரையும் பெரியாரையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.விஜய்யின் பேச்சும் அப்படித்தான் உள்ளது என அரசியல் தளத்தில் விமர்சனம் முன் வைக்கப்படுகிறது.

தீவிர அரசியல்: விஜய் பேச்சில், சாதி வன்கொடுமைகளுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட இல்லை என்பது அரசியல் தளத்தில் விவாதிக்கப்படுகிறது. மேலும் வாக்கு அரசியலில் களமிறங்கிய பின்னர் மற்ற கட்சிகளை போலத்தான் விஜய்யின் பேச்சு உள்ளது என விமர்சனத்தை முன் வைத்து வருகிறார்கள். மேலும் அம்பேத்கர் பாதைதான் தனது அரசியல் பாதை என கூறும் ஆதவ் அர்ஜுனா போன்றவர்கள் கட்சியில் பொறுப்பாளர்களாக இருந்தும், கட்சித் தலைவரான விஜய் சாதி ஆணவ வன்கொடுமைகளுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசாததால், இதுதான் விஜய்யின் தீவிர அரசியலா என்ற கேள்வி மேலோங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications











