Sorry எல்லாம் வேண்டாம் CM சார்.. நீதி வேண்டும்.. கட்சித் தலைவராக விஜய்யின் முதல் போராட்டமே அஜித்துக்காக!
சென்னை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் காவல் துறை விசாரணையின்போது தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைக் கண்டித்து, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் 2025 ஜூலை 13 அன்று சென்னை சிவானந்தா சாலையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்று பேசியது பலரது கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக விஜய் உள்ளிட்ட தவெகவினர் கையில் ஏந்தி இருந்த பதாகையில், "Sorry வேண்டாம், நீதி வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அஜித்குமாரின் மரணத்திற்கு நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், உயர்நீதிமன்றக் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட வேண்டும் எனவும் விஜய் வலியுறுத்தினார். கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்தில் காவல் நிலையங்களில் 24 பேர் உயிரிழந்திருப்பதாக உயர்நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ள நிலையில், இது தொடர்பாக தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று விஜய் கோரிக்கை வைத்தார். அஜித்குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கியதாகவும், மேலும் காவல் விசாரணையில் உயிரிழந்த 18 குடும்பங்களுக்கு தலா ரூ.25,000 நிதியுதவி வழங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போராட்டக்களத்தில் விஜய்: இந்த ஆர்ப்பாட்டம் தவெகவின் முதல் மாபெரும் போராட்டமாக கருதப்படுகிறது, இதில் விஜய் முதன்முறையாக பங்கேற்றார். ஆர்ப்பாட்டத்திற்கு முதலில் காவல்துறை அனுமதி மறுத்திருந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தவெக வழக்கு தொடர்ந்து அனுமதி பெற்றது. இந்தப் போராட்டத்தில் 10,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாகவும், 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் உள்ளன.
நிதி உதவி: கடந்த 4 ஆண்டுகளில் காவல் விசாரணையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறியதை வலியுறுத்தி, அவர்களுக்கு நீதி கிடைக்க தவெக தொடர்ந்து போராடும் என ஏற்ஜனவே உறுதியளித்திருந்தார். ஜூலை 2, 2025 அன்று விஜய் அஜித்குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது தாயார் மாலதி மற்றும் தம்பி நவீன்குமாரிடம் ஆறுதல் கூறி, ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கினார். மேலும், ஜூலை 12, 2025 அன்று சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் காவல் மரணங்களால் பாதிக்கப்பட்ட 18 குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறியதோடு, அவர்களுக்கு நிதியுதவி வழங்கினார்.

மன்னிப்பு: அரசியல் கட்சி தொடங்கிய விஜய் பங்கேற்கும் முதல் போராட்டம் என்பதால் இது பேசு பொருளாக மாறியுள்ளது. மேலும், பரந்தூரில் விமானநிலையம் அமைப்பதற்கு எதிராக போராடிவரும் மக்களுக்கு ஆதரவாகவும் தவெக போராடும் என ஏற்கனவே விஜய் தெரிவித்திருந்தார். இந்த போராட்டத்தில் பேசும்போது கூட, “ கொல்லப்பட்ட இளைஞர் அஜித்குமார் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கியதைப் போல கடந்த நான்கு ஆண்டுகளில் கொல்லப்பட்ட 24 பேருடைய குடும்பத்தினருக்கும் நிதி உதவி வழங்குங்கள். அஜித்குமார் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டதுபோல, மற்ற குடும்பத்தினரிடமும் மன்னிப்பு கேளுங்க” என்று பேசியது தமிழ்நாடு அரசியலுல் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











