TVK Vijay: விஜய்க்கு ப்ரோபோஸ் செய்த குட்டி ரசிகை.. க்யூட் எக்ஸ்பிரஷன் கொடுத்த தளபதி - வீடியோ!
சென்னை: நடிகர் விஜய்யின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை சட்டமன்ற வாரியாகப் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குகின்றார். கடந்த ஜூன் 28ஆம் தேதி முதற்கட்டமாக வழங்கிய நிலையில், இன்று அதாவது ஜூலை 3ஆம் தேதி இரண்டாம் கட்டமாக வழங்கி வருகின்றார். இதற்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து மாணவ மாணவியர்கள் பெற்றோர்களுடன் சென்னை திருவான்மியூருக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உணவும் தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக கல்வி உதவித் தொகை வழங்கியபோது பேசுகையில் இரண்டாம் கட்டமாக உதவித்தொகை வழங்கும் நாளில் எதுவும் பேசப்போவதில்லை எனக் கூறியிருந்தார். ஆனாலும் இன்றை தினத்தில் மேடைக்கு வந்த விஜய், மிகவும் முக்கியமான ஒரு பிரச்னை குறித்து பேசினார். அதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் வரவேற்றனர்.

நீட் தேர்வு: விஜய் பேசுகையில், " நீட் தேர்வால் ஏழை மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்; நீட் தேர்வால் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலப் பாடத்திட்டத்தை படிக்கும் மாணவர்கள், மத்திய அரசு பாடத் திட்டத்தின் கீழான நீட் நுழைவுத் தேர்வை எப்படி எழுத முடியும்?
நீட் தேர்வு என்பதே மாநில உரிமைகளுக்கு எதிரானது. ஏனெனில் கல்வி என்பது மாநிலப் பட்டியலில்தான் 1975-க்கு முன்பு வரை இருந்தது. அதன்பின்னர்தான் 'ஒன்றிய' அரசு மாநிலப் பட்டியலில் இருந்து கல்வியை பொதுப் பட்டியலுக்கு மாற்றியது. ஆகையால் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மீண்டும் கொண்டுவர வேண்டும். அதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும்; சிறப்பு பொதுப்பட்டியலை உருவாக்கி கல்வி, சுகாதாரத்தை இடம் பெறச் செய்ய வேண்டும் என பேசினார்.

தமிழ்நாடு அரசைப் பாராட்டிய விஜய்: நீட் முறைகேடுகளால் நீட் தேர்வு மீதான நம்பகத்தன்மையே போய்விட்டது. இதற்கு ஒரே தீர்வு நீட் தேர்வு ரத்து.. நீட் விலக்கு.. தமிழ்நாடு அரசு நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி கொண்டு வந்துள்ள மசோதாவை நான் முழுமையாக வரவேற்கிறேன். ஒன்றிய அரசு இதற்கு உரிய அனுமதி தர வேண்டும்" என்றார். விஜய்யின் இந்த பேச்சுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
க்யூட் சம்பவம்: விஜய் மாணவ மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கி வந்தபோது அனைவரும் ரசிக்கும்படியான நிகழ்வு ஒன்று நடைபெற்றது. அதாவது மாணவி ஒருவருடன் வந்த குழந்தை விஜய்க்கு கொடுப்பதற்காக கையில் பூவுடன் மேடைக்கு வந்துள்ளார். விஜய்க்கு அருகில் சென்றதும், காதலர் தனது காதலுக்குரியவருக்கு முட்டி போட்டு காதலைச் சொல்வதைப் போல் முட்டி போட்டார். இதனைப் பார்த்த விஜய் ஆச்சரியப்பட்டது மட்டும் இல்லாமல் சிரித்தும் விட்டு, தனது விரலை ஆட்டி செல்லமாக மிரட்டிக் கொண்டும் ஒரு எக்ஸ்பிரஷன் கொடுத்தார். இதனைப் பார்த்துக் கொண்டு இருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகளும் மாணவ மாணவிகளும் அவர்களின் பெற்றோர்களும் ஆரவாரம் செய்ய விஜய், குழந்தையிடம் இருந்து பூவை வாங்கிக் கொண்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.

இதேபோல் மாணவிகள் சிலர் விஜய்க்கு பூக்கள் கொடுத்தனர். சில மாணவிகள் விஜய்யின் கன்னத்தைக் கிள்ளி முத்தம் வைத்தனர். சில மாணவிகள் விஜய்க்கு திருஷ்ட்டி சுற்றினர் இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் உலா வருகின்றது.



Click it and Unblock the Notifications











