GOAT: விஜய் விரலில் ‘GOAT’ மோதிரம்.. எம்ஜிஆரோட மோதிரம் மாதிரியே ஸ்பெஷலா இருக்கே.. சும்மா ஜொலிக்குது!
நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்து பிரமாண்டமான வசூலைக் குவித்த படம் கோட். இந்தப் படம் கடந்த மாதம் 5ஆம் தேதி ரிலீஸ் ஆனது. நேற்றில் இருந்து அதாவது அக்டோபர் 3ஆம் தேதியில் இருந்து படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிக் கொண்டு உள்ளது. படம் தியேட்டரில் கிட்டத்தட்ட 500 கோடிகளை வசூல் செய்திருக்கும் என கூறப்படுகின்றது.
இதில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் தியேட்டர் வசூலில் ரூபாய் 200 கோடிகளைக் கடந்துள்ளது. இதில் தியேட்டர் ஷேர் கலெக்ஷன் மட்டும் ரூபாய் 100 கோடிகளுக்கு மேல். இதன் மூலம் படம் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றுள்ளது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய்யின் கடைசி படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. அதேபோல், அவரது கட்சியின் முதல் மாநாட்டுக்கான பந்தகால் நடும் பூமி பூஜையும் இன்று நடைபெற்றது. விஜய் ரசிகர்கள் மற்றும் அவரது தொண்டர்களுக்கு இன்று இரட்டிப்பு மகிழ்ச்சியான தினமாக மாறியுள்ளது. இந்நிலையில் விஜய் ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி ஏற்படுத்தும் வகையில், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கோட் என பெயர் பொறிக்கப்பட்ட மோதிரத்தை அணிந்துள்ள விஜய், மாஸாக போஸ் கொடுத்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையும் இன்ப அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த மோதிரத்தைப் பார்த்த பலரும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அணிந்திருந்த மோதிரத்தைப் போல் உள்ளது எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர். அதாவது, எம்.ஜி.ஆர் அணிந்திருந்த மோதிரத்தில் அவரது பெயர் பொறிக்கப்பட்டிருக்கும். அதேபோல் விஜய் அணிந்துள்ள மோதிரத்தில் கோட் என ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.
மோதிரம்: நடிகர் விஜய் இந்த மோதிரத்தை தனது 69வது படத்தின் பூஜைக்கு வந்தபோது அணிந்து கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். மேலும் இந்த மோதிரத்தை பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும் கோட் படத்தில் நடித்தவருமான சிவா, கோட் படத்தின் பிரமாண்டமான வெற்றியை கொண்டாடும் வகையில், விஜய்க்கு இந்த மோதிரத்தை பரிசளித்துள்ளார். விஜய்யின் 69வது படம் மற்றும் கடைசிப் படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.

தளபதி 69:இந்தப் படத்தினை கே.வி. என் புரடெக்ஷன்ஸ் தயாரிக்கின்றது. மேலும், படத்தினை ஹெச். வினோத் இயக்குகின்றார். படத்தில் பாபி தயாள், பூஜா ஹெக்டே, பிரியா மணி, நரேன், பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், மமிதா பைஜு உள்ளிட்டோர் நடிக்கவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் படத்திற்கு அனிருத் இசை அமைக்கின்றார். இந்நிலையில் படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளதால், நாளை முதல் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பூஜை: நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தினை கடந்த பிப்ரவரி மாதத்தில் தொடங்கினார். கடந்த மாதமே கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாநில மாநாடு இந்த மாதம் நடைபெறவுள்ளதாக விஜய்யே அறிவித்தார். இதனால் மாநாட்டுக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இன்று மாநாடு சிறப்பாக நடைபெற, பந்தகால் நடும் விழா நடைபெற்றது. மேலும் பூமி பூஜையும் செய்யப்பட்டது. இதில் தவெகவின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவியது. இந்நிலையில் விஜய் தனது கையில் கோட் மோதிரம் அணிந்திருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











