சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கு: வைரலாகும் சுஷாந்த் சிங் அப்பாவின் டிவிட்டர் கணக்கு ஃபேக்காம்
மும்பை: மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தந்தை பெயரில் வைரலாகி வரும் டிவிட்டர் கணக்கு போலியானது என அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
கடந்த ஜூன் 14ம் தேதி, மும்பை பாந்தராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்ட நிலையில் நடிகர் சுஷாந்த் கண்டெடுக்கப்பட்டார்.
எம்.எஸ்.தோனி, சிக்கோரே உள்ளிட்ட பல பிரபல படங்களில் நடித்த, 34வயதே ஆன இளம் நடிகர் மரணம் பாலிவுட்டை நிலை குலைய செய்தது.

சிபிஐ விசாரணை தேவை
சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலையில் மர்மம் இருப்பதாகவும், பாலிவுட் நெப்போடிசத்தின் அழுத்தம் காரணமாகவே அவர் இறந்தார் என்றும், சிலர் அவரை தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்திருக்கலாம் என்றும் ஏகப்பட்ட கதைகள் சுஷாந்த் சிங் மரணத்தை சுற்றி வலம் வருகின்றன. இதனால், உண்மை நிலையை அறிய சிபிஐ விசாரணை தேவை என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

கங்கனா சம்மதம்
இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியிடம் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த சமீபத்தில் மும்பை போலீசார் நோட்டீஸ் அனுப்பி இருந்தது பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பியது. நடிகை கங்கனாவையும் விசாரிப்பார்கள் என செய்திகள் வெளியாகிய நிலையில், தனக்கு அதுபோன்ற எந்தவொரு நோட்டீஸும் வரவில்லை. ஆனால், சுஷாந்த் வழக்கில் போலீசார் விசாரிக்க விரும்பினால் முழு ஆதரவையும் தான் தர தயார் என கங்கனா தெரிவித்துள்ளார்.

அப்பாவின் டிவிட்டர் கணக்கு
இந்நிலையில், சுஷாந்த் சிங்கின் அப்பா கே.கே. சிங்கின் டிவிட்டர் கணக்கில் இருந்து, மகன் மரணத்திற்கு நீதி வேண்டும், சிபிஐ விசாரணை வேண்டும் என்ற பதிவு சமீபத்தில், மீண்டும் ஒரு பரபரப்பை பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் கிளப்பியது. இந்நிலையில், அந்த கணக்கு போலியானது என சுஷாந்த் சிங் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மீடியாவுக்கு பேட்டி
தனது மகனை போல, சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு தான் உதவி செய்யப் போவதாக, சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தந்தை கடந்த ஜூன் 27ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதன் பிறகு, அவரும் அவரது குடும்பமும், மீடியாவுக்கு எந்தவொரு பேட்டியும் கொடுக்கவில்லையாம். பாலிவுட் மீடியாக்களே தங்கள் இஷ்டத்துக்கு சுஷாந்த் சிங் விவகாரத்தில் பல கட்டுக் கதைகளை அவிழ்த்து விடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











