ஜாமீன் கிடைச்சு 2 நாளாச்சு.. 140 நாளுக்குப் பிறகு சிறையில் இருந்து வர காத்திருக்கும் ராகிணி திவேதி!
பெங்களூரு: ஜாமீன் கிடைத்து இரண்டு நாட்களாகியும் நடிகை ராகிணி திவேதி இன்னும் சிறையில்தான் இருக்கிறார்.
போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ராகிணி திவேதிக்கு உச்சநீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை ஜாமீன் வழங்கியது.
இதையடுத்து அவருடைய பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்தினர் மகிழ்ச்சி தெரிவித்து இருந்தனர்.

ராகிணி திவேதி
போதைப் பொருட்களை பயன்படுத்தியது மற்றும் அதை விற்கும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக, பெங்களூரில் சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார், நடிகைகள் ராகிணி திவேதியை செப்டம்பர் 4 ஆம் தேதி கைது செய்தனர்.

மனுக்கள் தள்ளுபடி
பின்னர் நடிகை சஞ்சனா கல்ராணி, அவர் நண்பர்கள் உட்பட 14 பேரை கைது செய்தனர். இவர்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே, இவர்கள் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. நடிகை ராகிணி திவேதியின் ஜாமீன் மனு, நிராகரிக்கப்பட்டதை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

நிபந்தனை ஜாமீன்
இதற்கிடையே, நடிகை சஞ்சனா கல்ராணிக்கு மருத்துவ காரணங்களின் அடிப்படையில் கர்நாடக உயர்நீதிமன்றம் கடந்த மாதம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. மாதம் ஒரு நாள் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராக வேண்டும் என்றும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் ஜாமீன் வழங்கப்பட்டது.

வர இருக்கிறார்
இதனால் 3 மாதத்துக்குப் பிறகு அவர் வீட்டுக்குச் சென்றார். இதையடுத்து நடிகை ராகிணி திவேதிக்கும் கடந்த வியாழக்கிழமை, உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து 140 நாட்களுக்கு பிறகு அவர் சிறையில் இருந்து வெளியே வர இருக்கிறார்.

நீதிமன்ற நடைமுறை
இதற்கிடையே, அவர் ஜாமீன் கொடுக்கப்பட்டு 2 நாட்கள் ஆகியும் நடிகை ராகிணி இன்னும் சிறையில் இருக்கிறார். நீதிமன்ற நடைமுறைகள் மற்றும் சம்பிரதாயங்கள் முறையாக பின்பற்றப்பட வேண்டி இருப்பதாலும் உச்ச நீதிமன்ற ஜாமீன் உத்தரவு, போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு முறையாக வந்த பிறகே, அவர் சிறையில் இருந்து வெளியே வருவார் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











