ஷூட்டிங் முடிந்து வீடு திரும்பியபோது சாலை விபத்தில் 2 டிவி சீரியல் நடிகைகள் பலி
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் விகாராபாத்தில் நடந்த சாலை விபத்தில் இரண்டு தொலைக்காட்சி நடிகைகள் பலியாகினர்.
தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர்கள் பார்கவி(20), அனுஷா(21). தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் தொலைக்காட்சி தொடர் ஷூட்டிங் நடந்தது.

அதில் கலந்து கொள்ள பார்கவி மற்றும் அனுஷா ஹைதராபாத்தில் இருந்து விகாராபாத் சென்றனர். ஷூட்டிங் முடிந்த பிறகு இருவரும் காரில் வீடு திரும்பினார்கள்.
காரை டிரைவர் சக்ரி ஓட்டினார். அனுஷா, பார்கவியுடன் வினய் குமார் என்பவரும் காரில் பயணம் செய்தார். அவர்களின் கார் செவல்லா என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர் திசையில் இருந்து ஒரு லாரி வேகமாக வந்தது.
லாரி மீது மோதுவதை தடுக்க டிரைவர் சக்ரி காரை திருப்ப அது சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் பார்கவி சம்பவ இடத்திலேயே பலியானார். காயம் அடைந்த அனுஷா, சக்ரி, வினய் ஆகியோர் உஸ்மானியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு அனுஷா சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இரண்டு இளம் நடிகைகள் கார் விபத்தில் பலியானது தெலுங்கு சின்னத்திரை பிரபலங்களையும், ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











