நடிகர் நாகேஸ்வரராவ் நினைவாக தபால் தலை வெளியிட அமெரிக்கா முடிவு
நியூயார்க்: மறைந்த நடிகர் நாகேஸ்வரராவ் நினைவாக அவரது பிறந்தநாளன்று தபால் தலை வெளியிட்டு கவுரவிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
தெலுங்குப் பட உலகில் முன்னணி நாயகனாக வலம் வந்தவர் அக்கினேனி நாகேஸ்வரராவ். இவர் தமிழில் தேவதாஸ், மாயமலை, சவுடாமணி, மாயக்காரி, காதல், பூங்கோதை, பெற்றதாய், கல்யாணப் பரிசு உள்ளிட்ட பலப் படங்கள் மற்றும் ஏராளமான தெலுங்கு மொழிப்படங்கள் என 256 திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த ஜனவரி மாதம் ஹைதராபாத்தில் காலமானார்.
இவரது மகன் நடிகர் நாகார்ஜுனா தெலுங்கு திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக விளங்கி வருகின்றார்.

விருதுகள்...
தமிழகத்தின் கலைமாமணி விருது, ஆந்திர மாநில அரசின் நந்தி விருது, சினிமா துறைக்கு வழங்கப்படும் மிக உயரிய தாதா சாகேப் பால்கே விருது, மத்திய அரசின் உயரிய பத்ம விபூஷன் உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார் நாகேஸ்வரராவ்.

தபால் தலை...
இந்நிலையில், மறைந்த நாகேஸ்வர ராவின் நினைவாக அவரைக் கவுரவிக்கும் வகையில் தபால் தலையினை வெளியிட அமெரிக்க தபால் துறை முடிவு செய்துள்ளது.

வெளியீட்டு விழா...
வரும் செப்டம்பர் மாதம் 20ம் தேதி நாகேஸ்வரராவின் பிறந்தநாள். அன்று டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள டெல்லாஸ் நகரில் இந்த தபால் தலை வெளியீட்டு விழா நடைபெறும் என அமெரிக்க அக்கினேனி பவுண்டேஷன் அறிவித்துள்ளது.

முதல்முறை...
இந்திய நடிகர் ஒருவருக்கு அமெரிக்கா தலை தபால் வெளியிட்டு கவுரவிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மிக்க மகிழ்ச்சி...
இத்தகவலை அறிந்து தானும் தனது குடும்பத்தாரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாகவும், தனது தந்தைக்கு அமெரிக்கா அளிக்கும் இந்தக் கவுரவத்திற்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார் நடிகர் நாகார்ஜூன்.

அக்கினேனி அவார்ட்ஸ்...
மேலும், இந்த தபால்தலை வரும் டிசம்பர் மாதம் 17ந்தேதி ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா மாவட்டத்தில் நடக்கவுள்ள இண்டர்நேஷனல் அக்கினேனி அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் வைத்து இந்தியாவில் வெளியிடப்படும் என அக்கினேனி பவுண்டேஷன் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











