மாரி செல்வராஜ் படத்தில் ஹீரோவாகும் உதயநிதி... இசையமைக்கும் இசைப்புயல்!
சென்னை : பரியேறும் பெருமாள் வெற்றியை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கியிருந்த கர்ணன் திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
இப்பொழுது கபடியை மையமாக வைத்து புதிய திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தில் துருவ் விக்ரம் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் அடுத்து நடிக்கும் திரைப்படத்தை மாரிசெல்வராஜ் இயக்க இருப்பதாக புதிய தகவல் கிடைத்துள்ளது.

முதல் படத்திலேயே சிக்சர்
தான் இயக்கும் திரைப்படங்களின் மூலம் சமூகத்தில் இன்றளவும் நடக்கக்கூடிய அவலங்களை அழுத்தமாகவும் கண்ணியமாகவும் தெளிவுடனும் கூறக்கூடியவர் இயக்குனர் மாரி செல்வராஜ். பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவான "பரியேறும் பெருமாள்" மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகம் செய்யப்பட்டவர். முதல் படத்திலேயே சிக்சர் அடித்து பாராட்டுகளை பெற்றதோடு பல விருதுகளுக்கும் சொந்தக்காரர் ஆனார்.

கர்ணன்
இந்த நிலையில் இரண்டாவது திரைப்படத்தில் தனுஷ் நடிக்க பெரும் எதிர்பார்ப்புடன் மிகப் பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் கர்ணன் வெளியாகி இந்த படமும் மாபெரும் வெற்றி பெற்று தமிழ் சினிமாவையே திக்குமுக்காட வைத்தது . இதைத்தொடர்ந்து இவரது படங்கள் இந்திய அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

துருவ் விக்ரம்
தமிழ் சினிமாவில் அனைவராலும் கவனிக்கக்கூடிய முக்கிய இயக்குனர்களில் ஒருவராக மாரி செல்வராஜ் உயர்ந்து வர இவரின் அடுத்தடுத்த திரைப்படங்களை ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரை பிரபலங்களும் எதிர் நோக்கி காத்துக் கொண்டுள்ளனர். அந்த வகையில் கபடி போட்டியை மையமாக வைத்து உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகிவரும் திரைப்படத்தில் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார் இதன் பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளது . இதையடுத்து மீண்டும் தனுஷ் உடன் இணைய உள்ளதாக கூறப்பட்டது.

ஏ ஆர் ரஹ்மான் இசையில்
இந்நிலையில் தற்போது கோலிவுட்டை பரபரப்பாக்கி இருக்கும் தகவல் மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்க இருப்பதாகும். மேலும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளார். மாரி செல்வராஜின் படங்களுக்கு தொடர்ந்து சந்தோஷ் நாராயணன் மட்டுமே இசையமைத்து வந்த நிலையில் இப்பொழுது ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க இருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











