உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்.. தனது ஸ்டைலில் சந்தானம் சொன்ன சூப்பரான வாழ்த்து!
சென்னை: தயாரிப்பாளர், நடிகர், விநியோகஸ்தர் என பல அவதாரங்களை எடுத்தவர் உதயநிதி ஸ்டாலின். தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகவும், விளையாட்டுத் துறை அமைச்சராகவும் உள்ளார். இன்றைக்கு அதாவது நவம்பர் மாதம் 27ஆம் தேதி தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு திரையுலகில் இருந்து பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இப்படி இருக்கும்போது, நடிகர், தயாரிப்பாளர் சந்தானம், உலகநாயகன் கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.
சந்தானம் தனது எக்ஸ் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலினை டேக் செய்து, பிறந்த நாள் வாழ்த்துகள் முதலாளி, எதிர்வரும் ஆண்டு உங்களுக்கு சிறப்பான ஆண்டாக அமையட்டும் என்று பதிவிட்டுள்ளார். உதயநிதி ஸ்டாலின் நடிகராக அறிமுகமான ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் அவரது நண்பனாக நடித்தவர் சந்தானம். அதன் பின்னரும் இருவரும் இணைந்து சில படங்களில் நடித்துள்ளார்கள். இவர்களுக்கு இடையிலான நட்பு பலரது கவனத்தை ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசன் வாழ்த்து: அதேபோல் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன் உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், "தமிழ்நாடு துணை முதல்வர், எப்போதும் இனியவர், என் அன்பிற்குரிய இளவல் உதயநிதி நீடு வாழ்க. பொன்றாப் புகழுடனும் குன்றாப் பெருமையோடும் நிலைத்து வளர்க" என்று பதிவிட்டுள்ளார்.
முதலமைச்சர் வாழ்த்து: அதேபோல் தமிழ்நாட்டின் முதலமைச்சரும், திமுக தலைவரும், உதயநிதியின் தந்தையுமான மு.க. ஸ்டாலினும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துக் குறிப்பில், " கொள்கைப் பற்றோடு உழைப்பிலும் உயர்ந்து வரும் உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! இளைஞரணிச் செயலாளராக - விளையாட்டுத் துறை அமைச்சராக - மாண்புமிகு துணை முதலமைச்சராக நீ ஆற்றிவரும் பணிகளை மக்களும் கழகத்தினரும் பாராட்டிச் சொல்வதைக் கேட்கும் போது தந்தையாக மட்டுமல்ல தலைவனாக மகிழ்ச்சி அடைகிறேன்!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைத் தொண்டனாக நான் உனக்கு அறிவுறுத்துவது, காட்சிக்கு எளியனாக, கடுஞ்சொல் சொல்லாதவனாக, மக்களின் அன்புக்குரியவனாக,எப்போதும் அவர்களுக்காகக் களத்தில் நிற்பவனாக நீ திகழ வேண்டும். இளைஞர்களிடம் திராவிட இயக்கக் கருத்தியலைத் தொடர்ந்து விதைத்து, அவர்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ வேண்டும்! " என்று பதிவிட்டுள்ளார். இவர்களது வாழ்த்து குறிப்புகள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











