Udhayanidhi Stalin - இட ஒதுக்கீட்டுக்கு எதிரான சீன்.. சூர்யாதான் மாற்ற சொன்னார் - உதயநிதி ஷேரிங்ஸ்
சென்னை: Udhayanidhi Stalin (உதயநிதி ஸ்டாலின்) ஏழாம் அறிவு படத்தில் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான காட்சியை சூர்யாதான் நீக்க சொன்னார் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
நடிகராக வலம் வரும் உதயநிதி ஸ்டாலின் ஆரம்பத்தில் விநியோகஸ்தராக இருந்து பின்னர் தயாரிப்பாளராக மாறியவர். விஜய்யை வைத்து கடந்த 2008ஆம் ஆண்டு தரணி இயக்கத்தில் குருவி படத்தை தயாரித்தார். அதன் பிறகு ஆதவன், மன்மதன் அம்பு, ஏழாம் அறிவு,நீர்ப்பறவை, வணக்கம் சென்னை உள்ளிட்ட பல படங்கள் ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக தயாரிக்கப்பட்டது.தற்போது அமைச்சராகிவிட்டதால் ரெட் ஜெயண்ட்டிலிருந்து வெளியே வந்துவிட்டார். அந்த நிறுனம் இப்போது இந்தியன் 2 படத்தை தயாரித்துவருகிறது. மேலும் கமல்,மணிரத்னம் இணையும் படத்தையும் தயாரிக்கவிருக்கிறது.

ஏழாம் அறிவு: ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்த படங்களில் முக்கியமான படமாக பார்க்கப்படுவது ஏழாம் அறிவு. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியானது. போதிதர்மரையும், அறிவியலையும் இணைத்து உருவான அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. குறிப்பாக அந்தப் படம் வெளியான பிறகுதான் போதிதர்மர் குறித்தும் பலர் அறிந்துகொள்ள ஆர்வமாகினர்.
சர்ச்சை: படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும் ஒரு காட்சியால் சர்ச்சையை சந்தித்தது. அதாவது ஸ்ருதி ஹாசன் படத்தின் ஒரு காட்சியில் பேசும்போது இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வசனத்தை பேசுவார். ரமணா போன்ற சமூக அக்கறையுள்ள படத்தை எடுத்த ஏ.ஆர்.முருகதாஸ் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக இப்படி வசனம் எழுதியிருக்கக்கூடாது என கண்டனங்கள் வலுத்தன. அதுமட்டுமின்றி இட ஒதுக்கீட்டை மூச்சாக கருதிய கருணாநிதியின் பேரன் தயாரித்த படத்தில் இப்படி ஒரு வசனமா என கொந்தளிக்கவும் செய்தனர். அதன் பிறகு அந்த வசனத்துக்கு மியூட் போடப்பட்டது.
உதயநிதி பேட்டி: இந்நிலையில் அந்தக் காட்சி குறித்து உதயநிதி ஸ்டாலின் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "நான் தயாரித்த ஏழாம் அறிவு படத்தில் இட ஒதுக்கீட்டை திட்டி ஒரு வசனம் வரும். அன்றைய காலகட்டத்தில் எனக்கு இருந்த அரசியல் புரிதலை வைத்து அதை விட்டுவிட்டேன். அது வெறும் சினிமாதானே என்று நினைத்துவிட்டேன். அப்படி எழுதியதற்கு ஏ.ஆர்.முருகதாஸை நான் குறை சொல்லவில்லை. அது அவருடைய எழுத்து, எண்ணங்கள்.
வைத்திருக்கக்கூடாது: ஆனால் அதை நான் என்னுடைய படத்தில் வைத்திருக்கக்கூடாது. அந்தக் காட்சியை எடுக்கும்போது சூர்யாவுக்கு தெரியாது. டப்பிங் பேசும்போதும் சூர்யா அந்த இடத்தில் இல்லை. ரிலீஸுக்கு முன்பு படத்தை முழுதாக பார்த்துவிட்டு அந்த இடத்தில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக இருக்கிறது. அப்படி இருக்கக்கூடாது. அதை எடுத்துவிடுங்கள் என்றார். அது அவருடைய அரசியல் புரிதல். நான் விடுங்க பாஸ் என்று சொல்லிவிட்டேன். ஆனால் இப்போது நினைத்து பார்த்தால் அதை நாம் அனுமதித்திருக்கக்கூடாது என்று தோன்றுகிறது" என்றார். மாமன்னன் ஆடியோ வெளியீட்டு விழாவில் மாரி செல்வராஜின் பேச்சு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு இந்த பதிலை அளித்தார் உதயநிதி ஸ்டாலின்.
மாமன்னன்: உதயநிதி ஸ்டாலின் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் நடித்திருக்கிறார். படம் ஜூன் 29ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இந்தப் படம்தான் அவருக்கு கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அவருடன் வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











