Udhayanidhi Stalin - சமத்துவம் போற்றும் மாமன்னன்.. ரஜினிக்கு நன்றி சொன்ன உதயநிதி ஸ்டாலின்
சென்னை: udhayanidhi Stalin (உதயநிதி ஸ்டாலின்) மாமன்னன் படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்திற்கு உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்திருக்கிறார்.
நடிகராக இருந்த உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கிடைத்தவுடன் சினிமாவிலிருந்து ஒதுங்க முடிவு செய்தார். இதனையடுத்து கடைசி படமாக தரமான படத்தில் நடித்துவிட வேண்டும் என முடிவு செய்திருந்த அவர் பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களை இயக்கி பெரும் கவனம் ஈர்த்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க விருப்பப்பட்டு அவரை இயக்குநராக புக் செய்தார்.

உருவான மாமன்னன்: இதனையடுத்து வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால் உள்ளிட்டோர் படத்துக்குள் வந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார். படத்தின் ஷூட்டிங் மொத்தம் 100 நாட்களுக்கும் மேலாக மும்முரமாக நடந்துவந்தது. கண்டிப்பாக இந்தப் படம் மெகா ஹிட்டாகும் என உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை வைத்திருந்தார். படமானது கடந்த ஜூன் 29ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.
மெகா ஹிட்: அனைவரும் எதிர்பார்த்தபடியே படத்துக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பை கொடுத்திருக்கின்றனர். குறிப்பாக அந்த இடைவேளை காட்சி வந்தபோது திரையரங்கில் இருந்த அனைவருமே கைதட்டி ஆரவாரம் செய்தனர். விமர்சன ரீதியாக படம் அப்ளாஸை அள்ள வணிக ரீதியாகவும் வசூலை குவித்துவருகிறது. படம் வெளியாகி ஐந்து நாட்கள் கடந்திருக்கும் சூழலில் இதுவரை 30 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.
குவியும் பாராட்டு: இதற்கிடையே படத்தை பார்த்த சாமானிய ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் பாராட்டுகின்றனர். அந்தவகையில் நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் மாரி செல்வராஜை நேரில் அழைத்து சந்தித்து படத்தை பாராட்டி வாழ்த்தினர். அதன் பிறகு தனது ட்விட்டர் பக்கத்தில், "சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு. அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மிகச் சிறப்பாக நடித்திருக்கும் வடிவேலு, உதயநிதி, பகத் பாசில் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள்" என குறிப்பிட்டிருந்தார்.
மாரியின் நன்றி: ரஜினிகாந்த்தின் பாராட்டைத் தொடர்ந்து அவருக்கு நன்றி தெரிவித்த மாரி செல்வராஜ் தனது முகநூல் பக்கத்தில், "என் முதல் இரண்டு படங்களான பரியேறும் பெருமாளையும் கர்ணனையும் பார்த்து பாராட்டியதை போல என் மூன்றாவது படமான மாமன்னனையும் விருப்பத்தோடு பார்த்து பேரன்போடும் பெரும் ப்ரியத்தோடும் நேரில் அழைத்து மனதார பாராட்டிய நமது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சார் அவர்களுக்கு என் இதயத்திலிருந்து நிரம்பி வழியும் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என கூறியிருந்தார்.
உதயநிதி ஸ்டாலினின் நன்றி: இந்நிலையில் மாமன்னன் படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்திற்கு நடிகரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்திருக்கிறார். ரஜினியின் ட்வீட்டை ரீ ட்வீட் செய்திருக்கும் அவர், "சமத்துவம் போற்றும் மாமன்னன் திரைப்படத்தைப் பார்த்து அன்போடு வாழ்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் அவர்களுக்கு மாமன்னன் திரைப்படக்குழு சார்பில் அன்பும், நன்றியும்" என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











