நியாயத்து பக்கம் நிக்கிறது தான் சார் நியூட்ரல்.. உதயநிதி ஸ்டாலினின் நெஞ்சுக்கு நீதி டீசர் ரிலீஸ்!
சென்னை: கனா படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமான அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள நெஞ்சுக்கு நீதி படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.
வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த படத்தில் ஹீரோவாக உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். மிரட்டும் கதாபாத்திரத்தில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி அசத்தல் என்ட்ரி கொடுத்துள்ளார்.
பாலிவுட்டில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான ஆர்ட்டிக்கள் 15 படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த நெஞ்சுக்கு நீதி.

கதையை தேடி
ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து சந்தானத்துடன் இணைந்து கொண்டு காமெடி படங்களில் நடித்து வந்தார். ஆனால், திடீரென தனது ரூட்டை மாற்றிக் கொண்டு மனிதன், நிமிர், சைக்கோ என கதைக்கு முக்கியவத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வரும் உதயநிதி ஸ்டாலின் நெஞ்சுக்கு நீதி படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

கனா இயக்குநர்
இயக்குநர் அட்லியின் ராஜா ராணி, சிவகார்த்திகேயனின் மான் கராத்தே உள்ளிட்ட படங்களில் காமெடி நடிகராக நடித்து அசத்திய அருண்ராஜா காமராஜ் கபாலி படத்தில் ரஜினிக்கு நெருப்புடா என பாடல் பாடி தனக்கு இன்னொரு முகமும் இருக்கு என நிரூபித்தார். அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான கனா படத்தின் மூலம் இயக்குநர் அவதாரத்தை எடுத்த அவர், அடுத்து இயக்கியுள்ள படம் தான் இந்த நெஞ்சுக்கு நீதி. அருண்ராஜா காமராஜ் இயக்கம் என்பதால் ரசிகர்கள் 100 சதவீத நம்பிக்கையுடன் படத்தை தியேட்டரில் சென்று தாராளமாக பார்ப்பார்கள்.

ஆர்ட்டிக்கள் 15
கடந்த 2019ம் ஆண்டு இயக்குநர் அனுபவ் சின்ஹா இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான இந்தி படமான ஆர்ட்டிக்கிள் 15 படத்தின் தமிழ் ரீமேக் தான் நெஞ்சுக்கு நீதி. வெறும் 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 90 கோடி ரூபாய் வரை பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்த படத்தின் ரீமேக் என்பதால் படம் தமிழிலும் மிகப்பெரிய வெற்றி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு திரைக்கதையும் வலுவான ஒன்று.

நெஞ்சுக்கு நீதி டீசர்
உதயநிதி ஸ்டாலின், பிக் பாஸ் ஆரி நடிப்பில் உருவாகி உள்ள நெஞ்சுக்கு நீதி படத்தின் அதிரடியான டீசர் தற்போது வெளியாகி உள்ளது. ஏகப்பட்ட இன்டென்ஸ் ஆன காட்சிகள் மற்றும் அனல் தெறிக்கும் வசனங்களுடன் டீசர் அட்டகாசமாக மிரட்டுகிறது. வலியில கத்துனாக்கூட ஏன் கத்துனன்னு தான் கேட்பாங்களே தவிர.. அடிக்கிறவனை எதுக்கு அடிக்கிற என கேட்க நாதியில்லை என ஆரி பேசும் வசனங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
நியாயத்துப் பக்கம் நிக்கிறது தான் நியூட்ரல்
"நடுவுல நிக்கிறதை விட நியாயத்துப் பக்கம் நிக்கிறது தான் சார் நியூட்ரல்" என உதயநிதி ஸ்டாலின் பேசும் கடைசி வசனம் மற்றும் "ஒருத்தன் நல்லவனா இருக்கிறதும் கெட்டவனா இருக்கிறதும் ஜாதியில இல்ல சார்.. அவன் உள்ள இருக்குற குணத்துல தான் சார் என மயில்சாமி பேசும் வசனங்கள் நிச்சயம் தியேட்டரில் கைதட்டல்களை அள்ளும் என்பது டீசரை பார்த்தாலே தெரிகிறது. வலிமை ரிலீஸ் ஆனதும் உடனடியாக நெஞ்சுக்கு நீதி படமும் தியேட்டரில் வெளியாகப் போகிறது.


Click it and Unblock the Notifications











