இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஆட்சி நடத்தாதீங்க.. முதல்வர் விஜயை வம்புக்கு இழுத்த.. உதயநிதி ஸ்டாலின்!
சென்னை: நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் விஜயின் தவெக பெரும்பான்மையை பெறாத நிலையில் சில கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. இதனால், தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. தவெக அரசின் மீதான நம்பிக்கை கூறும் தீர்மானத்தை முதல்வர் விஜய் முன்மொழிந்தார். இதை தொடர்ந்து எம்எல்ஏக்கள் பேசி வருகின்றனர்.
அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது பெயர் சொல்லக்கூடி தயங்கி கட்சியில் இருந்த ஒரு சிலரை சந்தித்து இருக்கிறார். அந்த மற்றும் சில கட்சியினர் அமைச்சராகவும் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வருகிறது. இப்படி எங்கள் கூட்டணி கட்சியில் இருந்து மற்றும் சிலரிடம் கடனை வாங்கித் தான் இந்த அரசு நடந்து வருகிறது. இவரை ஏன் முதலமைச்சராக்கினோம் என மக்கள் நினைத்து வேதனைப்படுகிறார்கள்.

உதயநிதி பேச்சு: அந்த மக்களின் உணர்வை வெளிப்படுத்தும் விதமாக நாங்கள் தற்போது நடக்கும் நம்பிக்கை வாக்கெடுபில் கலந்துகொள்ளாமல் வெளிநடப்பு செய்கிறோம். இதனால் உங்கள் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எந்தவிதமான பாதிப்பும் இருக்காது, நீங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். ஆனால், சில விஷயத்தை நான் முன்வைக்கிறேன். கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் சென்றடைந்த பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். ஏனெனில், இந்த மாதம் 15ஆம் தேதி மகளிர் உரிமைத்தொகைக்காக ஒரு கோடியே 31 லட்சம் தாய்மார்கள் காத்திருக்கிறார்கள். அந்த தொகை அவர்களின் குடும்ப வாழ்க்கைக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது.
மக்கள் காத்திருப்பார்கள்: அதேபோல், "புதுமைப்பெண், தமிழ் புதல்வன் போன்ற கல்வி உதவித்திட்டங்களின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர கல்வி ஊக்கத்தொகையும் இதுவரை வரவில்லை. ஜூன் 2ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட உள்ள நிலையில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் அந்த உதவித்தொகையை நம்பி காத்திருக்கிறார்கள். நான் முதல்வன் திட்டம், தாயுமானவர் என பல்வேறு திட்டங்களின் பயனாளிகளும் இந்த அரசு என்ன செய்யப் போகிறது என்று எதிர்பார்த்து உள்ளனர். புதிய முதலமைச்சர் அவர்கள் பதவி ஏற்றவுடன் சில கால அவகாசம் கேட்டிருப்பது சரி தான். அவகாசம் எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால், மக்களை நீண்ட நாட்கள் காத்திருக்க வைக்காதீர்கள் என்று வலியுறுத்தினார்.
வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்: தொடர்ந்து தேர்தல் வாக்குறுதிகள் குறித்தும் அவர் உதயநிதி ஸ்டாலின், தேர்தலுக்கு முன்பு மகளிருக்கு மாதம் ரூ.2500, ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள், தங்கச் செயின், மோதிரம், பட்டுப் புடவை, வேலை இல்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை என பல கவர்ச்சியான வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. மக்கள் அந்த வாக்குறுதிகளை இன்னும் நினைவில் வைத்திருக்கிறார்கள். அவற்றில் சிலவற்றிலாவது முதல் கையெழுத்திலேயே நிறைவேற்றுவீர்கள் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். நடமுறைக்கு சாத்தியமான வாக்குறுதிகளையே நான் வழங்குகிறேன் என்று நீங்கள் தேர்தல் கூட்டங்களில் கூறியிருந்தீர்கள். அதனை இப்போது செயல்படுத்தி காட்ட வேண்டிய நேரம் இது என்றும் உதயநிதிஸ்டாலின் குறிப்பிட்டார்.
ரியல் ஆட்சி: இறுதியாக, "2021ஆம் ஆண்டு மிகக் கடினமான சூழ்நிலையில் நாங்கள் ஆட்சியை ஏற்றோம். ஆனால் மக்கள் நலத் திட்டங்களை நிறுத்தாமல் தொடர்ந்து செயல்படுத்தினோம். அதுபோல இந்த அரசும் மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்பட வேண்டும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஆட்சியாக இல்லாமல் ரியல் ஆட்சியாக இருக்க வேண்டும் அதைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று பேசிய உதயநிதி ஸ்டாலின் பின், நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் எதிர்க்கட்சியினருடன் வெளிநடப்பு செய்தார்.


Click it and Unblock the Notifications