Udhayanidhi Stalin - விஜய்யுடன் கூட்டணி வைக்கலாம்.. ஆனால் ஒரு கண்டிஷன் - உதயநிதி ஓபன் டாக்
சென்னை: Udhayanidhi Stalin (உதயநிதி ஸ்டாலின்) விஜய் அரசியலுக்கு வந்தால் அவரது கொள்கை என்னவென்று தெளிவுப்படுத்த வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
லியோ படத்தில் நடித்துவரும் விஜய் சமீபத்தில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12ஆவது வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை சந்தித்தார். அப்போது அவர்களுக்கு 5000 ரூபாய் ஊக்கத்தொகையையும், சான்றிதழையும் வழங்கினார். அவரது இந்த நடவடிக்கை பலரிடம் பலத்த வரவேற்பைப் பெற்றுக்கொடுத்தது.
விஜய் பேச்சு: அந்த விழாவில் பேசிய விஜய், 'பெரியார், அம்பேத்கர், காமராஜர் ஆகிய தலைவர்களை படியுங்கள். பணம் வாங்கிவிட்டு வாக்கு செலுத்தக்கூடாது என்பதை உங்களது தாய், தந்தையிடம் சொல்லுங்கள். பணம் வாங்கி வாக்கு செலுத்தக்கூடாது என்பதை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்' என பல விஷயங்களை பேசினார். அவரது இந்தப் பேச்சும் சலசலப்பை ஏற்படுத்தியது.

முதல் தலைமுறை வாக்காளர்கள்: மாணவ, மாணவிகளை சந்தித்து நலத்திட்ட உதவிகள் வழங்கியது நல்ல விஷயம்தான். ஆனால் அவர்களிடம் விஜய் பேசியதில் ஒரு அரசியல் டச் இருந்தது. அவர்கள்தான் முதல் தலைமுறை வாக்காளர்கள். அவர்களை கவர் செய்யும் விதமாக பேசியதன் மூலம் இன்னும் சில வருடங்களில் அரசியலுக்கு அவர் வந்துவிடுவார் என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.
உதயநிதி என்ன சொல்கிறார்?: விஜய் அந்த சந்திப்பு நிகழ்த்தியவுடன் அதுகுறித்து உதயநிதியிடம் கேட்கப்பட்டபோது, 'பணம் வாங்கி வாக்கு செலுத்தக்கூடாது என அவர் நல்ல விஷயத்தைத்தானே பேசியிருக்கிறார்' என கூறியிருந்தார். இதற்கிடையே விஜய் ஒருவேளை அரசியலுக்கு வந்தால் திராவிட சித்தாந்தத்தை பின்பற்றி மாநில கட்சிகளுடன் இணக்கமாக செல்வாரா இல்லை தேசிய கட்சிகளுடன் கைகோர்ப்பாரா என்ற கேள்வியையும் சிலர் முன்வைத்துவருகின்றனர்.
உதயநிதி பேட்டி: இந்நிலையில் மாமன்னன் படத்தின் ப்ரோமோஷனை ஒட்டி உதயநிதி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசுகையில், "விஜய் நடத்திய நிகழ்ச்சி அரசியல் வருகைக்கான தொடக்கப்புள்ளியாக இருக்கலாம். இல்லாமலும் போகலாம். அதற்கு அவர்தான் பதில் சொல்ல வேண்டும். அவரை தவிர அனைவரிடமும் கேள்வி கேட்கிறார்கள். இதுதொடர்பாக விஜய்தான் முடிவெடுத்து, பதில் சொல்ல வேண்டும்.
கொள்கை என்ன?: அவர் மாணவ, மாணவிகளை சந்தித்து பாராட்டியது நல்ல விஷயம்தான். அதேசமயம் அவர் அரசியலுக்கு வரும்போது கொள்கைகள் என்னவென்று சொல்ல வேண்டும். எங்கள் கட்சிக்கென்று மாநில சுயாட்சி, இந்தி திணிப்பு எதிர்ப்பு போன்ற கொள்கைகள் இருக்கின்றன. அதுபோல் விஜய்யின் அரசியல் கொள்கைகளும் எங்களுடன் ஒத்துப்போனால் அவருடன் இணைந்து பயணிக்கலாம்" என்றார்.


Click it and Unblock the Notifications











