போனிகபூர் தயாரிப்பில்.. அந்த சூப்பர் ஹிட் இந்தி பட ரீமேக்கில் நடிக்கிறார் உதயநிதி ஸ்டாலின்!
சென்னை: அந்த சூப்பர் ஹிட் இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிப்பது உறுதியாகி இருக்கிறது.
Recommended Video
அயுஷ்மன் குரானா, மனோஜ் பாவா, இஷா தல்வார், சயானி குப்தா உட்பட பலர் நடித்துள்ள இந்தி படம் ஆர்டிகிள் 15.
தமிழ் நடிகர் நாசர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அனுபவ் சின்ஹா இயக்கிய இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் கவனிக்கப்பட்டது.

சாதியின் பெயரால்
மதம், இனம், சாதி, மொழி அடிப்படையிலான பாகுபாட்டைத் தடை செய்யும் சட்டம்தான் 'ஆர்டிகிள் 15'. ஒரு கிராமத்தில் இரண்டு ஏழை சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்குப்பின் கொல்லப்பட்டு, மரக்கிளையில் தொங்க விடப்படுகிறார்கள். அதன் விசாரணையை முன்னெடுக்கும் அதிகாரிக்கு சாதியின் பெயரால் பல்வேறு தடைகள் வருகிறது. அதனால் அந்த அதிகாரி என்ன செய்கிறார் என்பதுதான் கதை.

தென்னிந்திய உரிமை
2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் தேதி வெளியான இந்தப் படத்தின் தென்னிந்திய மொழிகளின் உரிமையை பிரபல இந்தி பட தயாரிப்பாளரும் நடிகை ஶ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் வாங்கி இருந்தார். இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் யார் நடிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. நடிகர் தனுஷ் இதில் நடிக்க ஆர்வம் காட்டி இருந்தார்.

உதயநிதி ஸ்டாலின்
ஒரு கட்டத்தில் நடிகர் அஜித் இதில் நடிக்கலாம் என்றும் கூறப்பட்டது. போனிகபூர் தயாரிப்பில் நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து வலிமை படத்திலும் அஜித் நடித்து வருவதால் இந்தப் படத்திலும் அவர் நடிக்கலாம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் இதில் ஹீரோவாக நடிப்பது உறுதியாகி இருக்கிறது.

நடிகர், நடிகைகள்
கனா படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ் இந்தப் படத்தை இயக்குகிறார். போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து வழங்க, ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் தயாரிக்கிறார். உதயநிதி ஸ்டாலினுடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











