கடைசியில துணை முதல்வரை ப்ளூ சட்டை மாறன் ரேஞ்சுக்கு மாத்திட்டாங்களே.. கூலியால் இப்படி மாட்டிட்டாரே!
சென்னை: ரஜினிகாந்த் நடித்திருக்கும் கூலி படம் பற்றிதான் எங்கும் பேச்சாக இருக்கிறது. எப்படியும் படம் மெகா ஹிட்டாக வேண்டும் என்று அவரது ரசிகர்கள் செய்யாத வேண்டுதல்கள் இல்லை. இது ஒருபக்கம் இருக்க கூலி திரைப்படத்தை பார்த்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது விமர்சனத்தை முன்வைத்தார். தூய்மை பணியாளர்கள் போராடிக்கொண்டிருக்கும்போது அவர் கூலி படம் பார்த்தது கண்டனங்களை பெற்றிருக்கிறது.
லோகேஷு கனகராஜும், ரஜினிகாந்த்தும்தான் கடந்த சில நாட்களாக பெரும்பாலானோரால் பேசப்பட்டவர்கள். ஏனெனில் அவர்கள் இணைந்திருக்கும் கூலி திரைப்படம் காரணம். கமல்ஹாசன், விஜய்யை வைத்து மெகா ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் ரஜினியுடன் சேர்ந்திருப்பது எக்கச்சக்க மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் ரசிகர்கள் மத்தியில் உருவாக்கிவிட்டது என்பதுதான் உண்மை.
செம திருவிழா: கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு; அதன்படி இன்று ரிலீஸாகியிருக்கிறது. வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் படம் பார்த்த ரசிகர்கள் தங்களது கலவையான விமர்சனத்தையே படத்துக்கு கொடுத்துவருகிறார்கள். அதேசமயம் ரஜினிகாந்த்தை வழக்கம்போல் கொண்டாடி தீர்ப்பதற்கு அவர்கள் மறக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. படம் கண்டிப்பாக தோல்வி படமாக அமையாது என்ற எண்ணத்தைத்தான் இதுவரை வந்திருக்கும் விமர்சனங்கள் உணர்த்துகின்றன.

படம் பார்த்த உதயநிதி ஸ்டாலின்: இதற்கிடையே சன் டிவி அலுவலகத்தில் இருக்கும் பிரத்யேக திரையரங்கில் துணை முதலமைச்சர் உதயநிதி, நேற்று முன்தினம் கூலி படம் பார்த்தார். அடிப்படையில் ரஜினியின் ரசிகரான அவர் படம் பார்த்த பிறகு; '50 வாருடங்களை திரைத்துறையில் நிறைவு செய்த ரஜினிக்கு வாழ்த்து' என கூறிவிட்டு; கூலி திரைப்படம் மாஸ் என்ட்டெர்டெய்னர் படமாக அமையும் என தெரிவித்திருந்தார்.
தூய்மை பணியாளர்கள் போராட்டம்: அவரது இந்த செயல்பாடு பலத்த விமர்சனத்தை சந்தித்திருக்கிறது. ஏனெனில் சென்னை மாநகராட்சி மண்டலம் 5,6 ஆகியவற்றில் தூய்மை பணியானது தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 300க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ரிப்பன் கட்டிடம் முன்பு கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக போராடிவந்தார்கள். ஆனால் அவர்களை துணை முதலமைச்சர் சென்று சந்திக்கவில்லை.
இது தேவையா?: எளிய மக்கள் போராட்ட களத்தில் நிற்கும்போது அதிகாரத்தில் இருக்கும் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் அவர்களை சென்று சந்திக்காமல்; குடும்பத்துடன் கூலி திரைப்படம் பார்த்திருக்கிறார்கள் என பலரும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துவருகிறார்கள். அதுமட்டுமின்றி உதயநிதியின் கூலி பற்றிய ட்வீட்டை எடுத்து போட்டு; 'மக்கள் பிரச்னைகளை கவனிக்காமல்; ப்ளூ சட்டை மாறன் மாதிரி கூலி படத்துக்கு விமர்சனம் செய்துகொண்டிருக்கிறார்' என்றும் மீம்ஸ்களையும் பதிவிட்டுவருகிறார்கள். முன்னதாக, போராட்டம் நடத்திய தூய்மை பணியாளர்கள் காவல் துறையினரால் நள்ளிரவில் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டார்கள் என்பது கவனிக்கத்தக்கது.


Click it and Unblock the Notifications











