ரஜினி, கமல், விஜய் பட பாடகருக்கு செல்போன் மூலம் கொலை மிரட்டல்
மும்பை: பிரபல பின்னணி பாடகர் உதித் நாராயணுக்கு செல்போன் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
பீகாரை சேர்ந்தவர் பிரபல பின்னணி பாடகர் உதித் நாராயண். இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் ஏகப்பட்ட பாடல்கள் பாடியுள்ளார். ஷங்கர் இயக்கிய காதலன் படம் மூலம் கோலிவுட் வந்தவர் உதித். அவர் ரஜினியின் முத்து, சிவாஜி, கமலின் காதலா, காதலா, அன்பே சிவம், விஜய்யின் கோயம்புத்தூர் மாப்பிள்ளை, மதுர, ஷாஜஹான், பகவதி, திருமலை, கில்லி, சிவகாசி, குருவி, தனுஷின் படிக்காதவன் உள்ளிட்ட பல படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.

ரன் படத்தில் அவர் பாடிய காதல் பிசாசே பாடல் மிகவும் பிரபலமானது. அவருக்கு செல்போன் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் மும்பை அம்போலி பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அவர் தனது புகார் மனுவில் கூறியிருந்ததாவது,
ஏதோ தெரியாத ஒரு எண்ணில் இருந்து யாரோ ஒரு மாதமாக மிரட்டல் விடுக்கிறார். அது யார் என்று கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
அவரின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் திருடு போன செல்போனில் இருந்து உதித் நாராயணுக்கு மிரட்டல் கால்கள் வந்தது தெரிய வந்தது.
அந்த செல்போன் எண் உதித் நாராயணின் பாதுகாவலரின் பெயரில் இருந்தது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரித்தபோது ஒரு மாதத்திற்கு முன்பு வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும் வழியில் தன் செல்போன் திருடு போனதாக கூறினார்.
மிரட்டல் அழைப்புகளை அடுத்து உதித் நாராயண் வீடு இருக்கும் பகுதியை போலீசார் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











