ஜன நாயகன் லீக்.. நான் அப்பாவி.. குற்றவாளியை காப்பாத்துறாங்க.. எடிட்டர் முன் ஜாமீன் மனு!
சென்னை: ஜன நாயகன் படத்தை இணையத்தில் வெளியிட்ட விவகாரத்தில் படத்தின் ஃப்ரீலான்ஸ் எடிட்டர் உமாசங்கர், தான் ஒரு அப்பாவி எனக்கும் இதற்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் மற்றும் பூஜா ஹெட்டே, மமீதா பைஜூ உள்ளிட்ட பலர் நடித்த ஜன நாயகன் திரைப்படம் சென்சார் பிரச்சனை காரணமாக வெளியாகாமல் இருந்தது. இந்த நேரத்தில் முழு படமும் இணையத்தில் கசிந்தது. வெளியீட்டுக்கு முன்பே முழு காட்சி வெளியாகியது குறித்து படக்குழு சார்பில் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி நடந்த விசாரணையின் அடிப்படையில் போலீசார் 6 பேரை கைது செய்தனர். இதில், முக்கிய குற்றவாளி உட்பட மூன்று பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நான் அப்பாவி: இந்நிலையில், இந்த வழக்கில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள படத்தின் ஃப்ரீலான்ஸ் எடிட்டர் உமாசங்கர், நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளர். அந்த மனுவில், சம்பந்தப்பட்ட திரைப்படத்தை தான் யாருடனும் சேர்ந்து பார்க்கவில்லை என்றும், யாரிடமும் பகிரவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், படம் இணையத்தில் வெளியான சம்பவத்துடன் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை, உண்மையான குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கில், அப்பாவியான என்னை இந்த வழக்கில் இணைத்துள்ளதாகவும் உமாசங்கர் தனது மனுவில் குற்றம்சாட்டியுள்ளார். இதன் மூலம், தன்னை எதிர்த்து சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என அவர் தெரிவித்தார்.
ஏப்ரல் 30ந் தேதி விசாரணை: எடிட்டரின் மனுவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள "ஜன நாயகன்" படத்தை தயாரித்த நிறுவனம், இந்த வழக்கில் மூன்றாம் தரப்பினருக்கு எந்தவித சலுகையும் வழங்கக்கூடாது என்றும், அதற்கு எதிராக தனி மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும், படம் இணையத்தில் கசிந்த பின்னர், எடிட்டர் உமாசங்கர் திடீரென இதய நோய் ஏற்பட்டதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என தயாரிப்பு நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது. இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதி, தயாரிப்பு நிறுவனத்திற்கு தேவையான மனுவை தாக்கல் செய்ய அனுமதி வழங்கினார். அதேசமயம், வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஏப்ரல் 30ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். இந்த வழக்கு திரைப்பட உலகில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், உண்மையான குற்றவாளிகள் யார் என்பது குறித்து அடுத்த விசாரணையில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications