தொடரும் சோகம்.. சுஷாந்த் சிங்கின் தற்கொலையை தாங்க முடியவில்லை.. அதிர்ச்சியில் பலியான உறவினர்!
பாட்னா: நடிகர் சுஷாந்த் சிங்கின் இறப்பை தாங்க முடியாமல், அவரது உறவினர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது பாலிவுட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர், கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கைக் கதையை கொண்ட படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர்.

மருந்து, மாத்திரை
மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
சுஷாந்த் சிங் பயன்படுத்திய மருந்து, மாத்திரைகள் மற்றும் மருந்துசீட்டுகளை அவர் வீட்டில் இருந்து போலீசார் கைப்பற்றியுள்ளனர். அது மன அழுத்தத்துக்காக அவர் பயன்படுத்திய மருந்துகள்தான் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இருந்தும் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

இறுதிச்சடங்கு
அவரது இறுதிச்சடங்கு மும்பையில் நேற்று நடந்தது. இதில் பிரபல நடிகர்கள் விவேக் ஓபராய், ரன்தீப் ஹூடா, ராஜ்குமார் ராவ், நடிகைகள் ஸ்ரத்தா கபூர், ரியா சக்கரவரத்தி, கீர்த்தி சனான், பூஜா சோப்ரா உட்பட பலர் இதில் கலந்துகொண்டனர். இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகளை சுஷாந் சிங்கின் நண்பரும் இயக்குனருமான சந்தீஷ் சிங் செய்தார்.

தாங்க முடியாமல்
சுஷாந்தின் இறப்பை அடுத்து மன ஆரோக்கியம் பற்றிய பேச்சுகள் சினிமா உலகில் எழுந்துள்ளது. இந்நிலையில், நடிகர் சுஷாந்த் சிங்கின் இறப்பை தாங்க முடியாமல், அவரது உறவினர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சுஷாந்தின் உறவினர் சுதா தேவி. அவருக்கு அண்ணி முறை கொண்ட இவர், பீகாரில் சுஷாந்தின் வீட்டுக்கு அருகிலேயே வசித்துவந்தார்.

அதிகமாகப் பாதித்தது
இவர் கடந்த சில நாட்களாக உடல் நலமில்லாமல் இருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்ட செய்தியை கேள்விபட்டதும் அதிர்ச்சி அடைந்தார். அவர் இறப்பு சுதாதேவியை அதிகமாகப் பாதித்தது. சுஷாந்த் சிங் பற்றியே குடும்பத்தினருடன் பேசிக்கொண்டிருந்த அவர், அதிக கவலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

தாங்க முடியவில்லை
இந்த சோகத்தால், எதையும் அவர் சாப்பிடவில்லை. குடும்பத்தினர் சாப்பிட வற்புறுத்தியும் சாப்பிடாமல் இருந்து வந்தார். சுஷாந்த் இறப்பை அவரால் தாங்க முடியவில்லை. மும்பையில் நேற்று மாலை சுஷாந்த்துக்கு இறுதிச்சடங்கு நடந்த அதே நேரத்தில், சுதா தேவி பீகாரில் உயிரிழந்தார். இது குடும்பத்தினரிடையே மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











