For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நம்மைச் சுற்றிலும் உள்ள திரைப்பட நிராசையாளர்கள்

  By Shankar
  |

  - கவிஞர் மகுடேசுவரன்

  நல்ல தையற்காரர் நமக்கு அமைய வேண்டும். அப்போதுதான் நாம் உடைகளால் மிளிர்வோம். கடைகளில் விற்கும் தைப்புடைகளை வாங்கி அணிந்தாலும் நாம் விரும்பிய துணியெடுத்துத் தைத்தணிவதால் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு நிகரில்லை. இருபதாண்டுகளுக்கு முன்பு எனக்கு அப்படிப்பட்ட தையற்காரர் ஒருவர் அமைந்தார். என் அகவையொத்தவரான அவர் தையல் தொழிலில் தொடர்ச்சியான முன்னேற்றத்தைக் கண்டவர். அக்கடையில் அவரோடு அவர் தந்தையாரும் தென்பட்டார். நாள் செல்ல செல்ல கடையை நடத்துபவராகவே அப்பெரியவர் மாறிவிட்டார். ஒருநாள் என் உடைகளுக்கு அளவு கொடுத்துக்கொண்டிருக்கும்போது பெரியவரோடு உரையாட வாய்த்தது. அது அரசியல் திரைப்படம் என்று நகர்ந்தது. அப்போது அவர் கூறிய செய்தி என்னைத் திகைக்க வைத்தது. "நானும் ஒரு படத்துல ஹீரோவா நடிச்சேன். படமும் ரிலீஸ் ஆச்சு. ஆனா ஓடல...."

  என் உடைகளை அளவெடுத்துக் கொண்டிருப்பர் ஒரு திரைப்படத்தின் கதாநாயகனா ? எனக்குத் தடுமாறியது. "என்னங்க சொல்றீங்க ? நிசமாத்தானா ?" என்று கேட்டேன். "அதையேன் கேட்கறீங்க....? படம் ஓடாததால மேற்கொண்டு எந்த வாய்ப்பும் கிடைக்கல. எவ்வளவோ முயற்சி பண்ணிப் பார்த்தும் எதுவும் நடக்கல... அப்புறம் ஊருக்கே வந்துட்டேன்..."

  Unfulfilled cinema lovers around us

  அவருடைய தோற்றத்தை உற்று நோக்கினேன். நல்ல உயரமும் வாட்டசாட்டமுமான உருவம். காதுகளை மூடும்படியான பழைய காலத்து கிருதாவை அப்படியே வைத்திருந்தார். இளமையில் ஒரு நாயகனுக்குரிய தோற்றப் பொலிவோடுதான் இருந்திருப்பார் என்பது விளங்கியது. "கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்களேன்... எப்ப எடுத்த படம் ? படத்தோட பேரென்ன ?"

  "அன்னக்கிளி ரிலீசாகி சிவக்குமார் உச்சத்துல இருந்த நேரம்... படத்தோட பேரெல்லாம் வேணாம். வேற எதையும் கேட்காதீங்க... நானே எல்லாத்தையும் மறந்துட்டேன்... நீங்க விவரமாப் பேசினதால என்னை அறியாம வாய்தவறி வந்துடுச்சு... எல்லாம் போச்சு சார்... கொடைக்கானல்ல இருந்த எஸ்டேட் கைவிட்டுப் போச்சு... அந்த நினைப்பை விட்டுத் தொலைச்சுட்டு இப்பத்தான் நிம்மதியா இருக்கேன்..." என்றபோது அவருடைய குரல் தணிந்து ஒடுங்கியது. அதற்குமேல் கேட்பது நயத்தகு நாகரிகமில்லை என்பதால் என் பேச்சு வேறுபக்கம் திரும்பியது.

  திரைப்படங்களில் சிறு வேடங்களில் தலைகாட்டிய பலர் எங்கள் ஊர்த் தெருக்களில் நடந்து செல்வதைக் காணலாம். அவர்களில் ஒருவரை நான் அடிக்கடி பார்ப்பேன். அவர் பெயர் எனக்குத் தெரியாது. "கன்னித் தீவுப் பொண்ணா..." பாடலில் பணக்காரர்களில் ஒருவராக மதுக்கோப்பையை ஏந்தியபடி தோன்றுவார். ஒருமுறை நாங்கள் நடத்திய இலக்கியக் கூட்டத்திற்கு வந்திருந்த அந்நடிகர் தம் மனந்திறந்து ஓர் உண்மையைச் சொன்னார். "சினிமா முயற்சி தோற்ற பின்னாடி ஒருத்தருக்கு ஏற்படற நிராசை இருக்கே... அதுபோல கொடுமையான நிராசை வேறெதுவும் கிடையாது. காதல் தோல்விகூட அதைப்போன்ற ஒரு வடுவைத் தராது. அந்த நிராசையை எவனாலும் எப்போதும் கடக்க முடியறதில்ல... நிராசையோடவே வாழ்றதுதான் இன்னும் கொடுமை...," என்று சொன்னார். நிராசை என்னும் சொல்லின் பொருளே எனக்கு அவர் பேசியபோதுதான் விளங்கியது. தையற்காரரின் சொற்களில் ஏறியிருந்ததும் நிராசையின் கசப்புத்தான். மறதியால் கடந்துவிடலாம் என்றாலும் முடிவதில்லை. அந்த ஆசை ஆழ்மனத்தில் உருண்டு திரண்ட ஆணிவேராய் இறங்கியிருந்தது. திடீரென்று "மறந்துவிட்டேன்" என்பதுகூட ஒரு நடிப்புத்தான்.

  என் அலுவலகமுள்ள கட்டடத்தில் நெடுநாள்களாக ஒருவர் அலுவலகம் வைத்திருந்தார். அலுவலகம் என்றால் மிகச்சிறிய அறைதான். அதில் அவர்க்கென்று ஒரு நாற்காலியும் மேசையும் இருக்கும். எதிரில் பழங்காலக் கம்பிச்சுருள் மென்னிருக்கை. ஒரு தொலைபேசி. கடவுளர் ஐவர் இருக்கின்ற சாமிப்படம். இன்னும் இரண்டு படங்களில் ஒரு புதிய பேருந்து. ஒரு அம்பாசடர் மகிழுந்தின் முன் இவர் நிற்கும் படமொன்று. ஒரு நாள்காட்டி ஒரு மின்விசிறி. இவ்வளவுதான். நகருக்குள் தொலைபேசி இணைப்பு தரப்பட்ட புதிதில் வாங்கப்பட்ட தொலைபேசி அவருடையது. அது அவருடைய பொற்காலம். தற்போது வண்டித் தரகராக இருந்தார். என் கதை கவிதை ஈடுபாட்டை எப்படியோ அறிந்திருக்கிறார். ஒருநாள் புகைப்படத் தொகுப்பு ஒன்றை எடுத்துக்கொண்டு வந்து என் எதிரே அமர்ந்தார்.

  அந்தத் தொகுப்பில் கறுப்பு வெள்ளையில் திரைப்படத் தொடக்க விழாப் படங்கள் காணப்பட்டன. முக்காலித் தாங்கியில் நிற்கும் படப்பதிவுக் கருவியின் பின்னே பலர் நின்றிருந்தார்கள். தினத்தந்தியின் கால்பக்க விளம்பரம் ஒன்றும் இருந்தது. "திருப்பூர் ராஜாக்கள் பெருமையுடன் வழங்கும் என்னுயிர் நீதானே" என்ற திரைப்பட அறிவிப்பு. இயக்கம் கிருபா என்றிருந்தது. இவரும் இன்னும் மூவரும் சேர்ந்து ஒரு திரைப்படத்தைத் தயாரித்திருக்கிறார்கள். படம் பாதி வளர்ந்த நிலையில் மேற்கொண்டு தொடர முடியவில்லை. மூன்று பாடல்கள் பதிவு செய்யப்பட்டு எடுக்கப்பட்டுவிட்டன. என் எதிரே ஒரு திரைப்படத்தின் நொடித்துப்போன தயாரிப்பாளர் அமர்ந்திருக்கிறார். அவர் தம்முடைய கலைத்தொழிலின் சுவடுகளைக் காண்பித்துக்கொண்டிருக்கிறார். என்னால் நம்ப முடியவில்லை.

  தொடக்கவிழாப் புகைப்படங்களில் திரையுலகப் புள்ளிகள் பலர் இருந்தனர். நளினிகாந்த் என்னும் நடிகர் ஒயிலாகக் காணப்பட்டார். படத்திற்கு இசை தேவா. இது நடந்தபோது பாட்சா வெளியாகி அப்படத்திற்கு இசையமைத்த தேவா சந்தை மதிப்புடையவராகி இருந்தார். "நீங்க சொன்னா நம்ப மாட்டீங்க... நம்ம கட்டடத்திற்கு தேவா எத்தனை முறை வந்திருக்காரு தெரியுமா... நான் வரும்வரைக்கும் மணிக்கணக்கில் இங்கே காத்திருந்தவரு அவரு... வைகாசி பொறந்தாச்சுக்குப் பின்னாடி எங்கேயோ போய்ட்டாரு... நம்ம படத்துக்குப் போட்ட மூணு பாட்டையும் யாருக்காவது வித்துத் தரமுடியுமான்னு கேட்கப் போயிருந்தேன்... ஒரு சிகரெட் எரிந்து முடியும் நேரம் மட்டும்தாங்க பேசினார்... அதான் சினிமா உலகம்...," என்றார்.

  "ஏன் உங்கள் படத்தை முடிக்க முடியவில்லை ?" என்று கேட்டேன். "படம் பாதி வளர்ந்தபோதே பார்ட்னர்சுக்குள்ள சண்டை வந்துடுச்சு... என்னோட பணமெல்லாம் போச்சு. நாலு காரு ஒரு பஸ்சு வாடகைக்கு ஓடிட்டிருந்துச்சு... எல்லாம் போச்சு..." என்றார். என்ன நினைத்தாரோ தெரியவில்லை, தம்முடைய வேனிற்காலத்தைப் பற்றிய நினைவுகளை என்னோடு பகிர்ந்துகொண்டார். அதன்பிறகு ஒருபோதும் தம் திரையுலக நினைவுகளை என்னிடம் பேசவில்லை. சில முறை அவருடைய அறையில் 'திருப்பூர் இராமசாமி' என்னும் நடிகர் அமர்ந்திருந்ததைப் பார்த்திருக்கிறேன். அவ்வளவுதான்.

  திரைப்பட நிராசைகளை எப்படித் தின்று செரிப்பது ? நம்மோடு இருக்கும் யாரோ ஒருவர் அங்கே குட்டிக்கரணம் போட்டுப் பார்த்துவிட்டுத்தான் திரும்பியிருக்கிறார். திரைப்பட முயற்சி கனியவில்லை என்றாலும் ஏதோ ஒருவகையில் திரைப்படம் சார்ந்தே தம் பிழைப்பை அமைத்துக்கொண்டால்தான் அந்த நிராசையிலிருந்து வெளிவர முடியும். அது ஓரளவுக்கு ஆறுதல் தரக்கூடும். இல்லாவிட்டால் அது கண்ணில் விழுந்த தூசுபோல் தொடர்ந்து உறுத்திக்கொண்டேதான் இருக்கும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வெற்றியாளர்களும் தோல்வியாளர்களும் தொடர்ந்து உருவாகிக்கொண்டேதான் இருப்பார்கள். இரண்டுமே நிரந்தரமில்லை என்பது விளங்கும்போது எல்லாம் சரியாகிவிடும்.

  English summary
  Stories of unfulfilled cinema lovers around us
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X