அமிதாப் பச்சன் குடும்பத்தின் தூக்கத்தை கெடுத்த 'திருட்டு' ரசிகர்

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், தனது மனைவி ஜெயா பச்சன், மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா மற்றும் பேத்தி ஆராத்யா ஆகியோருடன் மும்பை ஜுஹு பகுதியில் உள்ள ஜல்சா என்ற வீட்டில் வசித்து வருகிறார். அந்த வீ்ட்டிற்கு பாதுகாவலர்கள் இருந்தும் கடந்த வெள்ளிக்கிழமை மர்ம ஆசாமி ஒருவன் புகுந்துவி்ட்டான். அவன் அமிதாபின் படுக்கையறையில் இருந்து ரூ.8,000 பணத்தை திருடிவிட்டு அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்தபோது வீட்டு வேலை செய்யும் பெண் பார்த்து சத்தம் போட்டார்.
இதையடுத்து பாதுகாவலர்கள் ஓடி வந்து அந்த நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த நபர் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த தீபக் கேவத்(20) என்றும், அவர் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு தான் வேலை தேடி மும்பை வந்தார் என்பதும், ரயில்வே பிளாட்பார்மில் தங்கியுள்ளார் எனபதும் தெரிய வந்தது. தான் ஒரு தீவிர அமிதாப் ரசிகன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீபக்கை மெட்ரோபாலிடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 14 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். தீபக் என்ன காரணத்திற்காக அமிதாப் வீட்டுக்குள் புகுந்தார் என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து அமிதாப் தனது பிளாக்கில் கூறியிருப்பதாவது,
மர்ம நபர் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்ததால் பரபரப்பாக இருந்தது. அந்த நபர் தற்போது போலீஸ் பிடியில் உள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பான ஜல்சாவுக்குள்ளேயே நுழைந்துவி்ட்டார். என்னதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும் எதுவும் பாதுகாப்பில்லை என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
பச்சன் குடும்பத்திற்கு ஜுஹு பகுதியில் மட்டும் ஜல்சா, பிரதீக்ஷா மற்றும் ஜனக் ஆகிய 3 வீடுகள் உள்ளன. அதில் ஜல்சாவில் அமிதாப் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். பிரதீக்ஷாவில் அமிதாபின் தம்பி அஜிதாப் வசிக்கிறார். ஜனக் பச்சன் குடும்பத்தாரின் அலுவலகமாக உள்ளது. அந்த வீட்டில் உள்ள ஜிம்மைத் தான் பச்சன் குடும்பத்தினர் தினமும் பயன்படுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











