பிரதீப் ரங்கநாதன் கிஃப்ட் கொடுத்த நண்பர்.. டியூட் ஷூட்டிங்கில் நடந்த அந்த விஷயம்.. அட அவர்தானா இவரு?
சென்னை: லவ் டுடே, டிராகன், டியூட் என வரிசையாக ஹிட்டுகளை கொடுத்தது மட்டுமின்றி அந்தப் படங்களின் மூலம் தொடர்ச்சியாக மூன்று முறை 100 கோடி ரூபாய் வசூலித்த ஹீரோ என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். இந்த வெற்றிகள் அவரது மார்க்கெட்டை உச்சத்துக்கு கொண்டு சென்றிருக்கின்றன. சூழல் இப்படி இருக்க அவர் தனது நண்பரும் உதவி இயக்குநருமான கார் ஒன்றை பரிசாக கொடுத்திருந்தார்.
இயக்குநராக தனது திரை பயணத்தை ஆரம்பித்த பிரதீப் ரங்கநாதன் இப்போது வெற்றிகரமான ஹீரோவாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அதுவும் அவர் பெற்றிருப்பது சாதாரண வெற்றி இல்லை இமாலய வெற்றி. வரிசையாக மூன்று படங்களில் 100 கோடி ரூபாய் கலெக்ட் செய்த ஹீரோ என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார். இதன் காரணமாக அவரது மார்க்கெட்டும் உச்சத்தில் இருக்கிறது.
வெற்றியை கொண்டாடும் ரசிகர்கள்: பிரதீப் ரங்கநாதனின் வரிசையான வளர்ச்சியையும், வெற்றியையும் தங்கள் வெற்றியாகவே கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள். ஏனெனில் அவர் நம்மிலிருந்து சென்ற ஒருவர் என்பதை அவரது நடை, உடை என அத்தனையும் உணர்த்துகிறது. அதன் காரணமாக அவரை தங்களது நண்பர், டியூட் என பல உணர்வுகளிலும் உறவிலும் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள் 2கே கிட்ஸ் ரசிகர்கள்.

அடுத்த படம்: லவ் டுடே, டிராகன், டியூட் என ஹாட்ரிக் வெற்றியை கொடுத்த பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐகே படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருக்கு கீர்த்தி ஷெட்டி நடிக்க; சீமான் உள்ளிட்டோரெல்லாம் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார்கள். விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. வரிசையாக கிடைத்திருக்கும் ஹிட்டுகளை இந்தப் படம் தக்க வைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
பரிசு கொடுத்த பிரதீப் ரங்கநாதன்: இது ஒருபக்கம் இருக்க தன்னுடன் பணியாற்றும் சிலருக்கு பரிசுகளையும் கொடுத்துவருகிறார் பிரதீப் ரங்கநாதன். அந்தவகையில் தனது நண்பரும், உதவி இயக்குநருமான ரமேஷ் நாராயணசாமி என்பவருக்கு கார் ஒன்றை பரிசாக கொடுத்தார். பரிசு கொடுக்கும்போது, 'உங்கள் லாயல்ட்டிக்கு என்னுடைய சின்ன பரிசு. நன்றாக வேலை செய்கிறீர்கள். இது ஒரு தொடக்கம்தான்' என்று கூறியிருந்தார்.
ரமேஷ் செய்தது: பிரதீப் ரங்கநாதன் கார் கொடுத்த வீடியோ ட்ரெண்டான நிலையில் ரமேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நன்றி தெரிவித்திருக்கிறார். அவர் போட்டிருக்கும் போஸ்ட்டில், "என்னுடைய முதல் கார் இது. எனது நண்பன் கொடுத்த பரிசு. இது சாதாரண கிஃப்ட் மட்டும் இல்லை. நம்மிடையே இருக்கும் நம்பிக்கையும், நாம் இருவரும் பகிர்ந்த பயணத்துக்கான அழகிய சின்னம். அழகான நினைவை கொடுத்து என் மேல் நம்பிக்கை வைத்திருக்கும் பிரதீப் அண்ணாவுக்கு மனமார்ந்த நன்றி. லவ் யூ" என்று எமோஷனலாக குறிப்பிட்டிருக்கிறார்.
டியூட் பட சமயத்தில் நடந்தது: இந்நிலையில் டியூட் பட சமயத்தில் நடந்த சம்பவம் ஒன்றை பார்க்கலாம். அதாவது அந்தப் படத்தின் ஷூட்டிங்போது பிரதீப் ரங்கநாதனை அமரவைத்து ரமேஷ் பைக் ஓட்டும் வீடியோ ட்ரெண்டானது. தூரத்திலிருந்து எடுக்கப்பட்டிருந்த அந்த வீடியோவில் இவர் பார்ப்பதற்கு சிவகார்த்திகேயன் போன்றே இருந்ததால்; எஸ்கே அந்தப் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கிறார் என்று ஒருதரப்பினர் கிளப்பிவிட்டார்கள். அதுதொடர்பான வீடியோவையும் ரமேஷ் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஜாலியாக பகிர்ந்திருந்தார். கோமாளி படத்திலிருந்தே பிரதீப்புடன் ஒன்றாக பயணித்துவரும் ரமேஷ் சிம்பு நடித்த ஈஸ்வரன் படத்திலும் பணியாற்றியிருக்கிறார். விரைவில் அவர் இயக்குநர் அவதாரம் எடுக்கலாம் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications











