மகனின் திருமண செலவுக்கான பணத்தை கேரள நிவாரண நிதிக்கு அளிக்கும் பாடகர்
திருவனந்தபுரம்: பாடகர் உன்னி மேனன் தனது மகனின் திருமணத்திற்காக சேர்த்த பணத்தை எல்லாம் கேரள வெள்ள நிவாரண நிதிக்கு அளிக்க முடிவு செய்துள்ளார்.
கேரள மாநிலம் குருவாயூரை சேர்ந்தவர் பாடகர் உன்னி மேனன். அவருக்கு ஆகாஷ், அங்குர் என்று இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் அங்குருக்கும், துபாயை சேர்ந்த கவிதா என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
அவர்களின் திருமணம் வரும் செப்டம்பர் மாதம் 20ம் தேதி நடக்க உள்ளது.

ஏற்பாடு
அங்குர் மேனனின் திருமணமத்தை கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள லுலு கன்வென்ஷன் சென்டரில் நடத்த முடிவு செய்தார் உன்னி மேனன். மகனின் திருமணத்தை ஊரே வியந்து பார்க்கும் அளவுக்கு பிரமாண்டமாக நடத்த எண்ணி கடந்த 9 மாதங்களாக அதற்குத் தேவையான வேலைகளை செய்து வந்தார் உன்னி மேனன்.

வெள்ளம்
கேரளாவில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன் பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. மக்கள் பலர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். கேரள மக்கள் இருக்க வீடு இன்றி அவதிப்பட்டு வரும் இந்த நேரத்தில் தனது மகனுக்கு படாடோபமாக திருமணம் செய்து வைக்க விரும்பவில்லை உன்னி மேனன்.

உன்னி மேனன்
கேரள மக்கள் வெள்ளத்தில் சிக்கி மீண்டு வந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் என் மகனின் திருமணத்தை பிரமாண்டமாக நடத்த விரும்பவில்லை. அதனால் சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் வைத்து திருமணத்தை எளிமையாக நடத்த உள்ளோம். திருமண செலவுக்கான பணத்தை கேரள வெள்ள நிவாரண நிதிக்கு அளிக்க உள்ளோம் என்று உன்னி மேனன் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் பிள்ளை
நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட வசதியாக நடிகர் ராஜீவ் பிள்ளை தனது திருமணத்தை தள்ளிப் போட்டுள்ளார். நடிகர் டொவினோ தாமஸ் தன் வீட்டையே நிவாரண முகாமாக மாற்றி மக்களுக்கு உதவி செய்து வருகிறார். கொச்சி மேயர் சவுமினி ஜெயின் தனது மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்த பணத்தை கேரள வெள்ள நிவாரண நிதிக்கு அளிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











