Vijayakanth - என்னது அந்தப் பொண்ணுக்கூட நடிக்கணுமா?.. ஊர்வசியுடன் நடிக்க மறுத்த விஜயகாந்த்.. இதுதான் காரணம்
சென்னை: விஜயகாந்த் தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாதவராக வலம் வந்தவர். அவருக்கென்று ஏகப்பட்ட பேர் ரசிகர்களாக இருந்தனர். இருக்கின்றனர். முக்கியமாக அவரால் பலரும் உதவிகள் பெற்று இப்போது நல்ல நிலைமையில் இருக்கிறார்கள். நடிகர், அரசியல்வாதி என்பதை தாண்டி விஜயகாந்த் சிறந்த மனிதர் என்று பெயர் எடுத்தவர். பலருக்கு அன்னமிட்ட அவர் ஊர்வசியுடன் நடிக்க மறுத்த விஷயம் தெரியவந்திருக்கிறது.
ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோர் பீக்கில் இருந்தபோது சினிமாவுக்குள் நுழைந்து தனக்கென தனி ரசிகர் படை சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கியவர் விஜயகாந்த். அவ்வாறு அவர் அப்படி செய்தது சாதாரண விஷயமில்லை என்பது பலரும் ஒத்துக்கொண்ட உண்மை. அதுமட்டுமின்றி பலருக்கும் விஜயகாந்த் பல உதவிகளை செய்திருக்கிறார்.

கெத்து கேப்டன்: ரசிகர்களால் கேப்டன், புரட்சி கலைஞர் என்று அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். கேப்டன் என்ற பட்டத்துக்கு உரிய முறையில் பல விஷயங்களை தனியாளாக வழி நடத்தியவர் அவர். சிவாஜியின் இறப்பில் கூட்டத்தை ஒற்றை ஆளாக கட்டுப்படுத்தியது, ஏதேனும் பிரச்னை என்றால் எதற்கும் யாருக்கும் அஞ்சாமல் முதல் ஆளாக களத்தில் குதிப்பது, நட்சத்திர கலை விழாவை திறம்பட நடத்தி காண்பித்தது என அவர் உண்மையில் கேப்டன் தான் என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறிவருகிறார்கள்.
எதிர்க்கட்சி தலைவர்: நடிகர் சங்க தலைவராக கெத்து காண்பித்த விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அப்போது அதிமுகவுடன் எழுந்த மோதலை அடுத்து சில எம்.எல்.ஏக்கள் தேமுதிகவிலிருந்து விலகினர். இதனால் ரொம்பவே அப்செட்டான விஜயகாந்த் அப்போதிருந்தே மன உளைச்சலில் இருந்ததாக அவரது குடும்பத்தினர் சொல்வதுண்டு. மேலும் அந்த சமயத்திலிருந்துதான் அவருக்கு உடல்நலக்குறைவும் ஏற்பட்டது.
உயிரிழப்பு: உடல்நிலை சரியில்லாமல் போனதிலிருந்து ஆக்டிவ் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த அவர் ரசிகர்களை அவ்வப்போது சந்திப்பதை மட்டும் வழக்கமாக வைத்திருந்தார். இந்த சூழலில் அவருக்கு மீண்டும் கடந்த மாதம் உடல்நலம் சரியில்லாமல் போனது. அதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து அவரின் உடல் முழு அரசு மரியாதையுடன் தேமுதிக அலுவலக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஊர்வசி பேட்டி: விஜயகாந்த் வளர்ந்துவந்த சமயத்தில் அவருடன் இணைந்து நடிக்க சில நடிகைகள் மறுத்தார்கள். ஆனால் காலம் செல்ல செல்ல அவர்களே விஜயகாந்த்துடன் நடித்தனர். இந்தச் சூழலில் விஜயகாந்த் நடிகை ஊர்வசியுடன் நடிக்க மறுத்த விஷயம் தெரியவந்திருக்கிறது. ஊர்வசி இப்போது பா.இரஞ்சித் இயக்கத்தில் J பேபி என்ற படத்தில் நடித்திருக்கிறார். விரைவில் அந்தப் படம் வெளியாகவிருக்கிறது. அதனையொட்டி ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுவருகிறார்.
அந்தவகையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் விஜயகாந்த் குறித்து பேசியிருக்கிறார். அவர் பேசுகையில், "குழந்தை நட்சத்திரமாக நான் இருந்தபோதே விஜய்காந்துடன் நல்ல பழக்கத்தில் இருந்தேன். அதன் காரணமக அவர் என்னை தங்கச்சி என்றுதான் அழைப்பார். நானும் அவரும் சில படங்களில் மட்டுமே ஜோடியாக நடித்திருக்கிறோம். அப்போதெல்லாம், நான் ஊர்வசியை தங்கச்சி என்று அழைப்பேன். அந்தப் பொண்ணுடன் எப்படி ஜோடியாக நடிக்கிறது என்று கேட்பார்.
காதல் காட்சிகளில்: நாங்கள் நடித்த படங்களில் காதல் காட்சிகள் வந்தால் அப்படி இப்படி சொல்லி மழுப்பிவிடுவார். அதுமட்டுமின்றி ஊர்வசி பயங்கர வெள்ளையாக இருக்கிறார். அவருடன் நான் ஜோடியாக நடிக்கும்போது எப்படி இருக்கிறேன் என்று கிண்டலாகவே கேட்பார். அவர் ரொம்பவே சிறந்த மனிதர். அவருடன் இருந்தால் ஒரு பாதுகாப்பு உணர்வு இருக்கும். நடிகர் சங்கத்தை மிக நேர்த்தியாக கையாண்டார். அனைவரையும் ஒரேமாதிரி நடத்தி உரிமையோடு சொந்தமாக நினைப்பார். அவரை எனக்கு தனிப்பட்ட முறையிலேயே ரொம்பவும் பிடிக்கும்" என்றார்.


Click it and Unblock the Notifications











