twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அரும்பொருள் ஆன பிரபாகரன்! - வாலியின் ஒரு கண்ணீர் கவிதை

    By Shankar
    |

    Vaali's poetry on Tamil Eelam and Prabhakaran's mother
    தமிழ் உணர்வில் எப்போதும் முனைப்புடன் இருந்தவர் கவிஞர் வாலி. தமிழ் மேடைகளைத் தேடி ஓடி வரும் அவரது தமிழ்.

    ஈழத் தமிழர்கள் பால் இயல்பான நேச உணர்வுடன் செயல்பட்ட வாலியின் பேனா எழுதிய இந்தக் கவிதை, படிப்போர் விழி நனைக்கும்...

    "ஒரு புலிப் போத்தை ஈன்று புறந்தந்து -
    பின் போய்ச் சேர்ந்த பிரபாகரன் தாய்க்கு;
    அந்தப் பெருமாட்டியைப் பாடுதலின்றி
    வேறு வேறுண்டோ எனது வாய்க்கு?

    மாமனிதனின் மாதாவே! - நீ
    மணமுடித்தது வேலுப்பிள்ளை
    மடி சுமந்தது நாலு பிள்ளை!
    நாலில் ஒன்று - உன்
    சூலில் நின்று - அன்றே

    தமிழ் ஈழம்
    தமிழ் ஈழம் என்றது உன் -
    பன்னீர்க் குடம்
    உடைத்துவந்த பிள்ளை - ஈழத்தமிழரின்
    கண்ணீர்க் குடம்
    உடைத்துக் காட்டுவேன் என்று...
    சூளுரைத்து - சின்னஞ்சிறு
    தோளுயர்த்தி நின்றது

    நீல இரவில் - அது
    நிலாச் சோறு தின்னாமல் -
    உன் இடுப்பில்
    உட்கார்ந்து உச்சி வெயிலில் -
    சூடும் சொரணையும் வர
    சூரியச் சோறு தின்றது
    அம்மா!
    அதற்கு நீயும் -
    அம்புலியைக் காட்டாமல்
    வெம்புலியைக் காட்டினாய்; அதற்கு,
    தினச் சோறு கூடவே
    இனச் சோறும் ஊட்டினாய்;

    நாட்பட -
    நாட்பட - உன்
    கடைக்குட்டி புலியானது
    காடையர்க்கு கிலியானது!

    'தம்பி!
    தம்பி!" என
    நானிலம் விளிக்க நின்றான் -
    அந்த
    நம்பி;
    யாழ் வாழ் -
    இனம் இருந்தது - அந்த...நம்பியை நம்பி;
    அம்மா!
    அத்தகு -
    நம்பி குடியிருந்த கோயிலல்லவா -
    உன் கும்பி!

    சோழத் தமிழர்களாம்
    ஈழத் தமிழர்களை...
    ஓர் அடிமைக்கு
    ஒப்பாக்கி; அவர்களது
    உழைப்பைத் தம் உணவுக்கு
    உப்பாக்கி;
    செம்பொன்னாய் இருந்தோரை -
    செப்பாக்கி; அவர்கள் வாழ்வை
    வெட்டவெளியினில் நிறுத்தி
    வெப்பாக்கி;
    மான உணர்வுகளை
    மப்பாக்கி;
    தரும நெறிகளைத்
    தப்பாக்கி -
    வைத்த காடையரை
    வீழ்த்த...
    தாயே உன்
    தனயன் தானே -
    தந்தான்
    துப்பாக்கி!

    'இருக்கிறானா?
    இல்லையா?"
    எனும் அய்யத்தை
    எழுப்புவது இருவர்
    ஒன்று -
    பரம்பொருள் ஆன பராபரன்;
    இன்னொன்று
    ஈழத்தமிழர்க்கு -
    அரும்பொருள் ஆன
    பிரபாகரன்!

    அம்மா! இந்த
    அவல நிலையில் - நீ...
    சேயைப் பிரிந்த
    தாயானாய்; அதனால் -
    பாயைப் பிரியாத
    நோயானாய்!

    வியாதிக்கு மருந்து தேடி
    விமானம் ஏறி -
    வந்தாய் சென்னை; அது -
    வரவேற்கவில்லை உன்னை!
    வந்த
    வழிபார்த்தே -
    விமானம் திரும்பியது; விமானத்தின்
    விழிகளிலும் நீர் அரும்பியது!

    இனி
    அழுது என்ன? தொழுது என்ன?
    கண்ணீர்க் கலப்பைகள் - எங்கள்
    கன்ன வயல்களை உழுது என்ன?
    பார்வதித்தாயே! - இன்றுனைப்
    புசித்துவிட்டது தீயே!
    நீ -
    நிரந்தரமாய்
    மூடிக்கொண்டாய் விழி; உனக்குத்
    தங்க இடம்தராத - எங்கள்
    தமிழ்மண் -
    நிரந்தரமாய்த்
    தேடிக்கொண்டது பழி!

    (பிரபாகரன் தாயார் மறைவின்போது கவிஞர் வாலி எழுதிய கவிதை இது)

    English summary
    Here is a sample of late poet Vaali's poem on Eelam Tamils and leader Prabhakaran.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X