ஓவியராக வாழ்க்கையைத் தொடங்கி இலக்கியத்தில் காவியங்கள் படைத்த வாலி

எஸ்.எஸ்.எல்.சி. படித்த பிறகு சென்னை ஓவிய கல்லூரியில் சேர்ந்து ஒரு வருடம் படித்தார். நேதாஜி எனும் பெயரில் கையெழுத்துப் பத்திரிகையும் நடத்தினார்.
பாடல்கள் புனைய ஆரம்பித்த பிறகு, ஓவியம் வரைவதை நிறுத்திக் கொண்டார்.
ஏன் என்று கேட்டபோது, "ஒருத்தனுக்கு பல விஷயங்கள் தெரிந்திருக்கலாம். ஆனால் எது சரியாக வருகிறதோ அதில் மட்டும் கவனம் செலுத்தி செய்தால்தான் மேல வர முடியும்," என்றார்.
வாலியை சினிமாவுக்கு பாட்டெழுத அழைத்து வந்தவர், சமீபத்தில் மறைந்த பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன்தான். ஸ்ரீரங்கத்தில் இருக்கும் போது, "கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்" என்ற பாடலை ஒரு தபால் அட்டையில் எழுதி டி.எம்.சவுந்தரராஜனுக்கு அனுப்பி வைத்திருந்தாராம். அந்தப் பாடல்தான் டிஎம்எஸ்ஸுடன் பழக்கத்தை ஏற்படுத்தியது.
நடிகர் நாகேஷும் வாலியும் ஒரே அறையில் தங்கி வாய்ப்பு தேடியவர்கள்.
திரை உலகில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி உள்ளார்.
'கலியுக கண்ணன்', 'கடவுள் அமைத்த மேடை', 'ஒரு செடியில் இரு மலர்கள்', 'சிட்டுக்குருவி', 'சாட்டை இல்லாத பம்பரங்கள்', 'ஒரேயொரு கிராமத்திலே' உள்பட 17 திரைப்படங்களுக்கு வாலி திரைக்கதை வசனம் எழுதி இருக்கிறார். மாருதி ராவுடன் சேர்ந்து 'வடைமாலை' என்ற படத்தை இயக்கி உள்ளார்.
சிறுகதை, கவிதை, உரைநடை என 20-க்கும் மேற்பட்ட புத்தகங்களை கவிஞர் வாலி எழுதி இருக்கிறார். அவற்றுள் அவதார புருஷன், பாண்டவர் பூமி, ராமானுஜ காவியம், கிருஷ்ண விஜயம், நிஜ கோவிந்தம், அம்மா ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
வாலி 5 முறை சிறந்த திரைப்பட பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதை பெற்று இருக்கிறார். 1 எங்கள் தங்கம் (1970), இவர்கள் இப்படித்தான் (1979), வருஷம் 16, அபூர்வ சகோதரர்கள் (1989), கேளடி கண்மணி (1990), தசாவதாரம் (2008) ஆகிய படங்களில் எழுதிய பாடல்களுக்காக அவருக்கு தமிழக அரசு விருது வழங்கி கவுரவித்தது.
கடந்த 2007-ம் அண்டு மத்திய அரசு வாலிக்கு 'பத்மஸ்ரீ' விருது வழங்கி கவுரவித்தது.
வாலியின் மனைவி பெயர் ரமண திலகம். வாலி இவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ரமண திலகம் ஏற்கனவே மரணம் அடைந்து விட்டார். வாலி-ரமண திலகம் தம்பதிக்கு பாலாஜி என்ற ஒரே ஒரு மகன் மட்டும் இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











