'சிம்பு படத்துக்கு கால்ஷீட் தராமல் இழுத்தடிக்கிறார்!'- ஹன்சிகா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்
சென்னை: சிம்பு நடிக்கும் வாலு படத்துக்கு கால்ஷீட் தராமல் இழுத்தடிக்கிறார் ஹன்சிகா என தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவித்துள்ளார் அந்தப் படத்தின் தயாரிப்பாளர்.
அஜீத்குமார் நடித்த வாலி, வரலாறு, சிட்டிசன் உள்பட பல படங்களை தயாரித்தவர், 'நிக் ஆர்ட்ஸ்' சக்ரவர்த்தி. இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு, 'வாலு' என்ற படத்தை தயாரிக்க தொடங்கினார். இந்த படத்தின் கதாநாயகன், சிம்பு. கதாநாயகி, ஹன்சிகா. விஜய் சந்தர் டைரக்டு செய்து வருகிறார்.
படத்தின் பாடல் காட்சி தவிர, மற்ற காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன.

காதல் முறிந்தது
‘வாலு' படப்பிடிப்பின்போதுதான் சிம்பு - ஹன்சிகா காதலிக்க ஆரம்பித்தனர். இதை பகிரங்கமாக அறிவிக்கவும் செய்தனர். இருவரும் நெருங்கிப் பழகினார்கள். ஆனால் இந்தக் காதல் வளர்ந்த வேகத்திலேயே முறிந்தும் போனது. இருவரும் பிரிந்துவிட்டதாக தனித்தனியாக அறிக்கையும் கொடுத்துவிட்டனர்.

சங்கத்தில் புகார்
இந்த நிலையில், ‘வாலு' படத்தை தயாரித்து வரும் ‘நிக் ஆர்ட்ஸ்' சக்ரவர்த்தி, ஹன்சிகா மீது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் செய்துள்ளார்.

ரூ 70 லட்சம் சம்பளம்
அதில், "வாலு படத்துக்காக ஹன்சிகாவுக்கு ரூ.70 லட்சம் சம்பளம் பேசப்பட்டு, அதில் ரூ.55 லட்சத்தை கொடுத்து விட்டேன். பாடல் காட்சியை படமாக்கி முடித்ததும் மீதி ரூ.15 லட்சத்தை தந்து விடுகிறேன் என்று கூறினேன்.

இழுத்தடிப்பு
ஹன்சிகா, ‘வாலு' படத்துக்கு கால்ஷீட் கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறார். அவரால் மே அல்லது ஜூன் மாதம்தான் கால்ஷீட் தர முடியும் என்று கூறுகிறார். அவ்வளவு நாட்கள் தாமதமானால் எனக்கு பெரும் நஷ்டம் ஏற்படும். எனவே ஹன்சிகாவின் கால்ஷீட்டை உடனடியாக பெற்று தரும்படி கேட்டுக்கொள்கிறேன்,'' என்று குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











