பாடகி வாணி ஜெயராமுக்கு பத்மபூஷன்.. ஆர்ஆர்ஆர் இசையமைப்பாளர் கீரவாணி, ரவீனாவுக்கு பத்மஸ்ரீ விருது!
சென்னை: குடியரசு தின நிகழ்ச்சியில் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராமுக்கு பத்ம பூசன் விருது வழங்கப்பட்டது. ஆர்ஆர்ஆர் பட இசையமைப்பாளர் கீரவாணிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கேஜிஎஃப் 2 படத்தில் பிரதமர் கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ரவீணா டாண்டனுக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
74வது குடியரசு தினம் நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. சினிமா பிரபலங்கள் பலரும் குடியரசு தினத்தை முன்னிட்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பத்ம விருதுகள்
74வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் தலைவர்கள் கொடியேற்றி நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய அரசால் வழங்கப்படும் பத்ம விருதுகள் சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலருக்கும் வழங்கப்பட்டுள்ளன. பத்மவிபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகளை பிரபலங்களுக்கு அறிவித்து உள்ளனர்.

பத்மபூஷன் வாணி ஜெயராம்
இந்திய சினிமாவின் இணையற்ற பின்னணி பாடகி வாணி ஜெயராமை கெளரவப்படுத்தும் வகையில், இந்த ஆண்டு அவருக்கு பத்மபூஷன் விருது அறிவித்து சிறப்பித்துள்ளனர். இந்தி, தமிழ், என இந்தியாவின் பல்வேறு மொழிகளில் ஏகப்பட்ட சிறந்த பாடல்களை பாடி அசத்திய தெய்வீகக் குரலுக்கு சொந்தக்காரரான வாணி ஜெயராமுக்கு விருது அறிவிக்கப்பட்ட நிலையில், ரசிகர்கள் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

சித்ரா வாழ்த்து
பாடகி சித்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் வாணி ஜெயராம் அம்மா என பத்மபூஷன் விருது வென்றதற்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார். அபூர்வ ராகங்கள், புனித அந்தோணியார், சங்கராபரணம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் வாணி ஜெயராம் பாட்டுப் பாடி அசத்திய நிலையில் இசை உலகமே பத்மபூஷன் விருது வென்ற அவரை கொண்டாடி வருகிறது.

பத்மஸ்ரீ கீரவாணி
இசையமைப்பாளர் கீரவாணிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்ஆர்ஆர் படத்திற்காக ஆஸ்கர் போட்டியிலேயே நாமினேட் ஆகி உள்ளார் இசையமைப்பாளர் கீரவாணி. கோல்டன் குளோப் விருதுகளை முன்னதாக வென்ற கீரவாணி அடுத்ததாக வரும் மார்ச் மாதம் ஆஸ்கர் விருதையும் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரவீணா டான்டனுக்கும் பத்மஸ்ரீ
கேஜிஎஃப் 2 படத்தில் ராமிகா சென் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டிய பாலிவுட் நடிகை ரவீணா டான்டனுக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பத்ம விருதுகளை வென்ற திரை பிரபலங்களுக்கு ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











