துருவ் விக்ரம் சொன்ன வார்த்தை.. மாரி செல்வராஜ் ஒவ்வொரு சீனையும் சொல்லிக் கொடுப்பாரு.. ஜானகி பேட்டி!
சென்னை: 'வாழை' படத்தில் சிவனணைந்தானின் அம்மாவாக நடித்த நடிகை ஜானகி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மாரி செல்வராஜின் இயக்கம் பற்றியும் திடீரென ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து துருவ் விக்ரம் சொன்ன வார்த்தை குறித்தும் கூறியுள்ளார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் தனது வாழ்க்கையில் நடந்த முக்கியமான சம்பவத்தை படமாக மாற்றி எடுத்துள்ளார். கடந்த வாரம் வெளியான வாழை திரைப்படம் சூரி நடிப்பில் வெளியான கொட்டுக்காளி படத்தை பின்னுக்குத் தள்ளி வசூலில் சக்கைப் போடு போட்டு வருகிறது.

வாழை படத்தில் நடித்த திவ்யா துரைசாமி, அம்மாவாக நடித்த ஜானகி, சிறுவனாக நடித்த பொன்வேல் உள்ளிட்ட பலர் படத்தின் வெற்றிக்குப் பிறகு பேட்டியளித்து வருகின்றனர்.
கலங்கடித்த கிளைமேக்ஸ்: வாழை படத்தின் கிளைமேக்ஸில் நிகழும் லாரி விபத்தில் வாழை தோப்புக்கு வாழைக்காய் சுமக்கும் வேலைக்குச் சென்ற பலர் உயிரிழந்து விடுவார்கள். அதில், தனது மகளாக நடித்த திவ்யா துரைசாமி உயிரிழந்து கிடக்கும் நிலையில், அந்த லாரியில் ஏறாமல் பள்ளிக்குச் சென்றதால் தப்பித்த கதையின் நாயகன் பசிக்காக சோறு எடுத்து சாப்பிட வரும்போது அம்மாவை பார்த்ததும் பதறிப்போய் ஓடிவிடுவான். அப்போது, அந்த பழைய சோற்றை தனது தலையிலும், நெஞ்சிலும் பூசிக் கொண்டு ஜானகி நடித்துள்ள நடிப்பை பார்த்த பலரும் அந்த காட்சியின் வலியில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றனர்.
ஜானகி அம்மா நடிப்பு: படத்தின் துவக்கத்தில் இருந்தே ஊரில் யாராவது உயிரிழந்தால் கணவரின் போட்டோவுக்கு முன் நின்று அழுது புலம்பும் கணவனை பறிகொடுத்து விட்டு மகளையும் மகனையும் வாழைக்காய் சுமந்து வளர்க்கும் வயதான தாயாகவே ஜானகி அம்மா நடித்திருப்பார். பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து அவருக்கு இந்த படத்தில் மிகப்பெரிய கதாபாத்திரத்தை மாரி செல்வராஜ் கொடுக்க அந்த கதாபாத்திரத்தை கச்சிதமாக ஏற்று நடித்து ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்றுள்ளார் ஜானகி.

சேற்றில் விழுந்து நடிப்பார் மாரி செல்வராஜ்: எனக்கு மட்டுமில்லைப்பா, படத்தில் நடித்த அத்தனை நடிகர்களும் என்ன செய்ய வேண்டும், எப்படி நடிக்க வேண்டும் என ஒவ்வொரு காட்சியையும் நடித்துக் காட்டுவார் மாரி செல்வராஜ். சேற்றில் இறங்க வேண்டும் என்றால் முதல் ஆளாக இறங்கி விடுவார். விழுந்து புரண்டு நடிப்பார். கடைசியில் அந்த முட்டிப் போட்டுக் கொண்டு நான் நடித்த காட்சியையும் அவர் தான் சொல்லிக் கொடுத்தார் என்றார்.

துருவ் விக்ரம் சொன்ன வார்த்தை: வாழை படத்தின் படப்பிடிப்பில் இருந்த போது கடைசியாக அந்த பாதகத்தி பாடல் ஷூட் நடைபெற்றது. அப்போது, மாரி செல்வராஜை பார்க்க மாஸ்க் போட்டுக்கிட்டு ஒரு தம்பி வந்தது. மாரி செல்வராஜை பார்க்க பலர் வருவார்கள், வரும் போது எங்களையும் பார்த்து விட்டு ஒரு பேச்சுக்கு வணக்கம் வைத்து விட்டு செல்வார்கள். ஆனால், துருவ் விக்ரம் தம்பி என் முன்னால் வந்து நின்று மாஸ்க்கை கழட்டி விட்டு பேசியதும் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. உங்க நடிப்பு சூப்பர்மா, இன்னும் என்னால் அதிலிருந்து வெளியே வர முடியவில்லை என்றார்.

எந்த படத்தை பார்த்துட்டுப்பா சொல்றேன் எனக் கேட்டதும், வாழை படம் தான் அம்மா மாரி செல்வராஜ் போட்டுக் காட்டினார் என்றார். அதை எல்லாம் மறக்கவே மாட்டேன் எனக் கூறியுள்ளார் ஜானகி அம்மா. மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் அடுத்ததாக பைசன் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











