பெரியாரை அவமதிக்கும் எந்த நோக்கமும் இல்லை.. வடக்குப்பட்டி ராமசாமி இயக்குநர் விளக்கம்
சென்னை: சந்தானம் நடிப்பில் வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் உருவாகியிருக்கிறது. இப்படத்தின் சிறு கிளிப்பிங் வீடியோ சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அதில் இடம்பெற்ற ஒரு வசனம் தந்தை பெரியாரை அவமதிக்கும்படி இருப்பதாக சர்ச்சை எழுந்தது. இந்த சூழலில் அந்தப் படத்தின் இயக்குநர் இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்திருக்கிறார்.
கவுண்டமணியின் ஃபார்முலாவை ஃபாலோ செய்த சந்தானம் தனது டைமிங் காமெடியால் வயிறு குலுங்க ரசிகர்களை சிரிக்க வைத்தவர். இன்றுவரை அவர் நடித்த சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், சேட்டை, ஒரு கல் ஒரு கண்ணாடி என பல படங்களின் காமெடி ரசிகர்களின் ஃபேவரைட்டாக இருக்கின்றன. எவ்வளவுக்கு எவ்வளவு பயங்கரமாக சிரிக்க வைத்தாரோ அதே அளவு அவர் சர்ச்சைகளையும் சந்தித்தார். உதாரணமாக என்றென்றும் புன்னகை படத்தில் ஒரு பெண்ணிடம் அவர் சொல்லும் வசனம் பயங்கர விமர்சனத்தை சந்தித்தது.மேலும் அடுத்தவரை ரொம்பவே உருவ கேலி செய்கிறார் என்ற விமர்சனமும் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

ஹீரோ சந்தானம்: தனது கரியரின் உச்சத்தில் இருந்த சந்தானம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. இதனையடுத்து தொடர்ந்து ஹீரோவாகவே நடித்துவருகிறார் அவர். அந்தவகையில் அவர் இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, டகால்டி, ஏ1 என வரிசையாக நடித்தார்.
காமெடி கலந்த கதைதான்: தன்னுடைய பலமான காமெடியை மையமாக வைத்து உருவாக்கப்படும் கதைகளையே தேர்ந்தெடுத்து ஹீரோவாக நடித்துவருகிறார். அப்படி அவர் நடித்த டிக்கிலோனா படம் ஓரளவு வரவேற்பைப் பெற்றது. இருந்தாலும் பெரிய ஹிட் ஒன்றுக்காக காத்திருந்தார் சந்தானம். அந்தவகையில் அவர் நடித்த டிடி ரிட்டர்ன்ஸ் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியிருந்த அந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல ரெஸ்பான்ஸை பெற்றது.
வடக்குப்பட்டி ராமசாமி: ஆனால் அடுத்ததாக வெளியான கிக் படம் அவர் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனையடுத்து 80ஸ் பில்ட் அப் என்ற படத்தில் நடித்தார். அந்தப் படமும் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இந்த சூழலில் அவர் வடக்குப்பட்டி ராமசாமி என்ற புதிய படத்தில் நடித்திருக்கிறார். படமானது பிப்ரவரி இரண்டாம் தேதி வெளியாகிறது.
சர்ச்சை: இந்நிலையில் அந்தப் படத்தின் ப்ரோமோஷனுக்காக சந்தானம் பகிர்ந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது அந்த வீடியோவில் சந்தானம் பூஜை செய்யும்படியும்; அப்போது ஒருவர் வந்து கடவுள் இல்லைனு சொல்லிட்டு சுத்திட்டு திரிஞ்சியே அந்த ராமசாமிதானே நீ என்று கேட்க; அதற்கு சந்தானம் நான் அந்த ராமசாமி இல்லை என்று சொல்லி கற்பூரத்தை காட்டும்படியும் காட்சிகள் இருந்தன.
இயக்குநர் விளக்கம்: சந்தானம் பகிர்ந்த அந்த வீடியோவுக்கு பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். இந்நிலையில் படத்தின் இயக்குநர் கார்த்திக் யோகி இந்த விவகாரம் குறித்து அளித்த விளக்கத்தில், "மக்கள் புண்படும்படியான எந்தக் காட்சியும் படத்தில் இல்லை. படத்தில் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. அது படம் பார்க்கும்போது புரியும். பொழுதுபோக்குக்காக எடுக்கப்பட்ட படம்தான் வடக்குப்பட்டி ராமசாமி.
சந்தானத்தின் ட்விட்டர் பதிவு தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. தந்தை பெரியாரை அவமதிக்கும் எந்த நோக்கமும் எங்களுக்கு இல்லை. சந்தானம் இந்த சர்ச்சைக்கு விரைவில் விளக்கம் அளிப்பார்" என குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











