சேசு மறைவு.. எங்களை வாழ்த்தி விட்டு அவர் சென்று விட்டார்.. வடக்குப்பட்டி ராமசாமி நடிகர் உருக்கம்
சென்னை: சமீபத்தில் லொள்ளு சபா டீம் ரீயூனியன் நடைபெற்ற நிலையில், பழைய நண்பர்களுடன் சிரித்து பழகி சந்தோஷமடைந்த சேஷு அன்று இரவே மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்ந்தார். எப்படியாவது அவர் உயிர் பிழைத்து திரும்பி வந்து விடுவார் என பலரும் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், அவரது உயிர் பிரிந்தது பலரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
60 வயதே ஆன நிலையில், சேஷு இவ்வளவு விரைவாக உயிரிழக்க வேண்டுமா? என ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ரெடின் கிங்ஸ்லி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேஷுவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த நிலையில், சமூக வலைதளங்களில் பலரும் சேஷுவுக்கு இரங்கல் தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர்.

நாளை பள்ளிக்கரணையில் உள்ள அவரது இல்லத்தில் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. இந்நிலையில், வடக்குப்பட்டி ராமசாமி பட பூஜையில் கடைசியாக சேஷு பேசிய காட்சிகளை பிரசாந்த் ரங்கசாமி தற்போது வெளியிட்டுள்ளார்.
சேஷு காலமானார்: லட்சுமி நாராயண சேஷு கடந்த சில ஆண்டுகளாகவே இதய நோய் பாதிப்பு காரணமாக சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில், சமீபத்தில் லொள்ளு சபா டீமுடன் ஒரு ரீ யூனியன் நடத்த ஆசைப்பட்டு அனைவரையும் ஒன்று சேர்த்திருந்தார். அந்த நிகழ்வில் கூட வந்த அனைவருமே அதிகமாக ஸ்ட்ரெய்ன் பண்ணாதீங்க, உடம்பை பார்த்துக்கோங்க என சொல்லி உள்ளனர். அன்று இரவே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சேஷு இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார் என்கிற செய்தி கேட்டு சினிமா பிரபலங்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
எல்லாரும் தீர்க்க ஆயுசுடன் இருக்கணும்: சந்தானம் நடிப்பில் கடந்த மாதம் வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் வெளியானது. அந்த படத்தில் சேஷுவுக்கு சிறப்பான கதாபாத்திரத்தை சந்தானம் கொடுத்திருந்தார். அந்த படத்தின் பூஜையின் போது சந்தானத்துக்கு அடுத்தடுத்து பெரிய வெற்றி கிடைக்கணும், இந்த இயக்குநர் இன்னும் பல படங்கள் பண்ணனும், தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்கணும், இங்குள்ள அனைவரும் தீர்க்க ஆயுசுடன் ஆரோக்கியமாக பல வருஷம் வாழணும் என சேஷு பிரார்த்தனை செய்த வீடியோவை அந்த படத்தில் நடித்த விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி சற்று முன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
எங்களை வாழ்த்தி விட்டு: "சேசு அண்ணன் - வடக்குப்பட்டி ராமசாமி பூஜையின் பொழுது . எங்களை வாழ்த்தி விட்டு அவர் சென்று விட்டார்!" என்றும் உருக்கமாக பதிவிட்டுள்ளார் பிரசாந்த் ரங்கசாமி.


Click it and Unblock the Notifications











