For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கருணாநிதி முன்னிலையில் விஜயகாந்த்தை தாறுமாறாக விளாசி விமர்சித்த வடிவேலு

  By Sudha
  |

  Vadivelu
  திருவாரூர்: முதல்வர் கருணாநிதி தலைமையில் திருவாரூரில் நேற்று நடந்த திமுக பிரசாரக் கூட்டத்தில் நடிகர் வடிவேலு, தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை ஒருமையில் விளித்து, குடிகாரன், லூசு என்றெல்லாம் தாறுமாறாக விமர்சித்துப் பேசினார்.

  நேற்றைய கூட்டத்தில் வடிவேலுவும் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால் அவர் யாரைக்குறி வைத்து இதில் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. விஜயகாந்த்தை குறி வைத்து அவர் கடுமையாக பேசப் போகிறார் என்ற பேச்சும் எழுந்தது.

  அதற்கேற்ப நேற்று அத்தனை பேர் முன்னிலையிலும் விஜயகாந்த்தை இந்த சொல் தான் என்றில்லாமல் பாரபட்சம் பார்க்காமல் கடுமையாக திட்டிப் பேசினார் வடிவேலு. அவர் பாணியில் சொல்வதென்றால் நிச்சயம் விஜயகாந்த் காதில் ரத்தமே வந்திருக்கும். அவ்வளவு மோசமாக விமர்சித்துப் பேசினார் வடிவேலு.

  குடிகாரன், லூசு என்றெல்லாம் விஜயகாந்த்தை கடுமையாக தாக்கினார் வடிவேலு. மேலும் விஜயகாந்ததை அவன், இவன் என்று ஒருமையிலேயே அவை அடக்கின்றி வடிவேலு பேசியதால் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்டவர்கள் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தனர். அதேசமயம், வடிவேலுவின் பேச்சை அமைச்சர் மு.க.அழகிரி குலுங்கிக் குலுங்கி சிரித்து ரசித்தார். கூட்டத்தினரும் வடிவேலு பேச்சை சிரித்துக் கேட்டனர்.

  வடிவேலு பேச்சிலிருந்து சில பகுதிகள் (தாறுமாறாக பேசிய வார்த்தைகளைத் தவிர்த்து):

  இந்த பூமிக்குள் வரும்போது இந்த மண்ணை எடுத்து என் நெற்றியில் பூசிவிட்டுதான் வந்தேன். அப்படி ஒரு மண். இந்த மண். நான் திரையில் காமெடி செய்து அனைவரையும் சிரிக்க வைக்கிறேன். ஆனால் என்ன செய்தாலும் ஒரு மனிதனுக்கு எது தேவைப்படுகிறது.

  உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் இவை கண்டிப்பாக தேவைப்படுகிறது. நான் மக்களில் ஒருவனாக பேசுகிறேன். கலைஞர் போட்ட திட்டங்களை கேட்டபோது, கண்ண கட்டுது. எதிர் அணி மிரண்டு கிடக்கிறது. எல்லா பக்கமும் அணைகட்டி வைத்துவிட்டார் கலைஞர்.

  கர்ப்பிணி பெண்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். கருவில் உள்ள குழந்தையும் பயன் அடைகிறது. நான் 25 வயதுக்கு மேல்தான் சம்பாதிக்க ஆரம்பித்தேன். ஆனால் கருவில் உள்ள குழந்தை மாதம் மாதம் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறது.

  இப்போது நான் மேட்டருக்கு வருகிறேன். ஒருவர் முந்தாநாள் கட்சியை ஆரம்பித்துவிட்டு, நாளைக்கு முதல் அமைச்சர் என்று சொல்லிக்கொண்டு திரிகிறார். என்னவென்றால் அவர் கல்யாண மண்டபத்தின் இடையில் இரண்டு தூண் வந்துவிட்டதாம். இதுக்காக ஒரு கட்சியை ஆரம்பித்து, நான் அடுத்த முதல் அமைச்சர் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

  நான் கேட்கிறேன் முதல் அமைச்சர் பதவி என்ன மியூசிக்கல் சேரா. அந்த பதவி என்ன சாதாரண பதவியா. கல்யாண மண்டபத்தில் இரண்டு தூண் வந்ததற்கு, உடனே கட்சியை ஆரம்பித்து முதல் அமைச்சர் என்று சொல்லிக் கொள்கிறீர்களே.

  இப்ப நான் சொல்கிறேன், நீ முதல் அமைச்சர் என்றால் நான் பிரதமர் (கருணாநிதியைப் பார்த்து) அய்யா, தப்பா நினைச்சுக்கக் கூடாது. நீ பிரதமர் என்றால் நான் ஜனாதிபதி. நீ ஜனாதிபதி என்றால் நான் ஒபாமா.

  ஒருத்தர் என்னிடம் கேட்டார். ஏங்க அவர எதிர்த்து நிற்க போறேன் என்று சொன்னீர்களே, நிற்க போறீங்களா என்றார். அவரை எதிர்த்து நின்றால் எனக்குத்தான் கேவலம். அதனால நான் அந்த கேள்வியை ரிஜக்ட் செய்து விட்டேன். இப்ப மொத்த டீமையும் காலி செய்வதுதான் என் வேலை.

  இந்த இடத்துல அவரைப் (விஜயகாந்த்) பத்தி பேசக் கூடாது. காரணம், அதற்கு அவருக்கு தகுதி இல்லை. இருந்தாலும் சொல்ல வேண்டியதை சொல்லித்தானே ஆகனும்.

  முதல் அமைச்சர் என்று சொல்லிக்கொண்டு 41 சீட் வாங்க போனீர்களே. அங்க என்ன முதல் அமைச்சர் பதவி கொடுப்பார்களா. மிகப்பெரிய வீராப்பா பேசினீங்க.

  அந்த கட்சி பெயர் கூட வாயில் வரமாட்டேங்குது. ஏதோ நாக்கு மூக்காவா, தேக்கு மூக்காவா, ஏதோ சொல்றாங்க. முதல் அமைச்சர் என்று சொல்லிக்கொள்வதோடு அல்லாமல், 2 ரூபாய்க்கு ஒரு தொப்பியை வாங்கி தலையில் மாட்டிக்கொண்டு, அதேபோல் கண்ணாடி, கர்சிப் வாங்கி மாட்டிக்கிட்டு போஸ் கொடுக்கிறார். கருப்பு எம்ஜிஆர் என்று சொல்லிக்கொள்கிறார். நீங்கள் கருப்பு எம்ஜிஆர் என்றால் நான் கருப்பு நேரு.

  நான்தாங்க கருப்பு நேருன்னு சொல்லிக்கிட்டு சோனியா காந்தி கிட்ட போய் பேசினா, என்ன வெளக்குமாத்தாலேயே அடிக்க மாட்டாங்க. பள்ளிக்கூடத்தில மாறுவேடப் போட்டியில போட வேண்டிய வேஷத்தையெல்லாம் பப்ளிக்காப் போட்டுக்கிட்டு பேசினா எப்படி.

  கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துறாங்களாம். இதுகுறித்து செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, முதல் ரவுண்டு முடிஞ்சிருக்கு, ரெண்டாவது ரவுண்டு முடிஞ்சிருக்குன்னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க. கடைசிலதான் அது தண்ணி அடிக்கிற ரவுண்டுன்னு எல்லோருக்கும் புரிஞ்சது.

  நான் இந்த அணிக்கு வர காரணம் அண்ணன் அழகிரி மற்றும் அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களும்தான். இரண்டு பேரும் சிங்கக்குட்டி மாதிரி. கலைஞர் ஆட்சிக்கு வந்தால் அவர் சொன்னதை செய்வார். சொல்லாததையும் செய்வார். இன்னும் வேணும்னு போய் கேட்டா அதையும் செய்வார் என்றார் வடிவேலு.

  வடிவேலுவின் பேச்சில் விஜயகாந்த்தை மட்டும் அவர் கடுமையாக தாக்கிப் பேசினார். அதேசமயம், ஜெயலலிதா குறித்தோ, கூட்டணியின் மற்றவர்கள் குறித்தோ அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

  English summary
  Actor Vadivelu blasted DMDK leader Vijayakanth in Thiruvarur DMK meeting in front of CM Karunanidhi. He was in full swing to slam Vijayakanth by uttering harsh comments on him. Cadres were enjoying Vadivelu's blsat against Vijayakanth. But he never used any single word against Jayalalitha.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X