20 ரூம்களுடன் பிரமாண்ட வீடு கட்டும் வடிவேலு?.. வளர்த்துவிட்டவங்களை கண்டுக்கலையே?.. ரசிகர்கள் கேள்வி
சென்னை: ரசிகர்களால் வைகைப்புயல் என்று அழைக்கப்படுபவர் வடிவேலு. அவர் சில பிரச்னைகளால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியிருக்கிறார். அந்தவகையில் மாமன்னன் படம் மெகா ஹிட்டடித்தது. அடுத்தாக ஃபகத் பாசிலுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார். இந்த சூழலில் அவர் பிரமாண்ட வீடு கட்டப்போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
சினிமாவின் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் வடிவேலு. ராஜ்கிரணால் அறிமுகப்படுத்தப்பட்ட அவர் கவுண்டமணி, செந்தில் உச்சத்தில் இருந்தபோது அவர்களுடன் சேர்ந்து சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார். அந்தக் காலகட்டத்தில் விவேக்கும் வளர்ந்துவந்தார். எனவே வடிவேலு வளர்வதற்கு கடுமையான போட்டி சூழலே இருந்தது. ஆனால் எதற்கும் அஞ்சவில்லை வடிவேலு.

தனி பாணி: தன்னுடைய காமெடிகளில் தன்னை தானே தாழ்த்திக்கொண்டு மக்களை சிரிக்க வைத்தார் வடிவேலு. அதேபோல் எந்த ஈகோவும் இல்லாமல் விவேக்குடனும் சேர்ந்து நடித்தார். இதனால் அவரது வளர்ச்சி ஆரோக்கியமாகவே இருந்தது. ஒருகட்டத்தில் வயது மூப்பு காரணமாகவும்; காலம் மாறியதன் காரணமாகவும் கவுண்டமணியும் செந்திலும் சினிமாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்க ஆரம்பித்தனர்.
வைகை புயல்: அந்த வெற்றிடத்தை சரியாக பயன்படுத்திக்கொண்டார் வடிவேலு. தனக்கென தனி டீமை செய்து காமெடி செய்து ரகளைகட்டி அடித்தார். இதனால் அவரது வளர்ச்சி 2000களின் தொடக்கத்தில் புயல் வேகத்தில் இருந்தது. அவர் இல்லாத படங்களே இல்லை என்ற நிலைதான் அப்போது இருந்தது. பல படங்களில் நடித்தாலும் ஒவ்வொரு காமெடி காட்சியையும் வித்தியாசமான முறையிலும் புதிய பாணியிலும் நடித்து அப்ளாஸை அள்ளினார் வைகை புயல் வடிவேலு.
பஞ்சாயத்து: இப்படி படு பயங்கரமாக வளர்ந்து அவரது கிராஃப் உயரத்தில் இருந்தது. ஆனால் அவர் ஏறிய அரசியல் மேடை அந்த கிராஃபை சட்டென்று கீழே இறக்கியது. 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். அப்போது ஜெயலலிதா, விஜயகாந்த்தை கடுமையாக தாக்கி பேசினார். ஆனால் அவர் எவ்வளவு பேசியும் திமுக அந்தத் தேர்தலில் தோல்வியையே சந்தித்தது.
பயந்த திரையுலகினர்: திமுக தோல்வியடைந்து அதிமுக ஆட்சிக்கு வந்தது. அப்போது ஒட்டுமொத்த திரையுலகிலும் ஒரு எண்ணம்தான் இருந்தது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தாகிவிட்டது அவரையும், அவரது கட்சியையும் எதிர்த்து பேசிய வடிவேலுவை வைத்து இனியும் படம் செய்தால் பிரச்னை உருவாகும் என்பதுதான் அது. அதன் காரணமாக வடிவேலு கொஞ்சம் கொஞ்சமாக ஓரங்கட்டப்பட்டார்.
ஓய்ந்த பஞ்சாயத்து: இதனையடுத்து இயக்குநர் ஷங்கர் தயாரிக்கவிருந்த படம் தொடர்பான பிரச்னையிலும் சிக்கினார் வடிவேலு. ஒருவழியாக அனைத்து பஞ்சாயத்துக்களும் முடிந்து நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். ஆனால் அந்தப் படம் ஓடவில்லை. அடுத்ததாக நடித்த மாமன்னன் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அடுத்ததாக ஃபகத் பாசிலுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படி இரண்டாவது இன்னிங்ஸில் பிஸியாக நடித்துவருகிறார்
பிரமாண்ட வீடு: வடிவேலு சென்னையில் செட்டில் ஆகிவிட்டாலும் தனது சொந்த ஊரான மதுரையில் நல்லது கெட்டது என அனைத்தையும் செய்வார். தனது குடும்பத்தினரையும் கூட்டு குடும்பமாக மதுரையிலேயே வைத்திருக்கிறார். இந்நிலையில் வடிவேலு புதிய வீடு கட்டவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி மொத்தம் 20,000 சதுர அடியில் 20 ரூம்களுடன் பிரமாண்டமாக அந்த வீட்டை கட்டவிருக்கிறார். அந்த வீட்டில்தான் இனி தனது குடும்பத்தினரை வைக்கவும் திட்டமிட்டிருக்கிறாராம். இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் வீடு கட்டுவதெல்லாம் மகிழ்ச்சிதான். ஆனால் தன்னை வளர்த்துவிட்டவர்களை கண்டுகொள்ளாமல் இந்த உலகத்தையே வாங்கினாலும் நிம்மதி இருக்குமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











