கமல் தயாரிப்பில் உதயநிதி நடிக்கவிருந்த படம் இதுதானா..? உண்மையை போட்டுடைத்த வடிவேலு!
மதுரை: அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட உதயநிதி, தனது இறுதி திரைப்படம் மாமன்னன் தான் என அறிவித்திருந்தார்.
மாரி செல்வராஜ் இயக்கும் இந்தப் படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியிருந்த உதயநிதி, அதிலிருந்து விலகுவதாகவும் அறிவித்தார்.
உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் உருவாகவிருந்த அந்தப் படம் குறித்து தற்போது வடிவேலு பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.

மாமன்னன் உதயநிதி
ரெட் ஜெயன்ட் மூலம் பட தயாரிப்புகளில் ஈடுபட்டு வந்த உதயநிதி, பின்னர் அவரே ஹீரோவாகவும் நடித்து வந்தார். உதயநிதி நடிப்பில் தற்போது கண்ணை நம்பாதே திரைப்படம் வெளியாகியுள்ளது. இதனிடையே தற்போது அமைச்சர் பொறுப்பில் இருப்பதால், மாமன்னன் தான் தனது கடைசிப் படம் என அறிவித்துவிட்டார். மாரி செல்வராஜ் இயக்கும் இந்தப் படத்தில் வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கமல் - உதயநிதி கூட்டணி
முன்னதாக கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உதயநிதி ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியிருந்தார். விக்ரம் வெற்றி விழாவின் போது, ராஜ்கமல் ஃபிலிம்ஸில் உதயநிதி ஹீரோவாக நடிக்கும் படம் குறித்து கமல் அறிவித்தார். இந்தப் படம் தமிழ்நாட்டில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை பின்னணியாகக் கொண்டு உருவாக உள்ளதாகவும் கூறியிருந்தார். ஆனால், அமைச்சர் பொறுப்பேற்ற பின்னர் இந்தப் படத்தில் இருந்து விலகுவதாக உதயநிதி அறிவித்துவிட்டார்.

உண்மைச் சம்பவம் இதுதான்
இந்நிலையில், கமல் - உதயநிதி கூட்டணியில் உருவாகவிருந்த படம் குறித்து நடிகர் வடிவேலு மனம் திறந்துள்ளார். மதுரையில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் புகைப்பட கண்காட்சியை அமைச்சர் மூர்த்தியுடன் இணைந்து நடிகர் வடிவேல் தொடங்கி வைத்தார். அதன்பின்னர் பேசிய வடிவேலு, "இந்த கண்காட்சியை அனைவரும் பார்க்க வேண்டும். ஜெயலலிதா உட்பட எல்லா தலைவர்களுடனும் ஸ்டாலின் இருந்த புகைப்படங்கள் இங்கு இருக்கின்றன. முதலமைச்சர் ஜெயிலில் இருப்பது போன்ற புகைப்படங்கள் இருக்கின்றன. இதுதான் உதயநிதி நடிப்பில் திரைப்படமாக உருவாக இருந்தது என்றுள்ளார்.

மிசாவில் கைதான ஸ்டாலின்
அதாவது, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவிருந்த படத்துக்கு மிசா என டைட்டில் வைக்கப்பட்டிருந்தது. மிசாவில் கைதான முதலமைச்சர் ஸ்டாலினின் பயோபிக் தான் அந்தப் படம். ஆனால், எதிர்பாராதவிதமாக மாமன்னன் தான் தனது கடைசிப் படம் என உதயநிதி அறிவித்துவிட்டதாக வடிவேலு கூறியுள்ளார். இதன்மூலம் கமல் - உதயநிதி இணையவிருந்தது முதலமைச்சர் ஸ்டாலினின் வாழ்க்கை வரலாறு என்பது தெரியவந்துள்ளது.

மீண்டும் உருவாகிறதா மிசா?
இந்தப் படத்தின் இயக்குநர் யார் என்ற அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், உதயநிதி நடிக்கவிருந்த படத்தில் அவருக்குப் பதிலாக விஜய் சேதுபதி நடிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. விக்ரம் படத்தில் இணைந்து நடித்ததில் இருந்து கமலும் விஜய் சேதுபதியும் நெருங்கிவிட்டனர். அதனால் உதயநிதிக்குப் பதிலாக விஜய் சேதுபதியை நடிக்கவைக்க கமல் முடிவு செய்துள்ளாராம். இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











