வெளிநாட்டில் இருந்து வந்து வாக்களித்தவர்களுக்கு.. வடிவேலு தக் லைஃப் பதில்.. இது வேறமாதிரி இருக்கு
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்துவிட்டது. மாலை 5 மணி நிலவரப்படி, மொத்தமாக 82.24 சதவீதம் வாக்கு பதிவானதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் நடிகர் வடிவேலு தனது வாக்கினை செலுத்திவிட்டு, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது வடிவேலு செய்தியாளர்களைச் சந்திக்கையில், எந்த முறையும் இல்லாததை விடவும், இம்முறை வெளிநாட்டில் இருந்து அதிக அளவிலான வெளிநாடு வாழ் தமிழர்கள் அதிகமானோர் வந்து வாக்கு செலுத்தி உள்ளனரே என்று கேள்வி கேட்டதற்கு, " நல்ல விஷயம் தானே, ஏன் வெளிநாட்டில் இருந்து வந்து வாக்குச் செலுத்தினாய், யாரைக் கேட்டு வந்தாய் என்று கேள்வியா கேட்க முடியும்.நம்ம மக்கள் தானே, நமது தமிழ்நாடு மக்கள் தானே, சந்தோசமாக வந்து வாக்குச் செலுத்திவிட்டு போகட்டுமே, மக்கள் ஆர்வமாக வந்து வாக்குச் செலுத்தியுள்ளார்கள் என்பது மகிழ்ச்சி தானே என்று தெரிவித்தார்.

அதேபோல் வெளிநாட்டில் இருந்து மக்கள் அதிகமாக வந்து வாக்கு செலுத்தியதற்கு காரணம், தேர்தல் ஆணையம் ஏற்படுத்திய விழிப்புணர்வா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, " ரொம்ப நாட்களாக போடமால் இருக்கிறோம், அதனால் இந்த முறை சென்று வாக்குச் செலுத்தலாம் என யோசித்து இருப்பார்கள், ஏன் என்றால் அவர்கள் ஓட்டை வேறு யாராவது போட்டுக் கொண்டு உள்ளார்களா என்ற சந்தேகம் இருக்கும் அல்லவா அதனால் வந்திருப்பார்கள்.
முன்பு இறந்தவர்கள் வாக்கை எல்லாம் போட்டுக் கொண்டு இருந்தார்கள். வெளிநாட்டிலிருந்து வந்து வாக்குச் செலுத்தியவர்களை நான் பாராட்டுகிறேன். தேர்தல் ஆணையம் சிறப்பாக யோசித்து இந்த தேர்தலை நடத்தி வருகிறார்கள்" என்று பேசினார். வடிவேலுவின் இந்த கருத்து பலரது கவனத்தை ஈர்த்தது. மேலும் பலர் வடிவேலு எல்லாவற்றிகும் தனது பாணியில் நகைச்சுவையாகவே பதில் அளிக்கிறாரே என்றும் பதிவிட்டு வருகிறார்கள். இம்முறை தமிழ்நாடு அரசியல் களத்தில் திரைத்துறையில் இருந்து நடிகர் விஜய் களமிறங்கி உள்ளதால், தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்ற கேள்வி பலருக்கும் எழுந்து வருகிறது. மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications