மகளின் கல்யாணத்துக்கு வரலனு உசுப்பேத்துவாங்க.. கவலைப்படாத.. கிங் காங்கிடம் ஓபனாக பேசிய வடிவேலு
சென்னை: நடிகர் கிங் காங்கின் மகள் கீர்த்தனாவின் திருமணம் சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்தது. கோயிலில் சிம்ப்பிளாக திருமணத்தை நடத்திய அவர்; வரவேற்பை சென்னையில் இருக்கும் தனியார் ஹோட்டல் ஒன்றில் நடத்தினார். அதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திருமாவளவன், ஜெயக்குமார் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் திரைத்துறையினரும் கலந்துகொண்டார்கள்.
கிங் காங் கோலிவுட்டில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவராக வலம் வந்துகொண்டிருந்தவர். 90களில் நடிக்க ஆரம்பித்த அவர் ஏராளமான படங்களில் நடித்தார்.மாற்று திறனாளியாக இருந்தாலும்; தன்னை உயரத்தை வைத்து கிண்டல் செய்தவர்கள் மத்தியில்; அதே உயரத்தை வைத்து வளர்ந்தவர் அவர். ரஜினிகாந்த்துடன் அதிசய பிறவி படத்தில் நடித்தபோது அவர் ஆடிய பிரேக் டான்ஸ் இன்றுவரை சமூக வலைதளங்களில் உலாவிவருவது குறிப்பிடத்தக்கது.
மற்ற மொழிகளிலும்: தமிழில் பிஸியாக நடித்து வளர்ந்துகொண்டிருந்த அவருக்கு மற்ற மொழிகளிலும் வாய்ப்புகள் கிடைத்தன. அதன்படி கன்னடம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட நூறு படங்கள்வரை நடித்திருக்கும் அவர்; வடிவேலுவுடன் சேர்ந்தும் பல படங்களில் நடித்துள்ளார். இரண்டு பேரும் இணைந்து செய்த காமெடிகள் இன்றுவரை பலரை சிரிக்கவும், ரசிக்கவும் வைக்கிறது.

மகளின் காதல்: கிங் காங்கிற்கு கீர்த்தனா என்ற மகள் இருக்கிறார். அவர் நவீன் என்பவரை காதலித்திருக்கிறார். இந்தக் காதலுக்கு வீட்டிலிருந்து சம்மதமும் கிடைத்துவிட்டது. அதனையடுத்து அவர்கள் இரண்டு பேருக்கும் திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை தொடங்கிய அவர்; ஏராளமான நடிகர்களுக்கு தேடி தேடி சென்று தனது மகள் திருமண அழைப்பிதழை கொடுத்தார். அது பெரிய கவனத்தை ஈர்த்தது.
நடந்து முடிந்த திருமணம்: திட்டமிட்டபடி சில நாட்களுக்கு முன்பு சென்னை பெசன்ட் நகரில் இருக்கும் முருகன் கோயிலில் கீர்த்தனா - நவீன் தம்பதிக்கு திருமணம் நடந்து முடிந்தது. திருமணத்தில் நெருக்கமானவர்களும், உறவினர்களும், சில நடிகர்களும் கலந்துகொண்டார்கள். அதனையடுத்து நடந்த திருமண வரவேற்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். அதேசமயம் கிங் காங் பத்திரிகை வைத்தவர்களில் பாதி பேர் திருமணத்துக்கு வரவில்லை. இருப்பினும் அதனை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றே தெரிகிறது.
ஃபோனில் பேசிய வடிவேலு: இந்நிலையில் கிங் காங்கிடம் நடிகர் வடிவேலு ஃபோனில் பேசியிருக்கிறார். அவர் பேசுகையில், "உங்கள் மகளின் திருமணத்துக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வந்ததே தமிழ்நாட்டிலிருந்து எட்டரை கோடி பேரும் வந்தது போன்றது. அத்தனை பேரும் வந்தாலும் உங்கள் வீடு தாங்குமா?..நீங்கள் பத்திரிகை வைத்தவர்கள் வரவில்லை என்று பலர் உசுப்பேத்துவார்கள். அதை நினைத்தெல்லாம் கவலைப்படாதீர்கள். அதான் முதலமைச்சரே வந்துவிட்டாரே" என்றார். முன்னதாக நடிகர் மன்சூர் அலிகானும், 'கிங் காங் நான் ஒரு படத்தின் ஷூட்டிங்கிற்கு வந்து மதுரையில் மாட்டிக்கொண்டேன். விரைவில் சந்திக்க வருவேன். பிரியாணி எடுத்து வைக்க வேண்டும்' என தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications











