தலைவர் 170-ல் இணையும் வைகைப் புயல்… ரஜினி – வடிவேலு காம்போவில் காத்திருக்கும் காமெடி கலாட்டா
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இரண்டு படங்களில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்தப் படங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நவம்பர் 5ம் தேதி பூஜையுடன் தொடங்கவுள்ளது.

லைகா தயாரிப்பில் சூப்பர் ஸ்டார்
சன் பிக்சர் தயாரிப்பில், நெல்சன் இயக்கும் 'ஜெயிலர்' படத்தில் ரஜினிகாந்த் தற்போது நடித்து வருகிறார். ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஜெயிலர் படத்தை முடித்துவிட்டு லைகா தயாரிக்கும் இரண்டு படங்களில் ரஜினி நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. ஆனால், இந்தப் படங்களின் இயக்குநர் யார்?, ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்ற தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

நவம்பர் 5ம் தேதி பூஜை
லைகா தயாரிப்பில் ரஜினி இரண்டு படங்களில் நடிப்பதை அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி தமிழ் குமரன் உறுதி செய்திருந்தார். தலைவர் 170, தலைவர் 171 ஆகிய இந்த இரண்டு படங்களில், ஒரு படத்தின் பூஜை நவம்பர் 5ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. அப்போது படத்தின் இயக்குநர் யார் என அறிவிக்கப்படும் என தெரிகிறது. மேலும், இந்த நிகழ்ச்சியிலேயே தலைவர் 171 படத்தின் அப்டேட்டும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்போது ஒரு படத்தில் மட்டுமே ரஜினி கமிட் ஆகும் நிலையில், இப்போது ஒரே நேரத்தில் இரண்டு படங்களுக்காக அவர் கால்ஷீட் கொடுத்துள்ளது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைவர் 170ல் வைகைப்புயல்
இந்நிலையில், மணிரத்னம், சிபி சக்கரவர்த்தி தேசிங்கு பெரியசாமி அல்லது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இவர்களில் ஒருவர் தலைவர் 170 படத்தை இயக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரும்பாலும் தலைவர் 170 படத்தை சிபி சக்கரவர்த்தியே இயக்குவார் என சொல்லப்படுகிறது. இதனிடையே இந்தப் படத்தில் வைகைப்புயல் வடிவேலும் ரஜினியுடன் இணைந்து நடிக்கவுள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. ரஜினி - வடிவேலு கூட்டணியில், சந்திரமுகி, குசேலன் படங்களின் காமெடிக் காட்சிகளைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. அதனால், தலைவர் 170 காமெடியில் சும்மா அதகளம் செய்யும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காமெடி ஜானர் படமா?
ரஜினி நடிப்பில் இறுதியாக வெளியான அண்ணாத்த ஃபேமிலி ஜானரில் செண்டிமென்ட் படமாக இருந்தது. ஆனாலும், அது பெரிய வரவேற்பை பெறவில்லை. தற்போது உருவாகி வரும் ஜெயிலர், ஆக்சன் ஜானரா அல்லது நெல்சனின் வழக்கமான டார்க் காமெடி படமா எனவும் தெரியவில்லை. அதேநேரம், தலைவர் 170 படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தியாக இருந்தால், அது காமெடி ஜானர் படமாக இருக்கும் என்றே சொல்லப்படுகிறது. சிபியின் முதல் படமான 'டான்' காமெடி ப்ளஸ் எமோஷனலாக இருந்தது. அதேபோல், ரஜினியும் காமெடி ஜானரில் படம் நடித்து பல வருடங்கள் ஆகிவிட்டதால், இது முழுக்க முழுக்க நகைச்சுவை திரைப்படமாக இருக்கும் என்றே தகவல் வெளியாகியுள்ளது. அதனால், வடிவேலுவின் கால்ஷீட்டை படக்குழு வாங்கியுள்ளதாம்.


Click it and Unblock the Notifications











