Maamannan : இசை புயலுடன் இணைந்த வைகை புயல்.. மாமன்னன் படத்தின் சூப்பர் அப்டேட்!
சென்னை : இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நடிகர் வடிவேலு ஒரு பாடலை பாடி உள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள மாமன்னன் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் தயாரித்து வருகிறது.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே முடிந்த நிலையில் படம் ஜூன் மாதம் திரையரங்கில் வெளியாக உள்ளது.

மாரிசெல்வராஜ் : பரியேறும் பெருமாள், கர்ணன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தை இயக்கி வருகிறார். இதில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும், ஃபஹத் பாசில், வடிவேலு ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு சேலம், சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்து கடந்த, செப்டம்பர் மாதம் நிறைவடைந்தது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
நடிகர் வடிவேலு : நகைச்சுவை நடிகரான வடிவேலு இதுவரை ஹீரோக்களுக்கு தந்தையாக நடிக்காத நிலையில், மாமன்னன் படத்தில் உதயநிதிக்கு தந்தையாக நடித்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மே தினத்தில் வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில், ஒருநாள் முன்னதாகவே போஸ்டரை படக்குழு வெளியிட்டது. அதில் உதயநிதி ஸ்டாலின் பட்டாக்கத்தியுடன் அமர்ந்திருப்பது போன்ற போஸ்டர் மிரட்டலாக இருந்தது. மேலும், ஜூன் மாதம் வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்தது.

பாட்டு பாடிய வடிவேலு : இந்நிலையில், இப்படத்தின் முக்கிய கேரக்டரில் வைகைப்புயல் வடிவேலு நடித்திருந்ததாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த படத்தில் அவர் ஒரு பாடலையும் பாடியுள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இந்த பாடலின் ஒலிப்பதிவின் போது ஏஆர் ரஹ்மான் உடன் வடிவேலு எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
கடைசி படம் : உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகி விட்டதால், இனி மேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். இது உதயநிதியின் கடைசிபடம் என்பதால், இப்படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பை வைத்துள்ளனர். மாமன்னன் படம் பிரம்மாண்ட பொருட்செலவில் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கும் தயாராகி வருகிறது.


Click it and Unblock the Notifications











