கமல்ஹாசனை பாராட்டிய வைரமுத்து.. கமலும் குறைந்தவர் இல்லைனு நிரூபிச்சுட்டாரே.. வார்த்தை விளையாட்டு
சென்னை: நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராகவும் வலம் வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படமான தக் லைஃப் படம் சரியாக போகவில்லை. தற்போது தனது 235ஆவது படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் பாராளுமன்ற உரை குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பாராட்டி உள்ளார் கவிப்பேரரசு வைரமுத்து. தனது பாராட்டுகளுக்கு கமல்ஹாசன் அளித்த பதிலையும் பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில், " மாநிலங்களவை உறுப்பினர்
கமல்ஹாசன் அவர்களின்
நாடாளுமன்ற உரையை
ஆசையோடு வாசித்தேன்
SIR குறித்து
அரிய தரவுகளோடு
ஒரு சட்ட வாசகம்போல்
கட்டமைக்கப்பட்ட அந்தஉரை
அவரைப் பாராட்டப் பணித்தது
ஒரு
குறுஞ்செய்தி அனுப்பினேன்
"நாடாளுமன்ற உரை
நல்லுரை
நிகழ்கால உள்ளடக்கம்
நேர்த்தியான வாதம்
ஊளைச்சதையற்ற மொழி
எத்துறையிலும்
முத்திரை பதிப்பது
உங்கள் வாடிக்கை;
இதற்குக் கைதட்டும்
கோடிக் கை
வாழ்த்துகிறேன்"
சற்று நேரத்தில்
கமலும் எனக்கொரு
குறுஞ்செய்தி அனுப்பினார்

"தன் வலது கையால்
தமிழுக்கு வளம் சேர்த்தவர்
என்னை இடது தோளுடன்
இறுக அணைத்து
வாழ்த்துவதாக உணர்கிறேன்.
என் தோழருக்கு நன்றி"
நாடாளுமன்றத்திலும்
என் நண்பர்
நட்சத்திரம் தான்" என்று பதிவிட்டுள்ளார்.
அவரது இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் இருவரையும் பாராட்டி வருகிறார்கள். வைரமுத்துவின் எக்ஸ் பதிவுக்கு, " கவிப்பேரரசின் வாழ்த்தும் கலைஞானியின் பதில் வாழ்த்தும்,உயர் சிகரங்களின் கை குலுக்கல்" என்றும், மற்றொருவர், " உடையோடு பிறக்கவில்லை உணர்வோடு பிறந்து விட்டோம் வாழ்வின் தேவையை வாழ்ந்து பார்க்க வந்தோம் - நம்மவரில் கவிஞரின் வரிகள் நயம்பட உரைத்த நாடாளுமன்ற உரை அதை திறம்படு மொழியில் பாராட்டிய கவிஞர் இருவரும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய தமிழ்நாட்டின் செல்வங்கள் இருவரின் நட்பு நீடுழி வாழட்டும்" என்று மற்றொருவரும் பாராட்டி வருகிறார்கள்.
அதேபோல் சில தினங்களுக்கு முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைரமுத்துவின் வீட்டிற்குச் சென்று அவரைப் பார்த்து நலம் விசாரித்துள்ளார். அது தொடர்பாகவும் தனது எக்ஸ் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார் வைரமுத்து. அதில் அவர், " சூப்பர் ஸ்டார்
ரஜினிகாந்த் அவர்கள்
நேற்று எனது இல்லத்திற்கு
வருகை தந்தார்
'பாசமுள்ள மனிதனப்பா - நான்
மீசவச்ச குழந்தையப்பா'
என்ற வரிகளுக்கு
இப்போதும் அவர்தான்
இலக்கியமாக இலங்குகிறார்
வியப்புக்குரிய மனிதர்தான்
அடித்துக்கொண்டோடும்
அரசியல் வெள்ளம்,
சாய்த்துவிட்டோடும்
சமூகப் புயல் இரண்டையும்
அரைநூற்றாண்டாய்க் கடந்து
தன்னிடத்தை ஒருவர்
தக்கவைத்துக் கொள்வது
ஜாதகத்தால் ஆவதல்ல;
சாமர்த்தியத்தால் ஆவது

உணவு முறை
உடல் நிலை குறித்து
ஊடாடிய எங்கள் உரையாடல்
ஊர் சுற்றக் கிளம்பியது
எங்கள் நூறு நிமிட
உரையாடலை
'கிரீன் டீ' கூடக் கெடுக்கவில்லை
தமிழ்நாட்டின் நிகழ்கால
வெப்ப அரசியல் குறித்து
விவாதித்தோம்
ஒவ்வொரு தரவிலும்
அவருக்குள்ள
ஆழமும் தெளிவும் உண்மையும்
என் ஆர்வத்தைத் தூண்டின
வடநாட்டு அரசியல் குறித்தும்
அங்கு
நேரப்போவதாக நம்பப்படும்
ஒரு திருப்பம் குறித்தும்
அவர் சொன்னபொழுது
நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன்
அடுத்த
இரண்டு ஆண்டுகளுக்கான
அவரது கலைப்பயணத்தின்
திட்டங்களை விவரித்தார்
2027 ரஜினி ரசிகர்களுக்குக்
கொண்டாட்ட ஆண்டாக இருக்கும்;
குறித்துக்கொள்ளுங்கள்
அவரிடம்
முதிர்ச்சி தெரிகிறது;
முதுமை தெரியவில்லை
'இளமை இனிமேல் போகாது
முதுமை எனக்கு வாராது'
என் தமிழ்
பொய்யாகவில்லை" என்று பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











