Vijay Antony Daughter - ஒரு பூ கிளையிலேயே தூக்கிட்டு கொள்வது சோகம்.. விஜய் ஆண்டனி மகளுக்கு வைரமுத்து இரங்கல்
சென்னை: Vijay Antony Daughter (விஜய் ஆண்டனி மகள்) விஜய் ஆண்டனி மகள் உயிரிழப்புக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர் என பல முகங்களை கொண்ட விஜய் ஆண்டனிக்கு மீரா, லாரா என்ற இரண்டு மகள் இருந்தனர். இவர்களில் மூத்த மகளான மீரா 12ஆம் வகுப்பு படித்துவந்தார். அவர் கடந்த ஒரு வருடமாகவே மன உளைச்சலில் இருந்ததாகவும் அதற்காக சிகிச்சை எடுத்ததாகவும் கூறப்படுகிறது. சூழல் இப்படி இருக்க நேற்று அதிகாலை அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கதறிய விஜய் ஆண்டனி: விஜய் ஆண்டனி அனைவரையும் சமமாக மதிக்கக்கூடியவர். மேலும் யாரிடமும் ஈகோ இல்லாமல் பழகி தற்கொலைக்கு எதிராக தொடர்ந்து பேசியவர். ஆனால் அவரது மகளே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அவரை உடைந்து போக செய்திருக்கிறது. அவருக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை என பிரபலங்களும் ரசிகர்களும் கூறிவருகின்றனர்.
இறுதிச்சடங்கு: மீராவின் உடல் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டு பிறகு விஜய் ஆண்டனியின் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பிரபலங்களும், ரசிகர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி விஜய் ஆண்டனிக்கும், பாத்திமாவுக்கும் ஆறுதல் தெரிவித்தனர். நேற்று மாலையே இறுதிச்சடங்கு நடப்பதாக இருந்தது. ஆனால் கீழ்ப்பாக்கம் கல்லறையில் இடத்துக்கான அனுமதி கிடைக்க தாமதம் ஆனதால் இன்று இறுதிசடங்கு நடக்கும் என தெரிவிக்கப்பட்டது.
தேவாலயத்தில்: அதன்படி இன்று மீராவின் இறுதி ஊர்வலம் வீட்டிலிருந்து தேவாலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு கிறிஸ்தவ முறைப்படி மீராவுக்கு இறுதிச்சடங்கு நடந்தது. விஜய் ஆண்டனி உள்ளிட்ட குடும்பத்தினர் இடிந்து போய் நின்றிருந்தது அங்கிருந்தவர்களை கலங்க செய்தது. அதனையடுத்து கீழ்ப்பாக்கம் கல்லறைக்கு அவரது உடல் எடுத்து செல்லப்பட்டது.
வைரமுத்து இரங்கல்: இந்நிலையில் மீராவின் உயிரிழப்புக்கு கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "கொலை என்பது
மனிதன் மீது
மனிதன் காட்டும் எதிர்ப்பு
தற்கொலை என்பது
சமூகத்தின் மீது
மனிதன் காட்டும் எதிர்ப்பு
விஜய் ஆண்டனி
மகளின் தற்கொலை
சமூகத்தை எந்தப் புள்ளியில்
எதிர்க்கிறது என்பதைக்
கண்டறிந்து களைய வேண்டும்
ஒரு பூ
கிளையிலேயே
தூக்கிட்டுக் கொள்வது
எத்துணை பெரிய சோகம்
வருந்துகிறேன்
ஒரு குடும்பத்தின்
சோகத்தைப் பங்கிட்டு
என் தோளிலும்
ஏற்றிக்கொள்கிறேன்" என்று கவிதை வடிவில் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











