Vairamuthu - ஊனை உருக்கி ஒரு உலக இலக்கியம்.. வைரமுத்து வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு
சென்னை: Vairamuthu (வைரமுத்து) கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து கடந்த முப்பது மாதங்களாய் பேரிலக்கியம் ஒன்றை எழுதிக்கொண்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவின் பாடலாசிரியர்களில் வைரமுத்து தவிர்க்கவே முடியாதவர். கண்ணதாசன்,பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், வாலி ஆகியோர் வரிசையில் வைரமுத்துவும் ஒரு மிகப்பெரிய லெஜண்ட் ஆவார். பாரதிராஜா இயக்கிய நிழல்கள் படத்தின் அறிமுகமான வைரமுத்துவுக்கு தமிழ் சினிமா பாடல்களில் புதுக்கவிதையை நிறையவே புகுத்தியவர். தான் எழுதிய முதல் பாடலிலேயே வானம் எனக்கொரு போதி மரம் என புதுமையாக எழுதி இளையராஜாவின் மனதிலும், ரசிகர்களின் மனதிலும் தனது தடத்தை பதித்துவிட்டார்.
ராஜாவுடன் கூட்டணி: அந்தப் பாடலுக்கு பிறகு இளையராஜாவின் ஆஸ்தான பாடலாசிரியராகிவிட்டார் வைரமுத்து. அதிலும் பாரதிராஜா - இளையராஜா - வைரமுத்து கூட்டணி கோலிவுட்டில் மிகப்பெரிய மேஜிக்கை நிகழ்த்தியது. வைரமுத்துவும், இளையராஜாவும் இணைந்த முதல் மரியாதை, மண் வாசனை, கடலோரக் கவிதைகள், அலைகள் ஓய்வதில்லை, சிந்து பைரவி உள்ளிட்ட படங்களின் பாடல்கள் அனைத்துமே க்ளாசிக் ரகத்தை சேர்ந்தவை.

உடைந்து போன கூட்டணி: ஆனால் யார் கண் பட்டதோ இளையராஜா - வைரமுத்து கூட்டணி உடைந்துபோனது. அதற்கான காரணம் தெளிவாக தெரியாவிட்டாலும் இருவரையும் மீண்டும் இணைத்துவிட வேண்டுமென பலர் முயன்றனர். ஆனால் இன்றுவரை இருவரும் இணைந்து பணியாற்றவில்லை.
இதுகுறித்து சில வருடங்களுக்கு முன்னர் பேசியிருந்த வைரமுத்து, "நாங்கள் இருவரும் இணைந்து பழையபடி பாடல்களை கொடுத்தால் ரசிகர்களை புதுமையை எதிர்பார்ப்பார்கள்; தற்போதைய புதுமைப்படி பாடல்களை கொடுத்தால் இவர்களுடைய பழைய ஸ்டைல் எங்கே போயிற்று என கேட்பார்கள். எனவே இந்த சிக்கல் வராமல் இருப்பதற்கு நாங்கள் இணைந்து பணியாற்றாமல் இருப்பதுதான் நல்லது"என கூறியிருந்தார்.
ரஹ்மான் கூட்டணியும் உடைந்தது: இளையராஜாவுடனான கூட்டணி உடைந்த பிறகு ஏ.ஆர்.ரஹ்மானும், வைரமுத்துவும் இணைந்து பணியாற்றினர். இளையராஜா - வைரமுத்து கூட்டணி பாடல்கள் எப்படி க்ளாசிக்கோ அதேபோல் 90களில் ரஹ்மானும், வைரமுத்துவும் சேர்ந்த பல ஹிட் பாடல்களை கொடுத்து மாடர்ன் க்ளாசிக் கூட்டணியாக மாறினர். ஆனால் சில பிரச்னைகளால் வைரமுத்துவை ரஹ்மான் தவிர்க்க ஆரம்பித்திருக்கிறார்.
இலக்கியம்: இருப்பினும் வைரமுத்து மற்ற இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றிவருகிறார். சமீபத்தில்கூட தேவா இசையில் சிங்கப்பூர் டிவி நாடகம் ஒன்றுக்கு பாடல் எழுதியிருந்தார். இந்நிலையில் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், "உலகத் தமிழ் உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு. கடந்த முப்பது மாதங்களாக ஒரு பேரிலக்கியம் எழுதிக்கொண்டிருக்கிறேன். ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி படைத்துக்கொண்டிருக்கிறேன். உறுதிபட கூறுகிறேன் தமிழில் இது ஒரு உலக இலக்கியம்" என பதிவிட்டுள்ளார்.
பெருகும் எதிர்பார்ப்பு: வைரமுத்து பாடல்கள் மட்டுமின்றி கருவாச்சி காவியம், கள்ளிக்காட்டு இதிகாசம், மூன்றாம் உலகப்போர் உள்ளிட்ட நாவல்களையும், வில்லோடு வா நிலாவே உள்ளிட்ட சிறுகதை தொகுப்புகளையும் எழுதியிருக்கிறார். அவரது பாடல்கள் எப்படி ரசிக்கப்பட்டனவோ அதேபோல் அவர் எழுதிய புத்தகங்களுக்கும் வரவேற்பு இருக்கும். குறிப்பாக கள்ளிக்காட்டு இதிகாசமும், கருவாச்சி காவியமும் அவரது படைப்பில் வந்த இருபெரும் காப்பியங்கள். எனவே தற்போது அவர் எழுதிக்கொண்டிருக்கும் இலக்கியமும் நிச்சயம் தரமாக இருக்கும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











