நாதம் இருக்கு.. ஜீவன் இல்லையே.. ஜானகி மறைவுக்குக் கவிப்பேரரசு வைரமுத்து இரங்கல் கவிதை!
சென்னை: பழம்பெரும் பின்னணி பாடகி ஜானகி உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 88. ஜானகி அம்மாவிற்கு திடீரென நேற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, மைசூருவில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு திவிர சிகிச்சை அளித்த போதும், அது பலன் அளிக்காமல் அவரின் உயிர் பிரிந்தது. அவரது மறைவு ரசிகர்களையும் திரைத்துறையினரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஜானகியின் மறைவுக்கு கவிபேரரசு தனது எக்ஸ் தள பக்கத்தில் கவிதையில் இரங்கல் வெளியிட்டுள்ளார்.
அதில். கானக் குயிலே
காலமானாயா?
அரைநூற்றாண்டு
ஆறுதலே
அடங்கிவிட்டாயா?
'சிங்கார வேலனே தேவா'வில்
நாதஸ்வரத்தை வென்றுகாட்டிய
கீதவாணியே
முடிந்துவிட்டதா உன் மூச்சு?
தாய்மையாய் தமிழாய்
காதலாய் கருணையாய்
கண்ணீராய் புன்னகையாய்
எங்கள் வாழ்வோடு கலந்த
பாட்டரசி
உனக்கும் மரணமா?
'நாதம் என் ஜீவனே' என்றாயே
உன் நாதம் இருக்கிறது
ஜீவன் இல்லையே

சிவப்பு நிலாப்பொட்டு: சிரித்த முகமும்
சிவப்பு நிலாப் பொட்டும்
ஆடாமல் அசையாமல்
சித்திரம் பாடுவதுபோல்
செவ்வாய் அசைக்கும் அழகும்
கண்களை விட்டுக்
காணாமல் போகுமோ!
நீ
பாடமுடியாத பாடலென்று
எதுவும் இல்லை
உன் பாடல் கேளாமல்
இரவுகள் விடிவதில்லை
கண்ணதாசன் எழுதி
நீ பாடிய பல்லவி கொண்டே
புகழ்வணக்கம் செலுத்துகிறேன்
'தூக்கம் உன் கண்களைத்
தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில்
நிலவட்டுமே
அந்தத்
தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னைத்
தொடர்ந்திருப்பேன்
என்றும்
துணையிருப்பேன்'
வாழ்க நீ அம்மா என வைரமுத்து கவிஞர் கண்ணதாசன் வரிகளில் ஜானகி அம்மா பாடிய "தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே..." என்ற தாலாட்டுப் பாடலின் வரிகளைக் கொண்டே அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி உள்ளார். பாடகி ஜானகி வைரமுத்துவின் பாடல் வரியில், காதல் ஓவியம் திரைப்படத்தில் வரும் நாதம் என் ஜீவனே, ரோஜா பூ ஆடி வந்தது, ஜோடி படத்திற்காக காதல் கடிதம் தீட்டவே, எஜமான் படத்தில் ஒரு நாளும் உன்னை மறவாத என ஏராளமான ஹிட் பாடல்களை பாடி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications