எதுவும் கேட்பதில்லை.. அவர்களுக்கு நாகரிகம் இல்லையா?.. இளையராஜா,மணிரத்னத்தை தாக்கிய வைரமுத்து?
சென்னை: வைரமுத்து தமிழ் சினிமாவின் முக்கியமான பாடலாசிரியர்களில் ஒருவர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியிருக்கும் அவர் 7 தேசிய விருதுகளை சிறந்த பாடலாசிரியருக்காக வாங்கியிருக்கிறார். இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ் என பலர் இசையமைப்பாளர்களுக்கு பாடல்கள் எழுதியிருக்கும் அவர் இப்போதும் இளைய பாடலாசிரியர்களுக்கு போட்டியாக இருக்கிறார். இந்நிலையில் அவரது ட்வீட் ஒன்றை வைத்து ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்பிவருகிறார்கள்.
கோலிவுட்டின் பாடலாசிரியர்களில் தனித்துவமும், முக்கியத்துவமும் வாய்ந்தவர் வைரமுத்து. பாரதிராஜா இயக்கிய நிழல்கள் படத்தில் இது ஒரு பொன்மாலை பொழுது பாடல் எழுதி சினிமாவில் அறிமுகமானார். முதல் பாடலிலேயே வானம் எனக்கொரு போதி மரம் என்ற எழுதி இளையராஜா மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழர்களையும் கவர்ந்தவர். அந்தப் பாடலுக்கு பிறகு இளையராஜாவுடன் தொடர்ந்து பயணித்துக்கொண்டிருந்தார்.
செம மேஜிக் செய்த கூட்டணி: அவர்களது கூட்டணியில் உருவான பல பாடல்கள் இன்னமும் பலரால் ரசிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. முதல் மரியாதை, சிந்து பைரவி,மண்வாசனை, புன்னகை மன்னன் என அவர்கள் இணைந்த படங்களில் எல்லா பாடல்களும் மெகா ஹிட்டாகின. அவர்கள் இரண்டு பேரும் தமிழ் சினிமாவில் தோன்றிய ஒரு மேஜிக் கூட்டணி என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் சில காரணங்களால் அவர் பிரிந்துவிட்டார்கள். மீண்டும் அவர்களை சேர்த்து வைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் அத்தனையும் தோல்வியில்தான் முடிந்தன.
ரஹ்மான் - வைரமுத்து: ராஜாவின் கோட்டையிலிருந்து வெளியே வந்த வைரமுத்து அடுத்ததாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் எழுத தொடங்கினார். இளையராஜா இசையில் புதிய தமிழை பாடல்களுக்குள் கொண்டு வந்த அவர்; ரஹ்மான் இசையில் அதனை அடுத்த தளத்தில் எடுத்து சென்றார். அதிலும் ரஹ்மான் - வைரமுத்து - மணிரத்னம் கூட்டணியில் உருவான ரோஜா, பம்பாய், உயிரே, அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், ஓகே கண்மணி என பல படங்களின் பாடல்கள் அனைவரது ப்ளே லிஸ்ட்டிலும் இருப்பவை.

இங்கும் பிரிவுதான்: இந்தக் கூட்டணி தமிழ் சினிமாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் இடையில் சில சர்ச்சைகள் வைரமுத்துவை சுற்றி எழுந்தன. இதனால் இக்கூட்டணியில் விரிசல் விழுந்ததாக சொல்லப்படுகிறது. அதனால் பொன்னியின் செல்வன், சமீபத்தில் வெளியான தக் லைஃப் ஆகிய படங்களில் வைரமுத்துவை ரஹ்மானும், மணிரத்னமும் கமிட் செய்யவில்லை. அதேசமயம் வைரமுத்துவை அந்தப் படங்களில் எல்லாம் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்பதுதான் பெரும்பாலானோரின் கருத்து.
வைரமுத்து ட்வீட்: இந்நிலையில் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில், "என்னுடைய பல்லவிகள் பலவற்றைத் தமிழ்த் திரையுலகம் படத் தலைப்புகளாகப் பயன்படுத்தி இருக்கிறது அப்படி எடுத்தாண்டவர்கள் யாரும்என்னிடம் அனுமதி பெறவில்லை என்பதோடு மரியாதைக்குக்கூட ஒரு வார்த்தையும் கேட்டதில்லை.. ஒன்றா இரண்டா.. பொன்மாலைப் பொழுது, கண் சிவந்தால் மண் சிவக்கும், இளைய நிலா, ஊரத் தெரிஞ்சுகிட்டேன், பனிவிழும் மலர்வனம், வெள்ளைப் புறா ஒன்று, பூவே பூச்சூட வா, ஈரமான ரோஜாவே, நிலாவத்தான் கையில புடிச்சேன், மெளன ராகம், மின்சாரக் கண்ணா, கண்ணாளனே, என்னவளே, உயிரே, சண்டக்கோழி, பூவெல்லாம் கேட்டுப் பார், தென்மேற்குப் பருவக்காற்று, விண்ணைத் தாண்டி வருவாயா, நீதானே என் பொன் வசந்தம், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், தங்கமகன் இப்படி இன்னும் பல...
நாகரிகம் ஆகாதா?: சொல்லாமல் எடுத்துக் கொண்டதற்காக இவர்கள் யாரையும் நான் கடிந்து கொண்டதில்லை காணும் இடங்களில் கேட்டதுமில்லை செல்வம் பொதுவுடைமை ஆகாத சமூகத்தில் அறிவாவது பொதுவுடைமை ஆகிறதே என்று அகமகிழ்வேன் ஏன் என்னைக் கேட்காமல் செய்தீர்கள் என்று கேட்பது எனக்கு நாகரிகம் ஆகாது ஆனால் என்னை ஒருவார்த்தை கேட்டுவிட்டுச் செய்வது அவர்களின் நாகரிகம் ஆகாதா? என கேள்வி எழுப்பியிருக்கிறார்.
ரசிகர்கள் கேள்வி: அவரது இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. மேலும், இளையராஜாவின் பாடல்கள் படங்களில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் தன்னிடம் அனுமதி கேட்பதில்லை என்று கூறி சட்ட ரீதியாக ராஜா எதிர்த்துவருகிறார். அது ஆதரவையும், விமர்சனத்தையும் ஒருசேர கிளப்பியிருக்கின்றன. அதேபோல் வைரமுத்து போட்டிருக்கும் ட்வீட்டில் மணிரத்னம் இயக்கிய மௌன ராகம், உயிரே படங்களும் இருக்கின்றன.
இப்போது வைரமுத்துவின் இந்த ட்வீட்டை பார்த்த ரசிகர்களோ, 'தன்னை ஒதுக்கிய இளையராஜா, மணிரதன்ம் ஆகியோரை மறைமுகமாக இந்த ட்வீட்டின் தாக்கியிருக்கிறாரா. தக் லைஃப் வெளியான சமயத்தில் ஏன் இப்படி ஒரு ட்வீட்டை போட வேண்டும்? என்று கேள்விகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











