Vairamuthu in Bala's Vanangaan - பாலாவுக்கு ஆயுதம் கொடுக்கும் வைரமுத்து - என்ன தெரியுமா?
சென்னை: Vairamuthu in Bala's Vanangaan (பாலாவின் வணங்கான் படத்தில் வைரமுத்து) பாலா இயக்கும் வணங்கான் படத்தில் வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். அதுகுறித்து அவர் பதிவு செய்திருக்கும் ட்வீட் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
இயக்குநர் பாலா தனது தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தித்த பிரச்னைகளை அடுத்து சூர்யாவை வைத்து வணங்கான் படத்தை ஆரம்பித்தார். மீனவர் கதாபாத்திரத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது. அதற்கான ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடந்துவந்தது. ஆனால் சூர்யாவுக்கும், பாலாவுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் படத்திலிருந்து சூர்யா விலகுவதாக அறிவித்தார். அதனையடுத்து ஏற்கனவே ஹீரோயினாக கமிட்டாகியிருந்த கீர்த்தி ஷெட்டியும் விலகினார்.

வணங்கான் அருண் விஜய்: சூர்யா படத்திலிருந்து விலகியதை அடுத்து வணங்கான் படம் திட்டமிட்டபடி நடக்குமா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்தது. மேலும் பாலாவின் கேரியர் அவ்வளவுதான் எனவும் சிலர் கூறினர். ஆனால் வணங்கான் படத்தை அருண் விஜய்யை வைத்து ஆரம்பித்தார் பாலா. ஹீரோயினாக ரோஷினி பிரகாஷ் என்பவர் நடித்துவருகிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். பாலாவே தயாரிக்கவும் செய்கிறார்.
முதல் ஷெட்யூல் ஓவர்: ஏற்கனவே விக்ரம் மகனை வைத்து இயக்கிய வர்மா படம் சந்தித்த பிரச்னை மற்றும் சூர்யா விலகியது என பாலாவுக்கு அடி மேல் அடி விழுந்தாலும் மீண்டும் அவர் பழைய பாலாவாக வந்துவிட வேண்டும் என்ற கருத்தே திரை ஆர்வலர்கள் மத்தியில் இருந்தது. எந்த பிரச்னையையும் அசால்ட்டாக டீல் செய்யும் பாலா வணங்கான் படத்தின் முதல் ஷெட்யூலை அருண் விஜய்யை வைத்து சத்தமே இல்லாமல் முடித்தார்.

இரண்டாவது ஷெட்யூல்: இதனையடுத்து படத்தின் இரண்டாவது ஷெட்யூல் விரைவில் தொடங்கவிருப்பதாகவும்; இந்தப் படத்தின் மூலம் பாலா தரமான கம்பேக் கொடுப்பார் எனவும் அவரது ரசிகர்கள் நம்பிக்கொண்டிருக்கின்றனர். மேலும் அருண் விஜய்க்கும் இந்தப் படம் மிகப்பெரிய பெயரை பெற்றுத்தரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வணங்கான் படத்துக்கு மிகப்பெரிய ஆவல் ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது.

பாடல்கள் எழுதும் வைரமுத்து: இந்நிலையில் வணங்கான் படத்தில் வைரமுத்து பாடல்கள் எழுதவிருக்கிறார். இதுகுறித்து அவர் பாலாவுடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "பாலா! தேடி வந்தாய்; திகைக்குமொரு கதை சொன்னாய்; இதிலும் வெல்வாய் உடம்பில் தினவும் உள்ளத்தில் கனவும் உள்ளவனைக் கைவிடாது கலை ஐந்து பாட்டிலும் ஐந்தமிழுக்கு வழிவைத்தாய் தீராத கங்குகளால் பழுத்துக்கிடக்கிறது என் பட்டறை தோற்காத ஆயுதங்கள் வடித்துக் கொடுப்பேன் போய் வா என பதிவிட்டிருக்கிறார்.
வைரமுத்து எடுத்திருக்கும் சபதம்: வைரமுத்துவின் இந்த ட்வீட் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. மேலும், சில பிரச்னைகளால் மணிரத்னம் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியிலிருந்து வைரமுத்துவுக்கு கல்தா கொடுக்கப்பட்டது. எனவே வைரமுத்துவும் ஒரு கம்பேக்குக்காக காத்திருக்கிறார்.
பாலா படத்தின் மூலம் அதனை அவர் நிறைவேற்றுவார். அதை குறிக்கும் விதமாகத்தான் பட்டறை பழுத்துக்கிடக்கிறது; தோற்காத ஆயுதங்கள் கொடுப்பேன் என வைரமுத்து கூறி நிச்சயம் வென்றே தீருவேன் என சபதம் எடுத்திருக்கிறார். அதுமட்டுமின்றி தன்னை ஒதுக்கியவர்களையும் இந்த பதிவு மூலம் சாடியிருக்கிறார் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











