வைரமுத்துவுக்கு ஞானபீடம்.. விமர்சித்தவர்களுக்கு தரமான பதிலடி கொடுத்த இயக்குநர்.. செம தெளிவா சொல்லிருக்காரு

சென்னை: கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்துவுக்கு சமீபத்தில் ஞானபீட விருது வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு தமிழ்நாட்டை சேர்ந்தவருக்கு இந்த விருதானது கொடுக்கப்பட்டுள்ளது. பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தாலும்; ஜெயமோகன் உள்ளிட்டோர் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்கள். வைரமுத்துவுக்கு இந்த விருதை கொடுத்து தமிழ் இலக்கியத்துக்கு அவமானத்தை ஏற்படுத்திவிட்டார்கள் என்றெல்லாம் கொதித்திருந்தார் ஜெயமோகன். இந்நிலையில் பிரபல இயக்குநர் சீனு ராமசாமி; வைரமுத்துவை விமர்சித்தவர்களுக்கு தரமான பதிலடியை கொடுத்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், "அனைவருக்கும் அன்பான வணக்கம், பேசுவது சீனு ராமசாமி. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஞானபீட விருது குறித்து, ஒரு தீவிர இலக்கிய வாசகனாக எனது பார்வைகளை இங்கே முன்வைக்கிறேன். இதோடு முரண்படுபவர்கள் தாராளமாகத் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம். எந்தவிதமான தனிப்பட்ட தாக்குதல்களும் அவதூறுகளும் இன்றி, கருத்து ரீதியாக ஒரு விவாதத்தை நாம் முன்னெடுக்கலாம்.

Vairamuthu Jnanpith Award Row Seenu Ramasamy Responds to Jeyamohan Criticism
Photo Credit:

தர்க்கம் நீட்டிக்கப்படுகிறது: ஏனென்றால், இன்று அசுர வளர்ச்சி அடைந்திருக்கும் சமூக வலைத்தளம் என்பது ஒரு சிங்கத்திற்குச் சிறுவன் கோழி இறைச்சியைத் தருவது போன்றது எதிர்பாராத ஒரு கணத்தில் அது கைகளைக் கவ்விக்கொள்ளும் ஆபத்துடையது. மகா கலைஞன் ஜெயகாந்தனுக்கு ஞானபீடம் வழங்கப்பட்டபோது, அவர் 'ஜெய ஜெய சங்கர' எனத் துதி பாடிய பிறகுதான் அந்த அங்கீகாரம் அவரைத் தேடி வந்ததாக ஒரு விமர்சனம் எழுந்தது. இன்று கவிஞர் வைரமுத்து விஷயத்திலும் அதே தர்க்கம் நீட்டிக்கப்படுகிறது.

மகத்தான அடையாளம்: 'ஆண்டாள் அம்மையின் 'சர்ச்சையில் சிக்கியவர் என்கிற பிம்பம் ஒருபுறம் இருக்க, சனாதனக் கொள்கைகளைத் தீவிரமாகப் பின்பற்றும் ஒரு அதிகார மையத்தின் கீழ் இயங்கும் அரசாங்கம், ஒரு சனாதன எதிர்ப்பாளருக்கு எப்படி உயரிய விருதை வழங்க அனுமதிக்கும் என்ற கேள்வி எழுகிறது. தொடர்ந்து மேடைகளில் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரை உயர்த்திப் பிடிக்கும் ஒரு படைப்பாளிக்கு, சித்தாந்த ரீதியாக முரண்பட்ட ஒரு அதிகார மையம் வழிவிடுகிறது என்றால், அதுவே அவரது படைப்பாற்றல் அந்தச் சித்தாந்தச் சுவர்களை உடைத்துவிட்டதன் மகத்தான அடையாளம்.

ஜெயகாந்தனின் தகுதி: இது 'அரசாங்கத்தின் உபயம்' அல்ல வைரமுத்து எனும் கலைஞனின் பல தசாப்த கால 'நிஜ உழைப்புக்குக்' கிடைத்த வெற்றி. உயர்மட்டக் குழு நினைத்தாலும் 15 வல்லுநர்கள் கொண்ட நடுவர் குழுவின் முடிவை மாற்றிவிட முடியாது. ஜெயகாந்தனின் தகுதியை எப்படிக் காலம் நிரூபித்ததோ, அப்படியே வைரமுத்துவின் பங்களிப்பும் காலத்தால் நிலைத்து நிற்கும். நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளும், மரபு சார்ந்த இலக்கியவாதிகளும் ஒரு படைப்பின் 'உள்முகத் தன்மை' குறித்தே அதிகம் கவலைப்படுகிறார்கள். வைரமுத்துவின் பாடல்களில் இருக்கும் கவித்துவ மேன்மையை அங்கீகரிக்கும் அதே வேளையில், அவரது தனித்துவமான கவிதைகளில் ஒருவிதமான 'சிவாஜி நடிப்பு' (Theatricality) இருப்பதாக எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் என்னிடம் ஒருமுறை குறிப்பிட்டார்.

Also Read
திருமணத்துக்கு பின் சங்கீதா அப்படியே விட்டுட்டாங்க.. மனைவி பற்றி விஜய் ஓபன்.. என்ன சொன்னாரு தெரியுமா?
திருமணத்துக்கு பின் சங்கீதா அப்படியே விட்டுட்டாங்க.. மனைவி பற்றி விஜய் ஓபன்.. என்ன சொன்னாரு தெரியுமா?

இலக்கிய தேடல்: நவீன இலக்கியக் கோட்பாடுகளின்படி பார்த்தால் இது ஒரு விமர்சனமாகத் தெரியலாம். ஆனால், நவீன இலக்கியத்தின் தத்துவார்த்தப் பார்வையில் ஒரு படைப்பாளியின் மொழி வெளிப்பாட்டை வெறும் 'நடிப்பு' என்று சுருக்குவது ஒரு நுட்பமான தர்க்கப் பிழை. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பு எப்படி ஒரு பெரும் உணர்ச்சியைப் பாமரனுக்கும் புரியும்படி கடத்தியதோ, அப்படியே வைரமுத்துவின் கவித்துவமும் மொழியின் கம்பீரத்தை வெகுமக்களிடம் கொண்டு சேர்த்தது. இது மொழியின் வழியே நிகழ்த்தப்படும் ஒரு பிரகடனம்; ஒரு குறிப்பிட்ட 'கூற்று' (Statement) முறையே ஒழிய, இது நடிப்பு அல்ல. உதாரணமாக, மகாகவி பாரதியின் மறைவு குறித்து அவர் பாடிய "இது புலிகளை மதிக்காத புழுக்களின் தேசமடா... உணரத் தெரியாத ஊமைகளின் பூமியடா..." போன்ற வரிகள் அன்று உண்டாக்கிய இலக்கியத் தேடலை யாராலும் மறக்க முடியாது.

அது ஒரு 'கூற்றாக' இருக்கலாம், ஆனால் அது கிளப்பிய உணர்ச்சி அலைகள் சாதாரண மனிதர்களையும் தமிழின் பால் ஈர்த்து வந்தன. எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் நண்பர் பவா செல்லத்துரை போன்ற நவீன கதைசொல்லிகள் வலியுறுத்தும் 'கதைசொல்லியின் அறம்' என்பது வாசகனின் அகத்தோடு நிகழும் உரையாடல். தனது உரைகளில் அடிக்கடி குறிப்பிடுவது போல, ஒரு படைப்பு வாசிக்கப்படும்போதோ அல்லது கேட்கப்படும்போதோ ஒரு மனிதனின் ஈரமான இதயத்தில் எத்தகைய அதிர்வை உருவாக்குகிறது என்பதே ஆகச் சிறந்த அளவுகோல்.

வைரமுத்துவின் "ஆயிரம் தான் கதை சொன்னேன்..." என்று தொடங்கும் தாயைப் பற்றிய கவிதை, வெறும் அலங்காரச் சொற்களின் கோர்வையல்ல. அது ஒரு மகனின் அகவயமான உண்மையை மொழியின் உச்சத்தில் நின்று பிரகடனம் செய்யும் அறம்.இத்தகைய ஆவேசமான மொழிப் பிரயோகத்தை 'நடிப்பு' என்று சுருக்குவது, படைப்பாளியின் ஆன்மாவையே நிராகரிப்பதாகும்.

இலக்கியத்தின் முன் வாசல் திரையிசைப் பாடல்கள் என்றாலே அவை வெறும் 'கமர்சியல்' ரகம் என்ற ஒரு பொதுவானப் பார்வை உண்டு. மலிவான ரகங்கள் அங்கும் இருக்கலாம். ஆனால், பெரும்பான்மையான பாடல்கள் உன்னதமான இலக்கியத்தன்மை கொண்டவையே.
வளரும் நாடான தமிழ்நாட்டில், கண்ணதாசன், பட்டுக்கோட்டை, வாலி, வைரமுத்து அதன் பிறகு வந்த பாடலாசிரியர்களின் பங்களிப்பு என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல அது ஒரு சமூகத்தின் மொழிக் கல்வி.கதாபாத்திரங்களின் நியாயங்களைப் பேசவும், கதையின் ஆன்மாவை வெளிப்படுத்தவுமே பாடல்கள் எழுதப்படுகின்றன.

க.மோகன ரெங்கனோ அல்லது எம் டி முத்துக்குமாரசாமியோ இருவரில் ஒருவர் தமிழில் மொழி பெயர்த்து சமீபத்தில் நான் வாசித்த ஒரு கவிதையில் மேற்கத்திய கவிஞர் ஒருவர் சொன்னது போல, "தனக்கு அளிக்கப்பட்ட தாள்களையாவது ஒருவன் மேம்படுத்த வேண்டும்". தனக்குக் கிடைத்த வாய்ப்புகளில், திரையிசை எனும் அந்தத் தாளில் தன் கவித்துவத்தால் அழியாத இலக்கிய ஓவியங்களைத் தீட்டினார் வைரமுத்து. பேருந்துக்குப் பயணச் சீட்டு வாங்கக் காசு இல்லாத நாட்களில், ஆற்றைக் கடக்க முடியாமல் கரையில் நின்று கொண்டிருந்த ஒரு சிறுவனுக்கு அவர் எழுதிய "ஆறு கடந்தால் ஊரு வருமே..." என்ற திரையிசை வரி எவ்வளவு பெரிய இலக்கிய ஆறுதல் தெரியுமா? அது வெறும் வார்த்தை அல்ல வாழ்வின் மீதான நம்பிக்கை.

ஆற்றைக் கடக்க முடியாமல் தவித்த அந்தச் சிறுவனுக்கு அந்த ஒரு வரி கொடுத்த இலக்கிய இன்பம் ஈடு இணையற்றது. ஒரு காதல் தோல்விக்கு, ஒரு மனிதனின் வெற்றிக்கு, ஒரு நாளின் ஊக்கத்திற்கு இந்தப் பாடல்கள்தாமே இன்றும் பெரும் துணையாக நிற்கின்றன வைரமுத்து அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த விருது என்பது, 90 சதவீதம் அவரது திரையிசைப் பாடல்களில் இழையோடிய கவித்துவத்திற்கும், 10 சதவீதம் அவரது கவிதைத் தொகுப்புகளுக்குமே வழங்கப்பட்டுள்ளது என்பது விருதுக் குழுவின் அறிக்கையிலேயே தெரிகிறது.

"என் மேல் விழுந்த மழைத்துளியே... இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?" என்ற ஒரு வரியைச் சிந்திக்கும் சாதாரணக் குழந்தையின் மனதிலும் நிகழும் ஞானத் திறப்பை, விமர்சிப்பவர்கள் உணரத் தவறிவிடுகிறார்கள். அரசியல் தடைகளைத் தவிடு பொடியாக்கிவிட்டு, அவர் முன்வைத்த அந்த 5000 பாடல்களின் இந்தி மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புகள், 'கவிராஜன் கதை' போன்றவை ஒரு மேஜையின் மீது சாட்சியங்களாக வைக்கப்பட்டபோது, எந்த அதிகாரமும் அந்தத் தகுதியை நிராகரிக்க முடியவில்லை.

வைரமுத்துவின் ஐயாயிரம் பாடல்களை இரண்டு மொழிகளில் மொழிபெயர்த்து மேஜையில் வைத்தாலே, அது சர்வதேச விருதுகளுக்கே தகுதியான ஒரு 'சட்ட ரீதியான சாட்சியமாக' (Legal Evidence) மாறிவிடுகிறது. அண்டை மாநிலத்தவர் நம் இலக்கியத்தைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று வருந்துவதற்கு ஒன்றுமில்லை. அவர்களும் அந்த 'முன் வாசல்' வழியாகவே வரட்டும்; அப்போதுதான் தமிழின் வீச்சு அவர்களுக்குப் புரியும்.

இலக்கியப் பயணம் என்பது ஒரு தனிநபரின் அகத்தேடல் மட்டுமல்ல அது ஒரு சமூகத்தின் கூட்டு மனசாட்சி வளர்ந்து வரும் நீண்ட நெடிய பாதை. இன்று நவீன இலக்கியத்தின் தீவிரப் பக்கங்களைப் பேசும் பலரும், நேரடியாகக் கா.நா.சு-விடமோ அல்லது சுந்தர ராமசாமியின் மடியிலோ வந்து அமர்ந்து விடவில்லை என்பதுதான் நிதர்சனம். கவிஞர் வைரமுத்துவின் கவிதைகளும், திரையிசைப் பாடல்களும்தான் எங்களைப் போன்ற பலருக்கு இலக்கியத்தின் 'முன் வாசல்'.

அந்தத் தொடக்கப் புள்ளி இல்லையென்றால், பல வாசகர்கள் இலக்கியத் தடாகத்திற்குள்ளேயே வந்திருக்க மாட்டார்கள். ஒரு மாளிகைக்குள் குடியேறிய பிறகு, அதன் நுழைவாயிலை இடித்துத் தள்ளுவது அழகியல் அறமல்ல அது நம்முடைய ரசனையின் தொடக்கத்தையே நாம் மறுப்பதற்குச் சமம். ஞானத்தின் அடையாளமான சரஸ்வதி (வாக்தேவி) சிலையை ஒரு நாத்திகப் படைப்பாளி ஞானபீடப் பரிசாகப் பெறுவது என்பது முரண் அல்ல. அவர் நாத்திகராக இருந்தாலும், இந்த பிரபஞ்சத்தின் நிலா, சூரியன் என இயற்கையை ஆராதிக்கும் ஒரு கவிஞனுக்குக் காலம் அளித்த, வடமாநிலத்தவரும் ஏற்றுக் கொண்ட ஆகப்பெரும் பரிசு இது.

இது ஒரு படைப்பாளியின் சித்தாந்தத்தைக் கடந்து, அவரது உழைப்பைத் தேடி வந்த அங்கீகாரம். உழைப்பிற்கானப் பரிசைக் காலம் ஒருபோதும் மறுப்பதில்லை. இன்று குரல் தரும் சக படைப்பாளர்களே யாரெல்லாம் இந்த விருது பெற்றால் தமிழ் மேன்மையுறும் என்று நீங்கள் கருதுகிறீர்களோ, அதற்காகத் தொடர்ந்து செயல்படுங்கள். ஞானபீடத்தின் விதிமுறைகளைத் துல்லியமாக அறிந்து, படைப்புகளையும் படைப்பாளர்களையும் எப்படிப் பரிந்துரைக்க வேண்டும் என்கிற நடைமுறைகளை முறையாகப் புரிந்துகொண்டு, தகுதியானவர்களின் பெயர்களைத் திடமாக முன்மொழியுங்கள்.

முறையான உழைப்பும் துல்லியமான பரிந்துரையும் இருந்தால், உயரிய விருதுகள் தமிழைத் தேடி வந்து கொண்டே இருக்கும். பிறர் விருது பெறுவதற்காக நீங்கள் செய்யும் அந்தப் பரிந்துரையும் ஒருவகையில் மேன்மையான அறம் அல்லவா? இன்னும் பல இலக்கியப் பரிசுகள் இம் மொழிக்கும், தமிழ் நவீனத்துக்கும், தமிழ் எழுத்துக்கும் பாடுபடுபவர்களைத் தேடிச் சென்று உலக அளவில் வழங்கிட வேண்டுமென்று நான் உளமார வேண்டுகிறேன். இப்பொழுது உதாரணமாக ஒரு பட்டியல் தருகிறேன் எவ்வகை விருதுக்கும் அவர்கள் தகுதியானவர்கள். இந்திரா பார்த்தசாரதி, அ.முத்துலிங்கம் , சிற்பி பாலசுப்பிரமணியம், சாரு நிவேதிதா, வைரமுத்து, பொன்னீலன், விக்கிரமாதித்தன், மு. மேத்தா, அம்பை, மாலன், வண்ணநிலவன் இப்படி என் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது ஆகவே இந்த பட்டியலை பூர்த்தி செய்வதற்கு உங்கள் உதவி தேவை அவற்றை எனக்கு கமெண்டில் போடவும்" என குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X