பாரதிராஜாவை மருத்துவமனையில் சந்தித்த வைரமுத்து.. மகா கலைஞன் மீண்டு வருவார் என ட்விட்டரில் பதிவு!
சென்னை: இயக்குநர் பாரதிராஜாவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Recommended Video
இயக்குநர் பாரதிராஜாவை பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்துள்ளார்.
அதுதொடர்பான வைரமுத்துவின் ட்விட்டர் பதிவு ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது.

பாரதிராஜாவின் 80வது பிறந்தநாள்
1942ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி தேனியில் உள்ள அல்லிநகரத்தில் பிறந்தவர் பாரதிராஜா. 16 வயதினிலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா சிவாஜி, கமல், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கி உள்ளார். 80வது பிறந்தநாளை கூட நேற்று கொண்டாட முடியாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் பாரதிராஜா.

மருத்துவமனையில் பாரதிராஜா
தமிழ் சினிமாவின் தலை சிறந்த இயக்குநரும் நடிகருமான பாரதிராஜா இந்த வயதிலும் தொடர்ந்து ஓயாமல் உழைத்து வருகிறார். திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தி வரும் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் அவருக்கு தாத்தாவாக நடித்து காமெடியில் கலக்கிய பாரதிராஜாவுக்கு வயது மூப்பின் காரணமாக லேசான உடல் உபாதைகள் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாரதிராஜாவை பார்த்த வைரமுத்து
பாரதிராஜாவின் படங்களில் இளையராஜாவின் இசையில் ஏகப்பட்ட சூப்பர் ஹிட் பாடல்களை எழுதிய வைரமுத்து பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற தகவல் அறிந்ததும் அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். அது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மகா கலைஞன் மீண்டு வருவார்
"பாரதிராஜா
மருத்துவமனையில்
பாரதிராஜாவைப் பார்த்தேன்
நலிந்த நிலையிலும்
நகைச்சுவை தீரவில்லை
சின்னச் சின்னப்
பின்னடைவுகளைச் சீர்செய்ய
சுத்த மருத்துவர்கள்
சூழ நிற்கிறார்கள்
அல்லி நகரத்தை
டில்லி நகரத்திற்கு
அழைத்துச் சென்ற
மகா கலைஞன்
விரைவில்
மீண்டு வருவார்
கலையுலகை
ஆண்டு வருவார்" என இயக்குநர் பாரதிராஜாவை மருத்துவமனையில் சந்தித்த நிகழ்வை கவிதையாகவே எழுதி விட்டார் வைரமுத்து. அவரது ட்வீட்டை ரசிகர்கள் அதிகளவு ஷேர் செய்து வருகின்றனர். இயக்குநர் பாரதிராஜா விரைவில் குணமடைந்து வீடு திரும்ப ரசிகர்களும் பிரபலங்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











